வாழ்வின் திறவுகோல் - மரணம்!

இப்போதெல்லாம் திருமண வீடுகளுக்குச் செல்வதிலும், பிறந்தநாள் கொண்டாட்டங்கள் போன்றவற்றிலும் அதிக ஈடுபாடு இல்லை. திருமண வீடுகளும் அரங்கங்களும் போலியான இன்பவியல் நாடகங்களை நடத்திக்கொண்டிருக்கின்றன என்பது மெல்ல புரிய ஆரம்பித்திருக்கிறது.  கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிரென்று நடத்தப்படும் திருமணங்கள் மனித வாழ்வின் சந்தோஷத்தின் சாவியாக நம்பப்படுகிறது. ஆனால் உண்மையில் அதற்கு தலைகீழான நிகழ்வுகள் தான் அரங்கேறுகின்றன. திருமண வீடு, பிறந்தநாள், சடங்கு என்றாலே புன்னகையோடும், மன நிறைவோடும் மகிழ்ச்சியோடும் இருக்கவேண்டுமென நமக்கு கட்டளையிடப்பட்டிருக்கிறது. கடன் வாங்கி பெண்ணுக்குத் திருமணம் செய்யும் அப்பாவும், குறை சொல்லி நிகழ்வில் கலந்துகொள்ளும் உறவினர்களும் வலுக்கட்டாயமாக தாமே முன்வந்து மகிழ்ச்சியாக இருக்கும் மன நிலையை உருவாக்கிக்கொள்கின்றனர். அல்லது மகிழ்ச்சியாக இருப்பதுபோல் பாவனை செய்கின்றனர். அதே நேரத்தில் ஒரு மரணம் நிகழ்ந்த வீட்டை பாருங்கள். அங்கே சோகமும், அழுகுரலும், ஆர்ப்பாட்டமும் நிறைந்திருந்தாலும் அவற்றில் போலித்தனம் தென்படுவதில்லை. உண்மை மட்டுமே நிர்வாணமாய் நிற்கிறது. எதிரியே இறந்திருந்தாலும் கல்லுக்குள் ஈரம் என்பதுபோல கண்ணீர் வீடுவோர் ஆயிரம். 



சமீபத்தில் எங்கள் ஊரில் ஒரு எழவு வீட்டிற்குச் சென்றிருந்தேன். சாத்திரப்புக்கு வீட்டிலிருந்து ஒருவர் செல்லவேண்டும் என்பதற்காக என் அப்பா சென்றுவிட்டார். இருப்பினும் அங்கு போகவேண்டுமென தோன்றியது. இறப்பு என்பது ஒரு மனிதனை கடைசியாக காணக்கிடைக்கும் வாய்ப்பு அல்லவா? நாம் எழவு வீட்டிற்குச் செல்லவேண்டுமென்பதற்காக யாரையும் சாகச் சொல்ல முடியாது. இறந்தவரின் வீட்டிற்குச் சென்று நீண்ட நாள் ஆகியிருந்ததனால், அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவேண்டுமென நினைத்தேன். வழக்கம்போல ஒரு அமைதி நிலவியது. இறந்துபோன பெண்மணிக்கு எண்பது வயதுக்கு மேலிருக்கும். ஆண்டு அனுபவித்துவிட்டுப் போன கட்டை என்பதால் பெரிதாக ஆர்ப்பாட்டமில்லை. ஐஸ்பாக்சில் வைக்கப்பட்டிருந்த உடலைச் சுற்றி ஐந்தாறு பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள். முதல் நாள் இரவிலிருந்து அழுததற்கான அறிகுறியாய் அதில் சிலரின் கண்கள் வற்றியிருந்தன. சற்று நேரம் அந்த உடலை உற்றுப் பார்த்துவிட்டு வந்தமர்ந்தேன். அப்போது முதன் முதலில் நான் பார்த்த எழவு வீடு பற்றிய நினைவலைகள் எழ ஆரம்பித்தன. எனக்கு வினா தெரிந்ததிலிருந்து நான் பார்த்தது என்றால், என் வீட்டுக்கு பக்கத்து வீட்டிலிருந்த பெரியப்பா வீட்டு ஆத்தா செத்ததுதான். நான்கு அல்லது ஐந்து வயதிருக்கும். ’சின்னக்கெழவி செத்துபோச்சு’ சொன்னதும், என் அம்மா அழுதுகொண்டு ஓடினாள். நான் பயத்தில் அம்மாவின் சேலையைப் பிடித்தபடியே நின்று கொண்டிருந்தேன். மற்றபடி எதுவும் நினைவில் இல்லை. 

அதன்பிறகு பள்ளி நண்பன் ஒருவனை இழக்க நேர்ந்தது. அவன்பெயர் சக்திவேல். நான் ஆறாம் வகுப்பு படித்துகொண்டிருந்தபோது வீட்டில் பிரச்சனை என்பதால் தூக்கில் தொங்கி இறந்துபோனான். அவன் செத்துவிட்டான் என்றதும் எனக்கு எதுவும் புரியவில்லை. நாங்கள் இருவரும் பனங்கருக்கை வெட்டி அதை வைத்து லாவகமாக சைக்கிள் டயரை ஓட்டியிருக்கிறோம். பலமுறை போட்டி போட்டு அவன் வெற்றிபெறுவான். என்னை விட நன்றாக டயர் ஓட்டுவான். மூட்டாங்கச்சலில் ஆட்டுக்கு புல்லறித்துக்கொண்டிருக்கும் தாத்தாவிடம் வம்பு செய்து  திட்டுவாங்குவான். அதில் அவனுக்கு கொள்ளை ஆசை. குறிப்பாக அந்த தாத்தா ஓதைக் கொட்டையுடன் குந்திகிட்டு உக்காந்து இருக்கும்போது, என்ன தாத்தா வேட்டிகுள்ள பனங்காய வச்சிருக்கீங்க என்று கேட்டுவிட்டு ஓடியாந்துவிடுவான். அதனால் ஆத்திரமடைந்து அவனை திட்டிக்கொண்டே இருப்பார். வறுமையின் காரணமாக கிடைத்த வேலையெல்லாம் செய்துகொண்டிருந்தான். சாராயம் விற்கும் வேலை செய்தான். பனங்காட்டு கிரவுண்டில் எங்களுடன்  கிரிக்கெட் விளையாடும்போது வரப்பின் ஓரத்தில் சாராய பாக்கெட்டுக்கள் நிறைந்த நரம்புப் பையை வைத்து விற்பனை செய்வான்.ஒருமுறை கைலியுடன் மப்டியில் இருந்த இரண்டு போலீஸ்க்காரர்கள் சாராயம் வாங்குவதுபோல் வந்து அவனைப் பிடித்துவிட்டனர். தோளில் போட்டிருந்த சிவப்பு துண்டால் அவன் கையைக் கட்டி இழுத்துச் சென்றனர். நாங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே நின்றோம். அவன் இறந்துவிட்டான் என்ற செய்தி அதிர்ச்சியைத் தந்தது. நான் போகவில்லை. ஏனோ அழுகையும் வரவில்லை. ஒருமுறை என் வீட்டிற்கு வந்தவன் தாத்தாவிடம் இளநி வேண்டுமெனக் கேட்டான். என் தாத்தா இளநியெல்லாம் குடுக்க முடியாது… ஓடுறா என்ற அதட்டியதும் பயந்து ஓடிவிட்டான். அடுத்த சில தினங்களில் அவன் இறந்தபிறகு தாத்தா அவனுக்கு இளநி கொடுத்திருக்கலாமே எனத் தோன்றியது. அவ்வளவுதான்.

என்னைச் சுற்றி நிகழ்ந்த மரணங்களில் சில வியப்பில் ஆழ்த்தியிருக்கின்றன. பல கேள்விகளை என்னுள் விதைத்துச் சென்றிருக்கின்றன. அப்படியொன்றுதான் நண்பன் வெற்றியுடைய தம்பி மரணம். நான் கல்லூரிப் படிப்பை முடித்து சென்னையில் ஒரு தனியார் ஹோட்டலில் வேலையில் இருந்தபோது அது நிகழ்ந்தது. அவனும் தூக்கில் தொங்கி இறந்திருந்தான். ஆனால் யாரோ சிலருடன் ஏற்பட்ட மோதலில் அவனை கொலை செய்து, தூக்கில் தொங்கவிட்டதாகவும் சொன்னார்கள். தகவல் அறிந்ததும் என்னால் போகமுடியவில்லை. பதினாறாம் நாள் காரியத்திற்குதான் சென்றேன். கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை செல்லும்போது ஒருவித பயமும், அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்பும் எனை ஆக்கிரமித்திருந்தது. தினேஷ் என்ன இப்படி ஏமாத்திட்டு போய்ட்டானேப்பா என்று வெற்றியின் அப்பா அழுதுகொண்டே இருந்தார். உருட்சியான முகத்தோடு எரியும் விளக்கின் முன்னே போட்டோவில் சிரித்துக்கொண்டிருந்தான் தினேஷ். வெற்றி மிகவும் உடைந்துபோயிருந்தான். அது எனக்கு கொஞ்சம் ஆச்சர்யத்தை கொடுத்தது.  காரணம் அவனுக்கும் அவன் தம்பிக்கும் ஆகவே ஆகாது. இவன் வீட்டிலிருந்தால் அவன் வெளியே படுக்க வேண்டுமென்பது போல அடித்துக்கொள்வார்கள். எப்போதெல்லாம் வெற்றியின் வீட்டிற்கு செல்கிறேனோ அப்போது என் உயிருக்கு உத்திரவாதம் இல்லாததுபோலவே தோன்றும். அந்த அளவுக்கு இருவரும் சண்டைபோடுவார்கள். ”நீ வந்திருக்கன்னு கூட பாக்காம எப்படி சண்டை போடுறானுங்க பாரு” என்று வெற்றியின் அம்மா வருத்தப்படும். அப்படி ஒருவனுக்கு ஒருவன் ஆகாமல் ஏழாம்பொருத்தமாக இருந்த தம்பி இல்லை என்றதும் வெற்றியின் முகம் வாடிப்போயிருந்தது எனக்கு கொஞ்சம் வியப்பாகவே இருந்தது. அவர்கள் அண்ணன் தம்பி அல்ல, இப்போதிலுருந்தே சொத்துப்பிரச்சனைக்காக அடித்துக்கொள்ளும் பங்காளிகள் எனத் தோன்றும். ஆனால் அடிச்சாலும் பிடிச்சாலும் அண்ணன் தம்பி பாசம் சும்மா இல்லடா என வெற்றியின் இறுக்கமான முகம் காண்பித்தது. சண்டைபோடாமல் இரண்டுபேரும் இணக்கமாக இருந்திருக்கலாமென்று வெற்றி நிச்சயம் எண்ணியிருப்பான். 

எனக்கு நெருங்கிய மரணங்களில் என் பாட்டியின் இழப்பு எங்கள் குடும்பத்திற்கே பேரிழப்புதான். அதாவது அம்மாவின் அம்மா. தகட்டூர் மாப்பிள்ளை வீரன் கோவில் திருவிழாவில் மாமா வாங்கிக்கொடுத்த பொம்மைக்காரை வீட்டின் கூடம், சமையலறை என்று ஓட்டி விளையாண்ட காலத்திலிருந்து நான் கல்லூரிக்கு சென்ற நாட்கள்வரை ஒருமுறைகூட அந்த ஆத்தா என்னை திட்டியதே இல்லை. ’டேய்…’ என்று சத்தமாய் அதட்டியதுகூட கிடையாது. பூண்டுக்குழம்பு, மீன்குழம்பு, ஆட்டுகறி என ஆத்தாவின் கைப்பக்குவம் இப்போதும் நாக்கில் எச்சில் ஊறவைக்கிறது. நெஞ்சில் சளி அடைத்துக்கொண்டது, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள். அருவை சிகிச்சை செய்தாகவேண்டும் என்ற கட்டாயத்தில் தொண்டைக்கு கீழே அருவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆத்தாவைப் பார்க்க உள்ளே செல்லும்போதெல்லாம் அம்மாவின் முகம் பழுத்திருப்பதைப் பார்த்து ஆத்திரமாக வரும். ஏன் இவ்வளவு சீக்கிரம் ஆத்தாவுக்கு உடம்பு சரியில்லாம போகனும். ஏன் இப்படியெல்லாம் நடக்கனும் என்று தோன்றும். ஆபரேஷன் முடிந்து கொஞ்ச நாட்களிலேயே ஆத்தா செத்துபோச்சு என்று தகவல் வந்ததும் ஓடினேன். ஆத்தாவ இனிமே பாக்கமுடியாது புள்ளன்ன்னு அம்மா கட்டிப்பிடித்து அழுதாள். இப்போதும் கலங்கிய அந்த கண்கள் என் முன்னே தெரிகிறது. அந்த ஆத்தாவுக்காக நான் என்ன செய்தேன்.. ஒன்றுமில்லை. அறுவை சிகிச்சைக்கு இரத்தம் தேவைப்பட்டது. ஒரேவகை இரத்தமாக இல்லாததால் என்னால் கொடுக்கமுடியாமல் போனது. என் நண்பர்கள் சிலரை அழைத்து இரத்தம் கொடுக்கச் சொன்னேன். அவ்வளவுதான். 

இது நடக்கக் கூடாது என்றும், நடந்துவிடப்போகிறதே என்றும் பயந்து பயந்து நேர்ந்தது என் தாத்தாவின் மரணம். 87 வயது வரை திடகாத்திரமாக இருந்தவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இரெண்டு தட்டு சோறு திங்கும் அவர், இரண்டு அல்லது மூன்று கரண்டி போதும் என்று சொல்லுமளவிற்கு மாறினார். எனக்கு திருமணமாகி ஆறு மாதமாகியிருந்தபோது அவரை தஞ்சை மீனாட்சி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். வீட்டிலிருந்து சொக்கலிங்கம் டாக்டரின் இண்டிகா காரில் தஞ்சாவூர் போனோம். காரில் ஏசி போட்டதும், ”ஹேய்… குளுவுறுதுடா புள்ள…” என குழந்தை மாதிரி சிரித்தார். அந்த சிரிப்பு எனக்கு பயத்தைத்தான் உண்டாக்கியது. பெரிதாக வீடுகட்டி ரூமில் ஏசிபோட்டு தாத்தாவுக்கு கொடுக்கவேண்டுமென்று ஆசை எனக்கு. அதற்குள் இறந்துவிட்டால் என்ன செய்வதென்று பயந்தேன். அந்த பயம் அவரின் சிரிப்பில் இரட்டிப்பானது. மன்னார்குடியிலிருந்து தஞ்சை செல்லும் வழியில் ஒண்ணுக்கு போவதற்காக இறங்கிய தாத்தா உக்காருவதற்கே கஷ்டப்படார். 75 வயது வரை தென்னை மரம் ஏறிய கால்களும், என்னை தோளில் தூக்கி வைத்துக்கொண்டு திரௌபதி அம்மன் கோவிலில் அரவாண் பார்க்க வைத்த கைகளும் வலுவிழந்துபோனதை என்னால் பார்க்கவே முடியவில்லை. மருத்துவமனைக்குச் சென்றதும் வீல் சேரை உருட்டிவந்து உட்காரச் சொன்னார்கள். அது நானே தெரிந்து தாத்தாவுக்கு செய்யும் அவமரியாதையாகத் தோன்றினாலும் வேறு வழியில்லாமல் உட்கார வைத்தேன். வீல் சேரில் நகர்த்திக்கொண்டு போகும்போது, பொருட்காட்சியை அதிசயமாய்ப் பார்க்கும் குழந்தைபோல சுற்றி சுற்றி பார்த்தார். ஏனென்றால் அவரது வாழ்நாளில் அப்படியோரு மருத்துவமனைக்கு செல்வது அதுதான் முதல்முறை. 

எனக்கு இந்த ஆஸ்பத்திரி வேண்டாம்… என்ன வூட்ல உடு. நான் செத்தா செத்துப்போறேன். இங்க கொடல அறுத்துபுடுவானுவொ.. காசு ரொம்ப செலவாவும் என்று திரும்ப திரும்ப முரண்டு பிடித்தார். எக்ஸ்ரே.. ஈசிஜி, எம்.ஆர்.ஐ ஸ்கேன் என எல்லா டெஸ்ட்டும்  ஒரு ரவுண்ட் வந்தபிறகு, நெஞ்சுக்கும் இரைப்பைய்யுக்கும் இடையில ஒரு ஸ்டண்ட் போட்டோம்னா சாப்பாடு நல்லா இறங்கும். அட்மிட் பண்ணுங்க. ஆபரேஷன் பண்ணிடலாம் என்றார்கள். தாத்தா அதுக்கு ஒத்துக்கொள்ளவே இல்லை. எனக்கும் பயமாகவே இருந்தது. மருந்து மாத்திரை மட்டும் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு திரும்பிவிட்டோம். அப்போது நான் அக்செஞ்சரில் வேலைபார்த்துக்கொண்டிருந்தேன். அலுவலகத்திற்கு சென்றுகொண்டிருந்த ஒரு மாலை நேரத்தில் தரமணி அருகே என் பேருந்துக்கு முன்னாள் ஒரு சவ ஊர்வலம் வந்துகொண்டிருந்தது. போற வழியில பொணத்த பார்த்தா நல்ல சகுணம் என ஆத்தா சொன்னது நினைவில் வந்து போன சில நிமிடங்களில் தாத்தா இறந்துவிட்டதாக அம்மா போன் பண்ணினார். வீட்டிலிருந்த இரண்டு பவுன் செயினை அடகு வைத்து இருபதாயிரத்தை எடுத்துக்கொண்டு ஊருக்கு ஓடினேன். 

ஏசி ரூமில் தூங்கவைக்க வேண்டும் என நான் ஆசைப்பட்ட என் தாத்தா குளீருட்டப்பட்ட பெட்டியில் அமைதியாய் படுத்திருந்தார். என் ஐயா என்ன இப்படி தனியா உட்டுட்டு போய்ட்டாரே என்று ஆத்தா என் காலைக்கட்டிக்கொண்டு அழுதது. இனிமேல் தாத்தா இல்லை, வரப்போவது இல்லை என்ற வெறுமை மட்டுமே என் முன்னால் இருந்ததே தவிற, எனக்கு அழுகை வரவில்லை. இப்போதுவரை நான் ஏன் அழவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு நிமிடம் கூட சும்மா இல்லாமல் உழைத்துக்கொண்டிருந்த அவர் ஆறரை அடி  நீளமுள்ள பெட்டியில் அடைந்துகிடப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நானும் தம்பியும் பள்ளிக்கு செல்லும்போதும், கல்லூரிக்கு செல்லும்போதும் நீங்க நல்லா இருந்தா போதும் என்று நெகிழ்வாரேத் தவிற வேறு எதுவும் எதிர்பார்த்தது கிடையாது. எங்களுக்கு மட்டுமல்ல, அவரை எதிரியாய் நினைத்தவர்களுக்கும், ஏமாற்றியவர்களுக்கும் நல்லதையே நினைத்தார். ஏன் தாத்தா இப்படி இருக்கீங்க என்று கேட்டால்… ”போனா போறாண்டா எத்தன நாளைக்கு வாழ்ந்துடப்போறான். எல்லாருக்கும் ஆறடிதான் போ” என்பார். ஒவ்வொரு முறை தூங்குவதற்கு முன்பும், ”அப்பா முருகா, முனியய்யா, கழுவுடையானே, பத்ரகாளி ஆச்சி ஈஸ்வரி” என்று ஒரு முப்பது தெய்வங்களை அழைத்து, எல்லாரும்  நல்லாருக்கனும் என்று சொல்லிவிட்டுத்தான் தூங்குவார். முதல் முறை நான் சென்னை சவேரா ஹோட்டலில் வேலைக்கு சேர்ந்து வாங்கிய  மூவாயிரத்து அறுநூறு ரூபாய் சம்பளத்தில் ஒரு ஐநூறை அவர் கையில் நீட்டினேன். என்ன நினைத்தாரோ தெரியவில்லை. எழுந்து நின்று குமுறி அழ ஆரம்பித்துவிட்டார். ஏன் தாத்தா அழுவுறீங்க என்றதும், வெத்தலபாக்கு வாங்க கூட காசு இல்ல புள்ள… நீ வந்து கொடுக்குற என்று வாங்கி வெத்திலை பொட்டனத்தில் வைத்துக்கொண்டார். நான் அதிகபட்சமாக அவருக்கு செய்ததென்றால் அதுதான். எப்போது நெல், தென்னை, மா, முந்திரி எல்லாம் விளைச்சலில் சோடை போக ஆரம்பித்து அவர் கையில் காசு இல்லாமல் போனதோ அப்போதே அவருக்கு வியாதி வந்துவிட்டது. அவர் இல்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பெரிதாக ஃப்ரேம் செய்து சென்னைக்கு எடுத்துவந்த தாத்தாவின் புகைப்படத்தை வீட்டில் மாட்டி வைக்கவில்லை. ஏனென்றால் இறந்தவர்களின் புகைப்படங்கள் அவர்கள் இறந்துபோனதை நினைவிபடுத்துகிறதே தவிற வேறு  எதையும் செய்வதில்லை. ஊருக்குச் செல்லும்போது மட்டும் அவருக்குப் பிடித்த வெற்றிலை பாக்கு வாங்கி சென்று புகைப்படத்தின் முன் வைத்துவிட்டு என்னை பாத்துக்கங்க தாத்தா என சொல்வேன். 

கடந்தவாரம் கூட என்  நண்பன் சிவாவின் மனைவியிடம் பேசினேன். அவன் இல்லாத உண்மையை தாங்கிப்பிடித்துக்கொண்டு எஞ்சிய வாழ்வை கடத்திக்கொண்டிருக்கிறாள். சிவாவைப் போலவே அன்பானவள், ஆர்ப்பாட்டமில்லாதவள், கருணையுள்ளவள். என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத மரணங்களில் சிவாவின் மரணம் முந்திக்கொண்டு முதலில் நிற்கிறது. தன்னை சுற்றியுள்ளவர்கள் மீது அவன் எடுத்துக்கொண்ட அக்கறை, யார் என்ன என்று பார்க்காமல் முடிந்த உதவியை செய்வது, வாழ்க்கையை கொண்டாடி வாழ்வது என்று சொல்லிக்கொண்டே போகலாம். மின்சாரம் தாக்கி இறந்துவிட்டான் என்ற செய்திகேட்டு நானும் ஆதியும் காலை 10 மணிக்கே பண்ருட்டி சென்றுவிட்டோம். கூராய்வு முடிந்து மதியம் 12 மணிக்கு மேல்தான் சிவாவை கொண்டுவந்தார்கள். இறக்கி வைக்கப்பட்டு ஐஸ் பெட்டியில் இருந்த அவனை ஒரு நிமிடம் ஏறெடுத்துப் பார்த்தேன். மாநிறத்தில் இருந்த அவன், கொஞ்சம் கூடுதலாக கருத்திருந்தான். மூக்கில் லேசாக இரத்தம் காய்ந்திருந்தது. அவன் தலைமாட்டில் அரை மயக்க நிலையில் நித்யா நிலைகுலைந்து சாய்ந்திருந்தாள். என் அருகிலிருந்த ஸ்ரீராமைப் பார்த்ததும் அண்ணா… நீங்க எடுத்துகொடுத்த சட்டதான்னா போட்டிருக்காங்க… என்று கதறினாள். எதுவும் பேசாமல் கையைக் கட்டிக்கொண்டு மௌனித்து நின்றேன். என் கண்ணீரையும் கடன் வாங்கி நித்யா அழுவதுபோலவே இருந்தது. திருமணமாகி ஒரு வருடம்கூட ஆகாத நிலையில் ஏன் இப்படி ஒரு மரணம். அவன் உயிருடன் இருந்திருந்தால் இந்நேரம் பத்து பேருக்காவது வீட்டில் அடுப்பெரிய வழி செய்திருப்பான். அவனின் எண்ணமும் செயலும் எப்போதும் அப்படித்தான் இருக்கும். 

இப்படித்தான் சமீபத்தில் தம்பி ஜோவின் ஒரு கார் விபத்தில் இறந்துபோனான். போட்டோகிராபர் என்றும், எடிட்டர் என்றும், பிஸினெஸ்மேன் ஆகவேண்டுமென்றும் வேகமாக ஓடிக்கொண்டிருந்தவனின் கனவுகளுக்கு ஒரு மரணம் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் பணியாற்றும் அலுவலகத்தின் வேலை இருக்கிறதா எனக் கேட்டான். அப்போது வேகன்சி இல்லாததால் அவனை அழைக்கவில்லை. ஒரு வேளை அவன் கேட்டபோது வேலைகிடைத்திருந்தால் ஆக்டிங் டிரைவராக வேலைக்குப் போகாமல் இந்நேரம் உயிருடன் இருந்திருப்பான் எனத் தோன்றுகிறது.  நாம செய்யுறத செஞ்சிடமும்னா.. எல்லாம் ஆண்டவருடைய செயல். என்று கர்த்தரிடத்தில் தன்னை அடைக்கலப்படுத்திக்கொண்டவனை அவரே அழைத்துக்கொண்டாரா? தெரியவில்லை. ஆனால் இந்த மரணங்கள் ஒவ்வொரு முறையும் நமக்கு இங்கு எதுவும் நிலையில்லை என்ற படிப்பினையை வலிந்து திணிக்கின்றன. மரணத்தை நோக்கிய பாதையில் செல்லும் நம்மில், சிலருக்கு அது அருகிலும் இருக்கிறது, தொலைவிலும் இருக்கிறது. ஒருபோதும் இல்லாமல் இல்லை. எப்போது மரணம் நிகழும் அல்லது நிகழ்த்தப்படுமென்ற உண்மை புலப்படாததனால் கண் கட்டிய பூனைபோல் இருட்டில் ஆனந்தப்படுகிறோம். ஒரு மின்மினிப் பூச்சியின் சில நொடி வெளிச்சம்தான் நம் வாழ்வும், வீரமும், செருக்கும் என்பதை நினைக்க தவிர்க்கிறோம். நான் பெரியவன், நீ பெரியவன் என்று வஞ்சத்தை பெருக்கிக்கொள்கிறோம். மற்றவரின் வளர்ச்சி மீது பொறாமைகொள்கிறோம். அவன் உட்கார்ந்த நாற்காலியின் ஒரு காலை உடைத்து அவனை கீழே தள்ளி நாம் ஏறிக்கொள்ளவேண்டுமென திட்டம்போடுகிறோம். நமக்கென ஒரு  நாற்காலியை செய்யத்தெரியாத தச்சனாகிறோம். அமைதியான குளக்கரையின் மேல் நின்று மூத்திரமடிக்கும் சிறுவன் போல மற்றவரின் வீழ்ச்சியில் ஆனந்தப் படுகிறோம். தீப்பிழம்பை பாதுகாக்கும் எரிமலையாய் வன்மமும், பொறாமையும், காழ்ப்பும்  நம்மில் மிகுந்து கிடக்கிறது. விலங்குகளை அடித்து உண்ணும் சிங்கத்தைப் போலவும், புலியைப் போலவும் வாழ ஆசைப்படும் நாம், ஊரை சுத்தம் செய்து வாழும் பன்றியாகவும், தன்னுயிர்நீத்து விவசாயம் செழிக்க செய்யும் மண்புழுவாகவும் ஒருபோதும் வாழ நினைப்பதில்லை. 

அதனால்தான் சொல்கிறேன் ஒருவருடைய மரணமே நம் இருப்பு மீதான அக்கறையையும், ஆர்ப்பாட்டமான வாழ்வின் நோக்கத்தையும் ஒரு கணம் நிதானிக்க வைக்கிறது. மரண வீடுகளில் போலியான மனிதர்களையும், போலியான உணர்ச்சிகளையும் காணமுடிவதில்லை. நம்முடைய வாழ்க்கையையும், நமக்கான வாழ்க்கையும் தீர்மானிக்கும் ஆற்றல் நம்மை சுற்றி இருப்பவரின் மரணத்திற்கு உண்டு என்பதை நாம் மறந்துவிடுகிறோம். வெற்றி தோல்வி போன்ற சிற்றின்ப சித்துவிளையாட்டில் கவனம்பெற்று இந்த உலகம்  அன்பினால் கட்டமைக்கப்படவேண்டுமென்ற உண்மையை மறந்துபோகிறோம். இந்த கட்டுரையை வாசித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் என்னையோ உங்களையோ மரணம் தழுவிக்கொள்ளலாம். மரணத்தை புரிந்துகொள்ளும் சக்தி மனிதர்களிடத்தில் இல்லை, அதை உணர்ந்துகொள்ளும் திறனே இருக்கிறது. அதனால் இனி நகரும் ஒவ்வொரு நொடியையும் அன்பால் நகர்த்த விழைவோம்.

Comments

Popular posts from this blog

”தலித் அரசியல்” லப்பர் பந்து அடித்த சிக்ஸர்

அன்னமிட்ட கை

மாண்புமிகு மாணவன்:-