மாண்புமிகு மாணவன்:-
ர். ஒவ்வொருவரின் தனித்திறமைகளையும் நுட்பமாக கவனித்து அதை மேம்படுத்த ஊக்கப்படுத்துவார். குறைகளை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் கண்டிப்பார். MGM என்று எல்லோராலும் அழைக்கப்படும் அவருக்கு நான் வைத்த செல்லப்பெயர் SPB. அழகாகப் பாடுவார்..அதில் SPB யின் சாயல் இருக்கும். உருவத்திலும் குணத்திலும் SPBஐ ஒத்தவர்தான் அவர்.
அவருடைய அன்பைப் பற்றி தமிழ்ப்பிரபா ஒருமுறை இப்படி எழுதினான் "சார்.. எனக்கு ரொம்ப கடுப்பா இருக்கு.. உங்கள கத்தியால குத்தி கொலை பண்ண போறேன் சார்" என்று சொன்னால் கூட.. "பாத்துப்பா.. கத்திய ஒழுங்கா பிடி, கையில கிழிச்சிடப்போவுது" என்று அன்பு பாராட்டும் மனிதர் MGM சார் என்று. தமிழ்ப்பிரபாவின் கவிதைளையும் எழுத்துக்களையும் அப்போதே உன்னிப்பாக கவனித்து பாராட்டியவர் அவர். ரெயின்போ பண்பலையில் நாங்கள் ட்ரெய்னியாக இருந்தபோது முதன் முதலில் கன்சோலில் உட்கார வைத்து அழகுபார்த்தது இன்று அமெரிக்காவையும் கனடாவையும் நடனத்தால் கட்டிப்போடும் அன்பு அக்கா Angay Chandrasekar தான். அது ஒரு ஈவ்னிங் ஷோ. அந்த நிகழ்ச்சியைக் கேட்டுவிட்டு ஸ்டுடியோவுக்கு வந்த MGM சார்.. "உன்னோட spontaneity நல்லாருக்குப்பா.. ஆனா இவ்ளோ ஸ்பீட் வேண்டாம்ப்பா" என்றார்.
அதற்குப் பிறகு வசந்த், கிருஷ்ணா அண்ணன், வசுமதி, ஜெய்ஸ்ரீ அக்கா, அருண், கார்த்தி கேயன் உள்ளிட்ட பல சீனியர் தொகுப்பாளர்களுடன் சேர்ந்து ஷோ என்ற பெயரில் கும்மாளமடித்திருக்கிறோம். நானும் புவனாவும் சேர்ந்து காலையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும்போது நிகழ்ச்சி தொகுப்பில் பரஸ்பர புரிதல் இருந்தது. ஒருமுறை கடுமையான காய்ச்சல் எனக்கு. ஓரளவுக்கு காய்ச்சல் சரியான பிறகு செலவுக்கு பணமில்லை. அப்போது யாரிடமும் அதிகமாக நான் பணம் கேட்டதில்லை. அகில இந்திய வானொலித் தேர்வுக்கு வந்தபோது பழக்கமான நண்பன் தியாகு இருந்தான். அவன் தான் எனக்கு வாணி சான்றிதழ் கோர்ஸுக்கான கட்டணத்தைக் கூட செலுத்தினான். ஒரு சில தினங்களில் பழக்கமாகி, நல்ல நண்பர்களாக மாறினோம். அதனால் அவ்வப்போது செலவுக்கு சில நூறு இரு நூறுகளை அவனிடம்தான் பெற்றுக்கொள்வேன். அன்று செலவுக்கு பணமில்லாமல் இருந்தபோது சிலரிடம் ஐநூறு ரூபாய் பணம் கேட்டு எல்லோருமே கைவிரித்துவிட்டனர். உண்மை என்னவென்றால் அன்று இரவு உணவுக்குக் கூட பணமில்லை. அப்போது என்னருகில் வந்த லலிதா, "யார் யார்கிட்டயோ காசு கேக்குற.. எங்கிட்ட கேட்க மாட்டியா? நான் உனக்கு friend இல்லையா" என்று உரிமையோடு கோபித்துக்கொண்டு என்னிடமிருந்து எந்த பதிலையும் எதிர்பார்க்காமல் ஐநூறு ரூபாயை எடுத்து கொடுத்தாள். அதை இன்றுவரை திருப்பி கொடுக்கவில்லை. இப்போது லண்டனில் வசிக்கும் லலிதாதான் வானொலியில் நானும் தியாகுவும் சந்தித்த முதல் தோழி. பதினாறு ரூபாய்க்கு கேண்டினில் வாங்கிய சாப்பாட்டு டோக்கனை என்னிடம் கொடுத்துவிட்டு நான் வீட்டுக்கு போய் சாப்ட்டுக்கிறேன்.. நீ சாப்டு என சொல்லிவிட்டுச் சென்றாள். முதல் சந்திப்பிலேயே சோறு வாங்கி கொடுத்த லலிதாவுக்கு நான் எதுவுமே செய்யவில்லை. சமீபத்தில்கூட அவளின் தாயாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக அறிந்தேன். உதவ முடியவில்லை.
எங்கள் பேட்சில் இருந்த நபர்களில் அர்ச்சனா முக்கியமானவள். அவள் அப்போது சூரியன் பண்பலையிலிருந்து வந்திருந்தாள். Private station லாம் எப்டி இருக்கும் என்றும்.. அங்கு பணியாற்றும் ஆர்ஜேக்கள் பற்றியும் கேட்டாள் "ஏழு கடல் ஏழு மலையைத் தாண்டி.. ஒரு பூதம் இருந்துச்சாம்" என ஆர்வத்தோடு சொல்லும் மழலைப் போல பிரம்மாண்டமாகச் சொல்வாள். ஏசுவின் புனிதக் கதைகள் போல நான், தியாகு, ரகு உள்ளிட்டோர் கேட்டுக்கொண்டிருப்போம்.
அப்போது வளர்ந்து வரும் நடிகராக இருந்த பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரின் மகனை லைவ் ஷோவ்க்காக அழைத்து வந்தாள். முதன் முதலாக ஒரு நடிகர், ரேடியோவில் பேசுவதை பார்க்கப்போகிறேன் என்கிற ஆர்வத்தில் காலையிலேயே சென்றுவிட்டேன். நேர்க்காணல் செய்யப்போகும் அர்ச்சனாவிற்கு சில கேள்விகளையும் தயாரித்து வைத்திருந்தேன். பிற்பகலில் அந்த நடிகரின் நேற்காணல் துவங்கியது. அது நேயர்களும் நேரலையில் பங்கேற்கும் நிகழ்ச்சி. அரை மணி நேரம் நிகழ்ச்சி நன்றாக போய்க்கொண்டிருந்தது. வெள்ளையாக இருந்த அந்த நடிகரை ஒவ்வொரு லிங்க்கிலும் அழகான நடிகர்*** நம்ம கூட இருக்கார்" என்றே அர்ச்சனா ஒபனிங் கொடுத்துக்கொண்டிருந்தது எனக்கு எரிச்சலாக இருந்தது. ஏனென்று கேட்காதீர்கள். ஆண்களின் மன நிலை அப்படித்தான் இருக்கும். அப்போது திருச்சியிலுருந்து பேசிய நேயர் ஒருவர், "உங்களுக்கு நடிப்பே வர்லயே.. ஏன் நீங்க நடிக்கிறீங்க? வேற எதாச்சும் நல்ல வேலையா பாக்கலாம்ல" என்று பிரபல நடிகரை வெறுப்பேற்றினார். எந்த fader -ஐ க்ளோஸ் செய்வது என்று அர்ச்சனாவே குழம்பியிருந்த நிலையில்.. "நீங்க என்ன சார் வேலை பாக்குறீங்க" என அந்த நடிகர் திருப்பிக் கேட்க.. "நான் எலெக்ட்ரீசியனா இருக்கேன் " என நேயர் பதிலளித்தார். "சரி அந்த வேலையை நீங்க முதல்ல ஒழுங்கா பாருங்க" என்று பிரபல நடிகர் கோபத்தை வெளிப்படுத்தவும், ஓகே.. இப்போ ஒரு சூப்பரான பாடல் கேட்டுட்டு வந்திடலாம் என அர்ச்சனா அறிவித்து மைக்கை ஆஃப் செய்யவும் சரியாக இருந்தது. அதற்குப் பிறகு எப்போது அந்த நடிகரின் முகத்தை டிவியில் பார்த்தாலும் இந்த சம்பவம் மாயி படத்தில் மின்னலாக கோவை சரளா வருவதுபோல் வந்துபோகும்.
சிகரத்தை நோக்கி என்று ஒரு நிகழ்ச்சி இருக்கும். வாரந்தோறும் வியாழக்கிழமை சேயோன் சார் தொகுத்து வழங்குவார். அந்த நாளில் சீனியர் ஆர்ஜேக்களே நிகழ்ச்சி செய்ய பயப்படுவார்கள். காரணம் சேயோன் சார் அவ்வளவு ஸ்ட்ரிக்ட். அவர் பேசுவதற்கு ஏற்ற பாடலை தயாராக எடுத்து வைக்க வேண்டும். கொஞ்சம் பிசகினாலும் "என்ன வேலை பாக்குறீங்க" என்று நம் பக்கம் திரும்புவார். அதை பார்க்கும்போது தண்டாயுதபாணியே தார் ரோட்டில் சண்டைபோட இறங்கியதுபோல் இருக்கும். நாம் ஒழுங்காக இருந்தால்கூட பதட்டத்தில் body எதாவது தப்பு பண்ணிடும். இரண்டு மூன்று தடவைக்கு மேல் அவருடன் நிகழ்ச்சி செய்தபோது எந்த பிரச்சனையும் இல்லை. பாராட்டிச் சென்றார். ஒருதடவை பெரிய சம்பவம் செய்துவிட்டேன். அவர் ஒரு விருந்தினரை அழைத்து வந்திருந்தார். அவருடன் off the record-ல் ஆலோசித்துவிட்டு லைவ்வில் பேசுவார். அவருடன் ஆலோசிக்க வேண்டும் என்பதால் ஸ்டுடியோ ஸ்பீக்கரை mute செய்ய சொல்லிவிட்டார். அவர் சொன்னால் மறுப்பேச்சு இல்லை என்பதால் ஸ்பீக்கரை ஆஃப் செய்துவிட்டு அமர்ந்திருந்தேன். அவர் லைவ்வில் பேசிமுடித்து பாட்டு போடும்போது மைக் ஃபேடரை முழுவதும் க்ளோஸ் செய்யாமல் விட்டுவிட்டேன். இருவரும் ஜாலியாக பல கதைகளையும் பேசிக்கொண்டிருக்கிறார்கள், நான் ஹெட்போனும் போடாமல் அவர்களின் பேச்சை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன். பத்து நிமிடங்களுக்குப் பிறகு கண்ட்ரோல் ரூமிலிருந்து வந்த பொறியாளர் கன்சோலை உற்றுப் பார்த்துவிட்டு மைக் ஃபேடரை க்ளோஸ் செய்தார். அப்போதுதான் புரிந்தது, அவர்கள் ஜாலியாக பேசிய அனைத்தும் பாடலோடு சேர்ந்தே லைவ்வில் ஓடியிருக்கிறது என்று. அவ்வளவுதான்.. மைக்கை ஆஃப் செய்யவில்லை என்று தெரிந்ததும் You totally a waste fellow என்று ஆரம்பித்து ஆங்கிலத்திலே திட்டினார். போன வாரம் நல்லா பாராட்டிட்டு போனார்.. இந்த வாரம் இப்படி திட்டு வாங்கிட்டோமே என்று மிகவும் வருந்தினேன். ரேடியோவை பொறுத்தவரை ஆர்ஜே என்பவன், ஒரு விமானி போல. நான் கவனக்குறைவாக இருந்தது மிகப்பெரியத் தவறு. இப்போது நினைத்தாலும் நான் கவனமாக இருந்திருக்க வேண்டும் என்றே என்னை கடிந்துகொள்கிறேன்.
ரேடியோ பற்றி எனக்கு நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசை இருந்தது. காலையில் 5 மணி முதல் இரவு பதினோரு மணிவரை சென்னையில் எந்த ரேடியோ ஸ்டேஷனில் எந்த ஆர்ஜே, எப்போது பேசுவார்.. என்ன நிகழ்ச்சி.. ஒவ்வொரு ஸ்டேஷனிலும் எப்போது விளம்பரம் வரும் என்பதுவரைக்கும் நுனிவிரலில் வைத்திருப்பேன். ரெயின்போவில் எங்களுடன் இருந்த கருண் அப்போது அகடமி ஆஃப் ரேடியோ ஸ்டடீஸில் சேர்ந்திருந்தான். முதல் பேட்சிலேயே அங்கு சேரவேண்டும் என முயற்சித்து பணமில்லாததால், நான்காவது பேட்சில் சேர்ந்தேன். அதன்பிறகுதான் தனியார் பண்பலைகளுக்கென தனி உலகமே இருக்கிறது என்று புரிந்துகொண்டேன்.
Blade தீனாவாக பண்பலை நேயர்களுக்கு அறிமுகமாகி பிக் தீனாவாக மாறி, கின்னஸ் சாதனை புரிந்த தீனா சாரிடம் ரேடியோ கற்றுக்கொள்ளலாம் என அகடமியில் சேர்ந்தேன். நான் சவேராவில் வேலைபார்த்த காலத்திலேயே அவரை நன்கு தெரியும் எனக்கு. ரேடியோவில் வேலை பார்க்க வேண்டும் என்றுதான் சென்னை வந்தேன். வந்தவனுக்கு புகலிடமாக அமைந்ததுதான் சவேரா. அங்கு உடற்பயிற்சிக் கூடத்துக்கு வரும் தீனா சாரிடம் ஒவ்வொரு நாளும் பேச முயற்சிப்பேன். ஒரு நாள் ஜிம்மிலிருந்து சாண்ட்விட்ச் ஆர்டர் செய்திருந்தார் என நினைக்கிறேன். அவருடைய ஆர்டர் என்று தெரிந்ததும் நான் போறேன் என்று எடுத்துக்கொண்டு ஓடினேன். பிக் வணக்கம் என breakfast show செய்துகொண்டிருக்கும் ஒரு ஆர்ஜே.. ஆர்ஜே என்றால் தனக்கென அடையாளம் இருக்க வேண்டுமென நீளமாக முடி வளர்த்திருப்பதை கொள்கையாகக் கொண்ட ஒரு ஆர்ஜே.. 168 மணி நேரம் தொடர்ச்சியாக நிகழ்ச்சி செய்து கின்னஸ் சாதனை படைத்த அந்த மனிதருடன் முதல்முறை பேசப்போகிறோம் என்று எண்ண ஓட்டத்தில் படபடப்போடு சென்றேன். Bench press போட்டு எழுந்த அவர் சாண்ட்விட்ச்சை வாங்கிக்கொண்டார். அப்போது அவரின் நிகழ்ச்சிகளை தவறாமல் கேட்பேன் என என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு ஆர்ஜே ஆகவேண்டும் என்ற விருப்பத்தைக் கூறினேன். கொஞ்சம் மிமிக்ரி பண்ணுவேன் சார் என்றேன். "ஆர்ஜேக்கு மிமிக்ரியெல்லாம் முக்கியமில்லப்பா.. நிறைய படிங்க.. கேளுங்க.. Current affairs-ல அப்டேட்டா இருங்க. வாய்ப்பு வரும்போது சொல்றேன் என்று முடித்துவிட்டார். அதன்பிறகு என்னைப் பார்க்கும்போதெல்லாம் புன்னகைத்துச் செல்வார். சவேராவின் ஆண்டு விழா உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளில் அவர் சிறப்பு விருந்தினராக நிச்சயம் இருப்பார்.
பிறகு ஒரு நாள் எந்திரன் திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு Big FM -ல் பிக் ரோபோடா என்ற போட்டி நடத்துவதாக வந்த விளம்பரத்தை கேட்டுவிட்டு அந்த நிகழ்ச்சி நடக்கும் அடையார் வசந்த் அண்ட் கோ-க்குச் சென்றேன். அங்கு பெரிய ஆர்ப்பாட்டமெல்லாம் ஏதுமில்லை. கணேஷ் என்ற நபர் என்னிடம் விவரத்தை கேட்டுவிட்டு, இவர் contest க்கு வந்திருக்கிறார் என்றதும்.. ஓஹ் அப்படியா சூப்பர் என்று ஒரு குரல். ஒடிசலான தேகத்தோடு big FM என்று பொறிக்கப்பட்ட waise coat அணிந்த ஒருவர் வந்தார். என் பெயரைக் கேட்ட அவர், சட்டென.. பிக் ரோபோடா காண்டஸ்ட்டுக்கு கோடிக்கணக்கான மக்கள் வந்திருக்காங்க என்று எனக்கு ஒரு intro கொடுத்துவிட்டு என்னை perform பண்ண சொன்னார். அப்போது என்னுடன் சேர்த்து கடை ஊழியர்கள் பத்து பேர் மட்டுமே அங்கிருந்திருப்பார்கள். அப்படி பிரம்மாண்ட ஓபனிங் கொடுத்த நபர் வேறு யாருமில்லை.. அன்பு அண்ணன் ஆர்ஜே பாலாஜிதான். அப்போதுதான் அவர் கோவை ரேடியோ மிர்ச்சியிலிருந்து விலகி big fm-ல் சேர்ந்திருந்தார். அந்த போட்டியிலிருந்து இறுதிப்போட்டிக்குத் தேர்வாகி பென்ஸ் பார்க் ஹோட்டலில் நடந்த Grand finale நிகழ்வில் வசந்த் அண்ணாச்சி கையால் மூன்றாவது பரிசும் வாங்கினேன். அப்போது என்னுடைய ரேடியோ ஆர்வத்தை குறிப்பிட்டு மேடையில் பாராட்டினார் தீனா. அவர் Big FM லிருந்து விலகி, ரேடியோ கிளாஸ் எடுக்கிறார் என்று தெரிந்ததும் முதல் ஆளாக சேரவேண்டும் என நினைத்தேன். பொருளாதாரப் பிரச்சனையால் சேரவில்லை. அப்படின்னா அந்த course-க்கு எத்தனை லட்சம்னு கேக்குறீங்களா? 15000 ரூபாய் மட்டும்தான். அந்த பதினைந்தாயிரத்தை அப்போது கொடுக்க இயலவில்லை.
அகடமியில் சேர்ந்த பின்புதான் தனியார் பண்பலைகளின் உலகமே வேறு என்பது புரிந்தது. பாஸ்க்கி சார், நெல்சன் சார்( ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா திரைப்படங்களின் இயக்குனர்), வீரா சார், தினேஷ் சார்.. என்று ஒவ்வொரு வாரமும் ஒருவர் வகுப்பெடுப்பார்கள். வகுப்பென்றால் என்ன தெரியுமா சின்சியராக ஜாலியாக இருப்போம். அதுவும் நெல்சன் சார் வகுப்பென்றால் மிகவும் குஷியாக இருக்கும். ஆனால் எல்லோருமே பயங்கர ஸ்ட்ரிக்ட். எங்கள் பேட்ச்சில் இருந்த பதினைந்து பேரையும் லிங்க் ரெகார்ட் செய்யச் சொல்லி, அத்தனை பேர் முன்னிலையிலும் அதை கேட்டுவிட்டு குறை நிறைகளைச் சொல்வார். வயிற்றில் புளியை கரைத்துக்கொண்டு நிற்போம். அவர் நல்லாருக்குன்னு சொல்ல வேண்டாம். திட்டாம இருந்தா போதும் என்றுதான் நினைப்போம். அவர் அவ்வளவு எளிதாக பாராட்ட மாட்டார். திட்டாமல் விட்டாலே நாம் நன்றாக பண்ணியிருக்கிறோம் என்று எங்களுக்கு நாங்களே கிரெடிட் கொடுத்துக்கொள்வோம். அந்த பயிற்சியால்தான் ஒரு விஷயத்தை நச்சென்று சொல்ல ஓரளவுக்கு என்னால் முடிகிறது என்று நினைக்கிறேன். ஒருமுறை தீனா சாரின் வகுப்புக்கு 15 நிமிடங்கள் தாமதமாக சென்றுவிட்டேன். தீனா சார்தான் நமக்கு ரொம்ப நாள் தெரியுமே.. எதுவும் சொல்லமாட்டார் என கொஞ்சம் அசால்ட்டாக போனேன். நீ லேட்டா வந்துட்ட.. லஞ்ச் டைம் வரைக்கும் உள்ள அனுமதியில்ல என்று சொல்லிட்டார். அந்த தண்டனை முடிந்து உள்ளே சென்றபோது, "ரேடியோல டைமுக்கு வர்றது ரொம்ப முக்கியம். 7 மணிக்கு ஷோன்னா 6.45க்கு at least நீ well prepared ah ஸ்டுடியோக்குள்ள இருக்கணும்" என்ற கண்டிப்போடு அனுமதித்தார்.
அங்கு நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்ட பிறகு, ஒரு வாய்ப்பு கிடைத்து BIG FM -ல் வேலைக்கு சேர்ந்தேன். அது என் ஊடகப் பயணத்தின் பாதையை, திசையை தீர்மானிக்கும் மிக முக்கிய கருவியாய் இருந்திருக்கிறது. அதுதான் என்னால் தொலைக்காட்சிக்கும், பத்திரிகைக்கும் எழுத முடிந்த ஒருவன் எனக்குள் இருக்கிறான் என்று அடையாளம் காட்டியது. அதற்கு முக்கியக் காரணம் big fm - ன் ஆஸ்தான ஒலி பொறியாளர், low budget AR Rahman, எங்கள் அண்ணன் பிரபாகரன். ப்ரோமோவுக்கும், விளம்பரங்களுக்கும் சின்ன சின்ன ஸ்கிரிப்ட் எழுதும்போது "நீ கொடுக்குற கான்சப்ட் புதுசா இருக்கு தம்பி" என்று தூண்டிவிட்டார். மற்றொரு அண்ணன் தியாகு நான் ஸ்கிரிப்ட் எழுதினால் "நீ எழுதினதுல மூணாவது ஸ்கிரிப்ட்ட சொல்லு" என்பார். ஏனென்றால்... நான் எப்போதுமே ஆர்வக்கோளாறில் ஒரே விளம்பரத்திற்கு மூன்று.. நான்கென்று ஸ்கிரிப்ட் எழுதிக் கொடுப்பேன். முதலில் வருவது சாதாரணமா இருக்கும்... அடுத்தடுத்து வர்றது எப்பவும் better ah இருக்கும்டா என்று தியாகு மூன்றாவது ஸ்கிரிப்டை எடுத்துக்கொள்வார். அதேபோல் அங்கு அதிகமாக என்னை திட்டுவது இரண்டு பேர். ஒருத்தர் ஆர்ஜே கிரி மற்றொருவர் ஆர்ஜே பாலாஜி. கிரி நன்றாக கவிதை எழுதுவார். நான் எழுதும் கவிதைகளைப் பார்த்துவிட்டு பாராட்டும் அவர், அதை அடுத்த கட்டத்திற்கு நகர்த்து எனத் திட்டுவார். குக் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் என்பதால் பாலஜியின் வேவ் லெங்த்துக்கு என்னால் வரமுடியவில்லை. அதனால் திட்டுவிழும். அடுத்ததாக அவர் என் முன்னேற்றத்திற்காக சில விஷயங்களைச் சொல்வார். ஆனால் அது பெரும்பாலும் "வந்தா மலை.. போனா மயிறு" என்பதுபோல் இருப்பதால் நான் தயங்குவேன். நீ இப்டியே இருந்தின்னா உருப்பட முடுயாதுடா என்று பேசுவார். அவர் சொன்னதை செய்திருக்கலாமோ என்று இப்போது தோன்றுகிறது. என்ன செய்ய.. எல்லாம் காலம் கடந்த ஞானம் தான். அதே பாலாஜிதான் எனக்கு அங்கு வேலைக்கு பிரச்சினை வந்துவிட்டது என்று தெரிந்ததும் மேலிடத்தில் எனக்காக பேசினார். அது வேலைக்கு ஆகாமல் போன பின்னர், அவருடன் தொடர்பிலிருந்த மற்ற பண்பலை நிகழ்ச்சித் தலைமை அதிகாரிகளிடம் பேசி எனக்கு வேலைகிடைக்க முயற்சி எடுத்தார்.
பண்பலையின் கிளஸ்டர் ஹெட்டாக இருந்தவர் மிகவும் ஜாலியான பேர்வழி. எங்கள் வீட்டுக்கு பக்கத்திலுள்ள அபார்ட்மெண்டில்தான் தங்கியிருந்தார். அதனால் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவர் காரிலேயே என்னை ட்ராப் செய்துவிட்டுப் போவார். நான்கு நிலையங்களை கட்டி காப்பாத்தும் பொறுப்பு அவருடையது என்றாலும் ஒரு நாள் கூட கடிந்துகொண்டதில்லை. ஆனால் அவரின் கோர முகத்தையும் பார்க்கும் சம்வவம் நிகழ்ந்தது. லேசான காய்ச்சலுடன் எழுந்த நான் விடுப்பு எடுக்கலாம் என்று நினைத்தாலும் அன்று ஒரு தனியார் மருத்துவமனையின் ரேடியோ நிகழ்ச்சி இருந்ததனால் அலுவலகத்திற்குச் சென்றேன். அலுவலகத்திலுருந்து எங்கள் குழுவுடன் மருத்துவமனைக்குச் செல்ல தாமதமாகிவிட்டது. 20 நிமிட தாமதத்தில் நிலைமையே மாறிப்போனது. அந்த மருத்துவமனையின் மார்க்கெட்டிங் அதிகாரி, நேரத்திற்கு வந்து நிகழ்ச்சியைத் துவங்வில்லை என சத்தம்போட்டு.. பிரச்சனையாக்கிவிட்டார். அது அலுவலகத்தில் பூதாகரமாக வெடித்தது. நிகழ்ச்சி ரத்தாகி நான் திரும்பி வந்ததும்.. கன்னாபின்னாவெனெ ஆங்கிலத்திலேயே திட்டினார். அதுவரை லேசாகக் கூட கோபப்படாத, என்னை காரில் அழைத்துச் சென்ற அந்த மனிதர் திட்டியதும் நான் நிலைகுலைந்துபோனேன். உங்களுக்குப் பிடித்த ஒருவர்.. சின்ன சின்ன விஷயங்களில் உங்களைக் கொண்டாடிய ஒருவர்.. இனி நீ யாரோ நான் யாரோ என்பதுபோல கடுமையான வார்த்தைகளை பிரயோகித்தால் என்ன செய்வீர்கள்? என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. என்னை மீறி பதட்டத்திலும், பயத்திலுன் கண்ணீர் வந்துவிட்டது. அழுகிறேன்.. அப்போது அங்கிருந்த ஒரு கன்னட நண்பர் Hey.. Nothing ... Nothing.. Cool என்று என் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே மெதுவாக கழிவறைப் பகுதிக்கு அழைத்து வந்துவிட்டார். "எல்லோர் முன்னாலும் அழாதே.. உள்ளே போய் அழு" என்று சொல்லாமல் சொல்லியிருப்பார் போலும். அன்று முழுவதும்...எனக்கு மிகவும் பிடித்த என் வீட்டில் ஏதோ எழவு விழுந்ததுபோல் இருந்தது.
அந்த மருத்துவமனை பிரச்சனைகள் ஓய்ந்தன. அடுத்தநாள் அதே தலைமை அதிகாரி என்னை அழைத்தார். "Hey sorry da.. நேத்து டென்ஷன்ல திட்டிட்டேன். எதையும் மனசுல வச்சிக்காத. அந்த ஹாஸ்பிடல் நமக்கு வருஷத்துக்கு ஒரு கோடி ரூபாய்க்கு விளம்பரம் கொடுக்குறாண்டா.. அவன் டக்குன்னு அந்த டீல கேன்சல் பண்ணிட்டா... மும்பையில இருக்கவனுங்க என்னதான் கேப்பானுங்க. நான் என்ன பதில் சொல்ல முடியும்? அதான் உன்ன திட்டிட்டேன். Am extremely sorry என்றார் மனப்பூர்வமாக. எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இல்ல சார்.. எனக்கு லைட்டா ஃபீவர் அதான் லேட்டாகிடுச்சு என்றேன். இந்த மாதிரி முக்கியனான இவண்ட் இருக்கப்போ.. முடியலன்னா வரலன்னு சொல்லிடு. மேனேஜ் பண்ணிக்கலாம்னு பாக்காத. அது எல்லாருக்கும் பிராப்லம் ஆகும் என அறிவுரைத்தார். எவ்வளவு பெரிய பொறுப்பில் இருப்பவர்களுக்கும் மேலிட அழுத்தம் எந்த அளவுக்கு இருக்கும் என தெரிந்துகொண்ட நாள் அது.
ரேடியோ வேலையை விட்டபிறகு சில மாதங்கள் ஒரு தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் பணியாற்றினேன். தீபாவளி செலவுக்காக பத்தாயிரம் ரூபாயைத் திரட்ட நெருக்கமான வட்டங்களில் முயற்சித்து தோல்வியடைந்தேன். பின்னர் என்னுடைய கிளை மேலாளரின் தலையிலேயே கை வைக்கலாம் என முடிவெடுத்து விஷயத்தைச் சொன்னேன். அவரிடம் கேட்கவேண்டும் என முடிவெடுக்கக் காரணம், அவர் மிகவும் நல்லவர். அதீத கடவுள் பக்தியுள்ளவர், ஒரு கிளைண்ட்டை பார்க்கப் போகிறேன் என்று சொன்னால் அலுவகத்திலிருக்கும் வினாயகர் படத்திற்கு முன்பு சென்று, சற்று நேரம் கண்ணை மூடி பிரார்த்தனை செய்துவிட்டுதான் என்னிடம் பாலிசி தொடர்பான காகிதங்களைக் கொடுப்பார். என்னுடைய அப்பாய்ண்ட்மெண்ட் ஆர்டரையே அங்கு வைத்து கும்பிட்டுதான் கொடுத்தார். இதைவிட என்னைப் பற்றியும் என் குடும்பத்தைப் பற்றியும் அக்கறையோடு நலம் விசாரிக்கும் பண்பாளர். ஒரு நாள் அலுவலகத்திற்குப் பக்கத்தில் காருக்குப் பின்னால் நின்று சிகரட் பிடித்துக்கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்து போனேன். சார்... நீங்க தம் அடிப்பீங்களா? என்றேன். நானும் மனுஷன் தானடா.. எவ்ளோ பிரஷர்டா.. இந்த பிராஞ்ச்ச ஒரு லெவெலுக்கு கொண்டு வந்திடனும்னு பாக்குறேன் பெருசா ஒண்ணும் நடக்க மாட்டேங்குது. இப்போ பார்க்கப் போன கிளைண்ட்டும் வேலைக்கு ஆகல.. டென்ஷனா இருக்குடா என்றார். அவரும் டென்ஷன் ஆவாரா என்று அப்போதுதான் யோசித்தேன், பாவமாக இருந்தது. ஏனெனில் அவரின் முக அமைப்பு அப்படி. யாரையாவது பார்க்கும்போது நம்முடைய எண்ணங்கள் நேர்மறையாகவே இருக்குமல்லவா? அப்படிப்பட்ட லட்சுமி கடாட்சமான முகம் அவருக்கு. அவரிடம் பணம் கேட்கலாம் என்பதற்கு வேறு ஒரு காரணமும் இருந்தது. அவரிடம் கேட்டால் நமக்கு இல்லையென்று சொல்லமாட்டார் என்பதைத் தாண்டி மாதம் மூன்று லட்சத்துக்கும் மேல் சம்பளம் வாங்க்கக்கூடியவருக்கு பத்தாயிரமெல்லாம் ஒரு காசா என எண்ணிக்கொண்டு தயக்கத்தோடு கேட்டேன். என்னுடைய நிலமையை புரிந்துகொண்ட அவர், டேய்.. 25 ஆயிரம் வாங்குற உனக்கு எப்படி பத்தாயிரம் பிரச்சனை இருக்கோ அதே மாதிரி அதிக சம்பளம் வாங்குற எனக்கும் அதுக்கேத்த மாதிரி பிரச்சனை இருக்கும்டா. ஒருத்தன் லட்சக்கணக்குல சம்பாதிக்கிறான்னா அவங்கிட்ட எப்பவும் காசு இருக்கும்.. எடுத்து குடுத்துடுவான்னு நினைக்காத.. உன்னவிட அதிகமா சம்பாதிக்கிறவன்கிட்ட தைரியமா பணம் கேக்கலாம்னு privilege எடுத்துக்காத என்று கால் மணி நேரம் அறிவுரை வழங்கிவிட்டு நகர்ந்துவிட்டார். விஷயத்தை அறிந்த சக ஊழியர் ஒருவர், ஏன் ஜி...அந்த ஆளுகிட்டயா காசு கேட்டீங்க? நல்லா பேசுவாப்ள... ஒரு பைசா வாங்க முடியாது என்றார். ஆனால் நான் அவரை தவறாக நினைக்கவில்லை. மாதம் முதல் தேதியானதும் என்னிடம் ஆயிரம் ஐநூறு கேட்கும் நண்பர்கள் பட்டியலில்தான் நானும் யாருக்கோ இருக்கிறேன் என நினைத்துக்கொண்டேன். அதிலிருந்து நன்கு பழக்கமில்லாத.. குறிப்பாக நம்மைவிட பொருளாதாரத்தில் மேம்பட்டிருக்கிறவர்களிடம் பணம் கேட்பதை முடிந்தளவு தவிர்த்து வருகிறேன்.
ஒரு நண்பன் இருக்கிறான். கல்லூரி காலங்களில் பல நாட்கள் எனக்கும் சேர்த்தே அவன் வீட்டில் சோறு வடிப்பார்கள். எனக்கு மட்டுமல்ல...எப்போதுமே 6-7 பேர் அவன் வீட்டில் சாப்பிடுவோம். அவன் சென்னைக்கு வந்து சில தொழில்கள் தொடங்கினான். அதில் OMR-ல் உள்ள பிரபலமான ஐடி பூங்காவில் திறக்கப்பட்ட ஒரு பிரியாணி கடையும் அடக்கம். நான் உணவக நிர்வாகம் படித்தவன் என்பதால் இந்த கடையின் கணக்கு வழக்குகளை நீயே பார்த்துக்கொள். வியாபார நுணுக்கங்கள் கைக்கு வந்ததும் அடுத்து ஒரு கடை எடுக்கலாம், அது உனக்குன்னு இருக்கட்டும் நான் சப்போர்ட் பண்றேன் என்றான். ஹோட்டல் வேலை எனக்கு போரடித்துப் போய் அப்போதுதான் BPO நிறுவனத்தில் சேர்ந்திருந்தேன். அதனால் அங்கு சென்று கல்லாவில் நிற்க பிடிக்கவில்லை. முடியாதென்று தவிர்த்துவிட்டேன். பிறகு என்னுடைய BPO வாழ்க்கையும் சொல்லிக்கொள்ளும்படியில்லை. அவர்கள் ஆரம்பித்த பிரியாணி கடையும் நிர்வாக அழுத்தங்களால் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
அவன் வெவ்வேறு பிசினஸ்களில் கால் பதித்து, ஒரு பிசினஸ் மேனாக வளர்ந்து வந்தான். நான் பிபிஓ வேலை, ஊடகத்தில் freelancer என சுற்றிக்கொண்டிருந்தேன். அவன் மீண்டும் என்னை அழைத்து வேறு ஒரு பிசினஸ் வாய்ப்பை காண்பித்தான். இது சரியாக இருக்குமென்று ஏற்றுக்கொண்டேன். அது வேலை பார்க்கும் நபர்களுக்கான Paying Guest accommodation தான். அவன் அவனுடைய அண்ணன்கள், அண்ணனின் நண்பர்கள் என OMR-ல் குறிப்பிடத்தகுந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் கால்பதித்தார்கள். தொழிலும் நன்றாகத்தான் இருந்தது. அதில் இறங்கலாம் என முடிவெடுத்து என் சக்திக்கு கொஞ்சம் மீறிய தொகையை முதலீடு செய்து இறங்கினேன். ஆறு மாதங்கள் எல்லாம் நன்றாகப் போனது. பின்னர் ஒவ்வொரு பிரச்சனையாக வர ஆரம்பித்தது. ஃபிளாட்டில் சின்ன பிரச்சனை என்று பிளம்பரை அழைப்பேன். அவர் பைப்பை திருப்பி வைப்பதற்கே ஐநூறு குடு என்பார். கட்டிடத்தில் ஏற்பட்ட சின்ன பிரச்சனைகள் கூட மிகுந்த மன உளைச்சலை உண்டாக்கின. மேலும், தங்கியிருப்பவர்கள் திடீரென ட்ரான்ஸ்பர் என்று காலி செய்தார்கள். காலி செய்ய வேண்டுமென்றால் 15 நாட்களுக்கு முன்பு சொன்னால்தான் அவர்களின் முன்பணம் திருப்பித் தரப்படும் என்பதுதான் ஒப்பந்தம். நண்பன் அதில் கராராக இருப்பான். என்னால் அப்படி இருக்க முடியவில்லை. ஒரு இடத்தில் தங்குவதற்காக பணத்தை கட்டிவிட்டு சில தினங்களில் அங்கிருந்து காலி செய்கிறேன் என்று சொல்லும்போது, அந்த இடத்தின் ஓனர் பணத்தை தரமுடியாது என்று மறுத்தால் அது எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்று எனக்குத் தெரியும். ஹோட்டல் பயிற்சிக்காக பெங்களூரு சென்று வாடகைக்குத் தங்கி சில தினங்களிலேயே உடல்நலக்குறைவால் திரும்ப வேண்டிய நிலை. அப்போது நான் தங்கியிருந்த மேன்ஷன் ஓனரிடம் விவரத்தைச் சொல்லி முன்பணத்தில் பாதியாவது கொடுங்கள் என்று எவ்வளவோ கேட்டுப்பார்த்தும் ஒரு பைசாகூட தரமுடியாது என்று மறுத்துவிட்டார் அந்த சேட்டு இளைஞர். அதானால் யாராவது திடீரென ட்ரான்ஸ்ஃபர் என்று சொல்லி முன்பணத்தைக் கேட்டால் அந்த சேட்டு இடத்தில் நான் இருக்கக் கூடாது என்பதையே மனசாட்சி எடுத்துச் சொல்லும். அதனால் பணத்தை திரும்ப கொடுத்துவிடுவேன். இப்படி என்னுடைய இரக்கத்தால் இறந்துகொண்டிருந்த தொழிலை, இழுத்து மூடி பால் ஊத்தும் விதமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரு ஆப்பு வைத்தார். சீனர்களும் இந்தியர்களும் அமெரிக்கர்களின் வேலையைத் திருடிக்கொள்கின்றனர் என்று அவர் சீறியதும் இங்கு வேலை இழப்புகள் ஏற்பட்டன. நாங்கள் கடையை போட்டதே ஐடி ஊழியர்களை நம்பித்தான் என்பதால் முதலுக்கே மோசமானது. ஆதரவற்று கிடந்த ஃபர்னிச்சர்களையும், வாஷின் மெஷின்களையும் கேட்டவர்களிடம் கேட்ட விலைக்கு கொடுத்துவிட்டு அதிலிருந்து வெளியே வந்தேன். சில லட்சங்களை இழந்த பிறகு, ஒரு தொழில் என்று வந்துவிட்டால் அதில் முதலீட்டிற்கும் செலவுக்கும் மட்டுமே மார்ஜின் இருக்க வேண்டும், லாபத்திற்கு மார்ஜின் இருக்கக் கூடாது. அது எவ்வளவு வேண்டுமானாலும் உயரும் என்ற அடிப்படையில் இருக்கும் தொழில்தான் நம்மை உயர்த்தும் என தெரிந்துகொண்டேன். மேலும், பண விஷயத்தில் இரக்கம், செண்டிமெண்ட் எல்லாம் வேலை செய்யக்கூடிய தொழிலை எக்காலத்திலும் செய்யக்கூடாது என்றும் திட்டவட்டமாக முடிவெடுத்தேன். பின்னாளில் என் ஜாதகத்தைப் பார்த்த ஜோசியர் ஒருவர், உங்ளுக்கு மூளைதான் மூலதனம். அதை வைத்து தொழில் தொடங்குங்கள், பணத்தை மூலதனமாக நினைக்காதீர்கள் என்றார்.
அதற்கு முன்பு சில தொலைக்காட்சிகளுக்கு ஸ்க்ரிப்ட் எழுதிக்கொண்டிருந்ததால் அதே வேலையை முழு மூச்சாக செய்யலாம் என முடிவெடுத்து களத்தில் இறங்கினேன். ஆனால் பெரிதாக வருமானம் பார்க்க முடியவில்லை. வேலையை மட்டும் வாங்கிக்கொள்வார்கள், பேமெண்ட் என்று வரும்போது பெப்பே என்பார்கள். அப்போதெல்லாம் முதன் முதலில் டவுட் செந்திலைப் பார்த்தபோது அவர் சொன்னதுதான் ஞாபகத்திற்கு வரும். “ஜி.. மீடியால ஒண்ணு வேலை கிடைக்கும்.. இல்லன்னா காசு கிடைக்கும்.. ரெண்டும் அவ்வளவு சீக்கிரம் ஒண்ணா கிடைக்காது” என்பார். அது மிகப்பெரிய சத்தியவார்த்தை என்று அடிக்கடி புரிந்தது. ஒரு மிகப்பெரிய சேனலின் ரியாலிட்டி ஷோவுக்கு ஸ்க்ரிப்ட் எழுதும்போது, நான் கொடுத்த பத்து ஸ்க்ரிப்டில் எட்டு நன்றாக இல்லை என்று நிராகரித்துவிட்டு, இரண்டு ஸ்க்ரிப்ட்டுக்கான 2500 ரூபாயைக் கொடுப்பார்கள். எட்டு ஸ்க்ரிப்ட் என்றால் ஒவ்வொரு ஸ்க்ரிப்ட்டுக்கும் நான் ஒரு நாள் உக்கார்ந்து எழுதியிருப்பேன். தொலைக்காட்சியில் இருபது நிமிடங்கள் ஒளிபரப்ப தேவையான கண்டண்ட் அதில் இருக்க வேண்டும். அடுத்த நாள் ஷூட்டிங்கில் போய் பார்த்தால், நிராகரிக்கப்பட்ட என்னுடைய ஸ்க்ரிப்டில் இருந்த காட்சிகளும், வசனங்களும் வேறு ஸ்க்ரிப்ட் ரைட்டர்கள் எழுதிய ஸ்க்ரிப்டில் கச்சிதமாக பொருத்தப்பட்டிருக்கும். அதை எதிர்த்து கேட்டால், அந்த 2500 வருமா என்பதே கேள்விக்குறிதான். அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பொட்டட்டோ போல அப்ப்ரூவ் செய்யப்பட்ட ஒரு ஸ்ரிப்டை நானும் அண்ணன் சரவெடி சரவணனும் சேர்ந்து எழுதியிருந்தோம். அதில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்து பாராட்டு வாங்கியதோடு மட்டுமல்லாமல், அதன் சீக்வன்ஸ், பஞ்ச் வசனங்கள் எல்லாம் சிறப்பு என நடுவர்கள் பாராட்டிக்கொண்டிருக்கும்போது, சிறப்பு விருந்தினராக வந்திருந்த பிரபல நடிகர் ஒருவர், “இந்த ஸ்க்ரிப்ட் தான் வெய்ட்டா இருக்கு.. யாரு.. எழுதுனது..? ப்ளீஸ் முன்னாடி வாங்க என அழைக்கிறார். கேமராவுக்கு பின்னால் இருந்த நாங்கள் போகலாம் என முடிவெடுக்கும்போது.. கொஞ்ச தூரத்தில் அமர்ந்திருந்த நிகழ்ச்சி இயக்குநர் டாக் பேக்கில் பேசியதும், “இந்த ஸ்க்ரிப்டை எழுதியது நம்ம ஷோ டேரைக்டர்தான்” என்று தொகுப்பாளினி சொல்கிறார். அடப்பாவிகளா? இந்த அளவுக்கு பச்ச பொய் சொல்றவன் தான் ரியாலிட்டி ஷோ டேரக்ட்ரா என்று சரவடி அண்ணனிடம் கேட்டேன். நீங்க.. பார்க்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு. அப்படித்தான் பண்ணுவானுங்க என்றார். சாதாரண தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கே இப்படியென்றால் சினிமாவை யோசித்துப்பாருங்கள். அந்த இயக்குனர் இன்று ஒரு சேனலின் க்ரியேட்டிவ் ஹெட்டாக இருக்கிறார் என்பது கூடுதல் தகவல். இதையெல்லாம் நான் வயித்தெரிச்சலில் சொல்லவில்லை. இன்று தொழில்நுட்ப வளர்ச்சியால் நம் திறமையை வெளிக்காட்ட கிடைத்திருக்கும் வாய்ப்பு சில வருடங்களுக்கு முன் இல்லை. ஆனால், பொழுதுபோக்கு ஊடகங்கள் ஜனநாயகத்தன்மையோடு உள்ளனவா என்பது சந்தேகம்தான்.
இப்படியே சொல்லிக்கொண்டு போக நிறைய இருக்கிறது. இவற்றையெல்லாம் நினைத்துப்பார்க்கும்போது காலம் எனும் வெளியில் காற்றில் தூக்கி வீசப்படும் மணல் துகள் போலதான் என்னுடைய வாழ்வு எனத் தோன்றுகிறது. பிடித்தது, பிடிக்காதது என எத்தனையோ வேலைகளை செய்துவிட்டேன். ஆனால் எதிலும் துவக்கத்திலிருக்கும் ஆர்வமும் உற்சாகமும் சில நாட்களுக்குப் பிறகு இருப்பதில்லை. இவ்வளவுதானா என சலிப்பு தட்டுகிறது. ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்குத் தாவும் குரங்கைப் போல, வேறு என்ன புதிதாக இருக்கிறது என்று ஓடவே மனம் விரும்புகிறது. அப்படி ஓடி ஓடி புதிதாக ஏதோ ஒன்றை கற்றுகொள்கிறேன். ”நீ கடக ராசிக்காரன்.. நண்டு வளையிலயும் இருக்கும், தண்ணியிலயும் இருக்கும் தரையிலயும் இருக்கும்.. அதுனால எங்க போனாலும் நீ பொழச்சிக்குவடா” என்று என் தாத்தா சொல்வார். என் பிறந்த தேதியைக் கேட்ட கவிஞர் ஒருவரும் “உங்களால ஒரே இடத்துல இருக்க முடியாது. ஒரே வேலையை ரொம்ப நாள் செய்யவும் முடியாது” என்றார். அது உண்மைதான் போல. ஆனால், எழுதுவதில் மட்டும் ஒவ்வொரு முறையும் ஆர்வம் ஊற்றெடுத்துக்கொண்டே இருக்கிறது. அதற்கான நேரத்தைத் திருட ஒவ்வொரு நாளும் முயன்று, பல நாட்கள் தோற்றுப்போகிறேன். ஆனால் எழுதிக்கொண்டே இருக்கும் சிலரைப் பார்க்கும்போது கொஞ்சம் பொறாமையாக இருக்கும். அப்படி அடிக்கடி என் பொறாமைக்கு இலக்காகுபவர் அண்ணன் சரவணன் சந்திரன். இந்த மனுஷன் என்ன வேகத்துல எழுதிகிட்டே இருப்பார் எனத் தோன்றும்.
அவ்வப்போது சிறுகதை, கட்டுரை என நான் எழுதுவதை பொதுவாக நட்பு வட்டத்தில் உள்ளவர்களுக்கு அனுப்பி, படித்துப் பாருங்கள் என்று சொல்லும் பழக்கம் எனக்கு இல்லை. ஆனால் எப்போதாவது நெருங்கிய நண்பர்களுக்கும், சீனியர்களுக்கும் அனுப்பி தொல்லை செய்வேன். அப்படி சில மாதங்களுக்கு முன்பு எழுதிய கட்டுரை ஒன்றை எழுத்தாளர் சரவணன் சந்திரன் அவர்களுக்கு அனுப்பினேன். அவர் இருக்கும் பிஸியில் அதை படிப்பாரா என்று சந்தேகமாகத்தான் இருந்தது. உடனடியாக அதைப் படித்த அவர், “சுவாரஸ்யமா எழுதுறீங்க தம்பி” என்று பதிலளித்திருந்தார். என்னுடைய எழுத்தை செம்மைப்படுத்த காரணமாக இருக்கும் எழுத்தாளர்களில் அவரும் முக்கியமானவர் என்பதால் அது எனக்கு அளவற்ற மகிழ்ச்சியைக் கொடுத்தது. இன்னும் புதிதாக நிறைய கற்றுக்கொள்ளவேண்டும், கற்றுக்கொண்டே இருப்பதுபோல போதை எதுவுமில்லை. மாணவனாக கற்றுக்கொண்டே இருங்கள்.. இந்த உலகம் உங்களுக்கு இன்னும் நிறைவுசெய்யாத சிலபஸ்களை தன்னகத்தே ஒளித்துவைத்திருக்கிறது.
நிறைய நண்பர்கள் ஊடகத்துறையில் சாதிப்பது எளிது என்று நினைத்துக்கொண்டு உள்ளே வருகிறார்கள். தற்போதுள்ள சமூக ஊடக உலகில் அது கொஞ்சம் இலகுவாகியிருக்கிறது. ஆனால் பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு அப்படியில்லை. இப்போது உங்களிடம் திறமை இருந்தால், அதை உலகிற்குக் காட்ட ஒரு மொபைல் போன் மட்டுமே போதும் என்றாகிவிட்டது. இந்த தொழில்நுட்பத்தை நம் கையில் கொடுத்த கனவான்களுக்கு நன்றிக்கடன் படவேண்டும். ஆனால் பலரும் இந்த தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது. இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் பள்ளி, கல்லூரி, வேலை என்று எல்லா இடங்களிலும் தெரிந்தோ தெரியாமலோ நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். என் வாழ்க்கையில் நான் சந்தித்த மனிதர்கள் ஒவ்வொருவரும் என் ஆசான்கள் தான். மேலும், உயிரினங்கள், இயற்கை, சூழல்கள் அனைத்தும் சிறந்த ஆசிரிர்களாக என்னுள் நிரம்பி இருக்கின்றன. மாண்புமிகு மாணவனாக அவை அனைத்தையும் வணங்கிக்கொள்கிறேன், வணங்கிக்கொண்டே இருப்பேன்.
நன்றி!
நன்மைகளை பெயரோடும், சங்கடங்களை இலை மறை காயாகவும் எழுதும் கலை சிறப்பு.
ReplyDeleteமிக்க நன்றி சார்!
Deleteமிக அருமையான எழுத்து நடை, உங்கள் வாழ்வில் இன்னும் பல உயரம் அடைய வாழ்த்துக்கள் VJ
ReplyDeleteThank you so much VJ
Deleteஉங்களின் எழுதுக்கான ரசிகை. தினம் ஒரு கதையை போடுங்க.
ReplyDelete