விதியின் முடிச்சு
”ஆறு.. ஏழு.. ஹ்ம்ம்.. பதினொன்னு.. அப்பா உனக்கு பதினோரு முடி நரச்சி போச்சிப்பா. நீயும் தாத்தா மாதிரி ஆகிடுவியா?”
என்று தோளில் உட்கார்ந்து கொண்டு தகப்பனின் தலையை பீராய்ந்துகொண்டிருந்த மேகலா கேட்டாள். ”இல்ல.. அப்பாவுக்கு வெள்ளிக்கம்பி வர ஆரம்பிச்சிருக்கு.. அதெல்லாம் எடுத்து முறுக்கி உனக்கு வெள்ளி கொலுசு செஞ்சி போடுவேன்..” ஹைய்ய்.. அப்போ தாத்தாவுக்கு இருக்க வெள்ளிக்கம்பியெல்லாம் சேர்த்தா வெள்ளியிலயே கொலுசு, ஒட்டியாணம் எல்லாம் போடலாம் போலருக்கே..” என்று அவள் கிண்டலடித்ததும் இரண்டு கைப்பட்டைகளையும் பிடித்து கீழே இறக்கி.. "இந்த பாரு.. உனக்கு வெள்ளி கொலுசு வேணுமா? வேண்டாமா? என்றான் ராமலிங்கம். ”வேணும்... அப்போ அப்பா சொல்றத அப்டியே கேட்டுக்கணும்.. குறுக்க பேசக்கூடாது.. ஹ்ம்ம்..” என்று கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டு மீண்டும் தோளில் தூக்கிக்கொண்டான். பதினோரு முடி வெள்ளையாகிட்டுன்னா.. நமக்கு வயசாக ஆரம்பிச்சுடுச்சு. இன்னும் பொண்ணுக்கு எதுவும் சேர்க்க துவங்கவில்லையே என்ற சிந்தனை ஓடத்துவஙகியது. அப்போது பாதையோரத்திலிருந்த தென்னை மரத்தில் நாய் ஒன்று காலைத் தூக்கி மூத்திரமடித்துவிட்டு ஓடியது. அதைப் பார்த்துக்கொண்டே மகளை ஜம்மென்று தோளில் வைத்துக்கொண்டு நடந்துகொண்டிருந்தான். ராமலிங்கம் திட்டங்களெல்லாம் சரியாகத்தான் வகுத்திருந்தான். ஆனால் என்ன செய்வது? பென்சிலை எடுத்து ஸ்கேல் வைத்து வரையும் வண்ணக்கோடு போல நேராக இருப்பதில்லையே வாழ்க்கை?
ராமலிங்கம் பெரிதாக படிக்கவில்லை. ஒன்பதாம் வகுப்பில் இரண்டு பாடங்களில் தவறியதும் படிப்பு மீதிருந்த நம்பிக்கை முற்றாக உடைந்துபோனது. இரண்டு ஏக்கர் நிலத்தை வைத்து விவசாயம் செய்துகொண்டிருந்த அப்பா ஆரம்பத்தில் வருத்தப்பட்டாலும் " படிச்சாதான் சம்பாதிக்க முடியும்னு ஒண்ணுமில்ல.. கொஞ்சம் நெலம் தேடி வச்சிருக்கேன். இதை வச்சி ஒழச்சி பொழச்சிக்கோ" என்று சொல்லிவிட்டார். அதனால் அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்று எந்தவித இலக்குமில்லாமல் சுற்றிக்கொண்டிருந்தான்.
”ரெண்டு
பாடம்தானடா பெயிலாயிருக்க.. குணா சார் ட்யூஷனுக்கு
போயி அட்டம்ப்ட்டு அடிச்சி மறுபடியும் எழுது” என்றாள் வளர்மதி. வகுப்புத் தோழியான வளர்மதிக்கு ராமு மீது கொஞ்சம்
கரிசனம் அதிகம். ஒரு நாள் அறிவியல்
வகுப்புக்கு ஆசிரியர் வர தாதமதமான வேளையில்,
மாணவர்கள் எல்லோரும் பெஞ்ச்சில் ஏறி குதித்து விளையாடிக்கொண்டிருந்தனர்.
அப்போது வகுப்பறையின் வாயிலில் இருகுக்கும் ட்ரம்மில் தண்ணீர் குடிக்க குனிந்த வளர்மதி மூன்றாவது பெஞ்ச்சில் அமர்ந்திருந்த அனைவரின் கண்ணிலும் சிக்கிவிட்டாள். கணப்பொழுதில் அந்த தரிசனம் தனக்கு
கிடைத்துவிட்டது என்று சந்தோஷப்பட்டாலும் "டேய்.. உள்ள ஒண்ணுமே போடலடா.. அப்டியே
தெரியுதுடா.. என்று அவர்கள் சிரித்துக்கொண்டது ராமுவுக்கு பிடிக்கவில்லை. எல்லோரையும் அடித்துவிடலாமா என யோசித்துக்கொண்டே இருந்தான்.
மாலை நான்கு மணிக்கு பெல் அடித்ததும் சைக்கிளை
எடுத்துக்கொண்டு கிளம்பியவன்.. பத்து மீட்டர் இடைவெளி விட்டு வளர்மதியைப் பின் தொடர்ந்தான். சுக்கான்
பாலத்தின் முனையில் அவளின் தோழி சரண்யாவும், மீனாட்சியும்
பிரிந்து சென்றுவிட இதுதான் சந்தர்ப்பமென்று பெடலை ஏறி மிதித்து அருகில்
சென்றான்.
" வளர்...
ஒரு நிமிஷம் நில்லு" என்று அருகில் சைக்கிளை நிறுத்த.. பதட்டத்துடன் இருந்த ராமுவைப் பார்த்து ”சொல்லு.. என்ன ஆச்சு..?” என்று
கேட்டுக்கொண்டே சைக்கிளை நிறுத்தினாள். "தண்ணி குடிக்கும்போது கொஞ்சம் கவினிச்சி குடி" "தண்ணி குடிக்கும்போது கவினிக்கனுமா? என்ன சொல்ல வர்ற..
தண்ணில எதாச்சும் கெடந்துச்சா?" "ஐயோ... உனக்கு எப்டி சொல்றது... குனிஞ்சி தண்ணி மோளாத.. பாத்து கவனமா மோண்டு குடி.. அவ்ளோதான்" என்று சொல்லிவிட்டு சைக்கிளை எடுத்து நகர்ந்துவிட்டான். அடுத்தவார்த்தை பேசாமல் நின்ற வளர்மதி மெதுவாக கொஞ்ச தூரம் சைக்கிளை தள்ளிக்கொண்டே வந்து பிறகு ஏறிக்கொண்டாள்.
பசங்க
எல்லோரும் ஆட்டம்போட்டது.. மூன்றாவது பெஞ்ச்சில் மட்டும் நான்குபேர் உட்கார்ந்திருந்தது.. அப்போது இவள் தண்ணீர் குடிக்க
குனிந்தது எல்லாம் ஒவ்வொன்றாக வந்துபோயின. அன்று இரவு முழுவதும் பள்ளியில்
நடந்த விஷயஙகளும் ராமு வந்து சொல்லிய
விதமும் மனதுக்குள் திரும்பத் திரும்ப வந்துகொண்டே இருந்தது. அதுவரை பெரிதாக எதுவும் பேசிக்கொள்ளாமலிருந்த வளர், ராமுவிடம் அதிகமாக பேச ஆரம்பித்தாள். ராமுவும்
முந்திரி பழம், நாவல் பழஙகளை பறித்துக்கொண்டு வந்து வகுப்பு முடிந்து போகும்போது வளர்மதிக்கு கொடுப்பான். அவள் வீட்டிலிருந்து ரேஷனில்
கொடுத்த சீனியைக் கொண்டு வருவாள். இருவரும் சுக்கான் பாலத்தின் பக்கத்திலுள்ள சவுக்கு தோப்பின் அருகே நின்று முந்திரி பழத்தில் மஞ்சள் பூத்த சீனியைப் போட்டு தின்றுவிட்டு பொறுமையாக வீட்டிற்குச் செல்வார்கள்.
அப்படி
சாப்பிட்டுக்கொண்டிருந்த
ஒரு நாள் ராமுவிற்கு கேட்கவேண்டுமென்றிருந்த
ஒரு சந்தேகத்தை வளரிடம் தயங்கித் தயங்கி கேட்டான். "மாசம் நீ குளிக்கிற தேதி
வரும்ல.. அப்போ ரொம்ப வயிறு வலிக்கும்ல...? :ஹ்ம்ம்..” அப்போ கோமணம் கட்டிக்குவியா" ”ச்சீ...எரும மாடு...” ”ஹேய்..
இல்ல.. நம்ம சுந்தரமூர்த்தி இருக்கான்ல..
அவன் தான் சொன்னான். பொண்ணுங்கல்லாம்
அந்த நேரத்துல பழைய துணிய எடுத்து
கட்டிக்குவாங்கன்னு. அதான் கேட்டேன்... கோச்சிக்காத.. உன்னவிட்டா நான் யார்ட்ட போயி
கேக்குறது? சரி விடு..” என்று
சொல்லி மெல்ல நடந்தான். ”சரி… போகாத நில்லுடா..” என்று வளர்மதி
அழைத்த பின்னர் இருவரும் பேசிக்கொண்டே சென்றார்கள்.
இரண்டு
நாட்கள் கழித்து வளர்மதியை தனியே சந்தித்த ராமு, வளர்.. "உனக்கு ஒண்ணு வாங்கிட்டு வந்திருக்கேன்" ஹ்ம்ம் என்ன வாங்கிட்டு வந்திருக்க?
என்றதும் புத்தகம் வைத்திருந்த நரம்பு பையில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு கேரிபேக்கை எடுத்து
கொடுத்தான். அதை வாங்கி பிரிக்கும்போது
உள்ளே நீல நிறத்தில் நாப்கின்
பாக்கெட் ஒன்று இருந்தது. "இது எப்டிடா நீ
போயி வாங்குன?" ”அன்னைக்கி பஞ்சாயத்து டிவில இந்த வெளம்பரத்த பாத்தேன்.
சுப்பையன் கடைக்குபோகும்போது அங்க இருந்துச்சு. நைசா
வெலை எவ்ளோன்னு பாத்து வச்சிருந்தேன். நேத்துதான் வீட்டுக்குத் தெரியாம ஆட்டு கொட்டாயில சேர்த்து வச்சிருந்த முந்திரி கொட்டையெல்லாம் வித்தேன். ரெண்டே கால் கிலோ இருந்துச்சு..
கோயிந்து சித்தப்பா 63 ரூபா குடுத்தாரு.. அதான்
உடனே போயி வாங்கிட்டேன்”. ”ஐயய்யோ...சுப்பையன் கடையிலயா வாங்குன? அவர் உன்கிட்ட எதுவும்
கேக்கலயாடா?” ”இல்ல.. கடையில அவ்வூட்டு சின்ன பையன் தான் இருந்தான். அவன்கிட்ட
நைசா கேட்டு வாங்கிட்டு வந்துட்டேன்” என்று
ராமு சொன்னதும் வளர்மதியின் கண்கள் கண்ணீரை வெளியிடத் தயாராக இருந்தன. வெளியே எட்டிப்பார்த்த கண்ணீரை கீழே சிந்தவிடாமல் தன்
உதட்டில் ஏந்திக்கொண்டான். இருவரும் கட்டிக்கொண்டனர். என்ன வளர்.. உனக்கு
காய்ச்சலடிக்குது?
"இல்ல.. அதெல்லாம் ஒண்ணுமில்ல" என்று விலக்கிவிட்டு அந்த இடத்தைவிட்டு பொட்டுபோல
நகர்ந்தாள்.
மாதங்கள்
உருண்டோடின. உனக்கு நான் எனக்கு நீ
என இருவரும் குறுத்துப் பனையிலும் குட்டி வாழையிலும் இதயம் வரைந்து காதலை போல ஏதோவொன்றை வளர்த்துக்கொண்டிருந்த
நாட்களில்தான் பாழாய்ப்போன பரிட்சை வந்து ராமுவை இரண்டு பாடங்களில் பெயிலாக்கியது. அதன்பின்னர் மாங்காய் அறுப்புக்கு போவது, வயல் வேலைக்குப் போவது
என வெயில் நிறைந்த நிலத்தில் வெடித்துச் சுவைக்கும் வெள்ளரி போல எல்லாவற்றுக்கும் தயாரானவனாய்
வளர்ந்தான். பத்தாம் வகுப்பிற்குப் பிறகு பக்கத்து ஊர் பள்ளிக்கூடத்திற்கு சென்ற வளர்மதியை
வட்டமிடுவது மட்டும் மாறவே இல்லை. ஒரு நாள் வெளிமாரியம்மன்
கோவில் திருவிழாவில் அவளுக்குப் பிடித்த கண்ணாடி வளையளும், கம்மலும் வாங்கிக்கொடுத்து கொஞ்சும்போது கிருஷ்ணமூர்த்தி மாமா பார்த்துவிட்டு வீட்டில்
பற்ற வைத்தார்.
விஷயத்தைக்
கேட்டு அதிர்ச்சியடைந்த ராமுவின் அப்பா ரெங்கசாமி, கொந்தளித்து எழுந்தார். " ஏண்டா.. எருமமாட்டு கம்னாட்டி.. உருப்படியா ஒரு வேலை மயிர
தேடிக்க முடியல.. ஒம்பதாப்புக் கூட பாஸ் பண்ண
முடியல.. அதுக்குள்ள உனக்கு பொம்பள சொகம் கேக்குதா? சுண்ணி அரிப்பெடுத்தா காஞ்சூர போட்டு தேய்ச்சிக்கடா கண்டார ஓழிப்பய மவனே" என்று திட்டி வெட்டுவதற்கு அரிவாளை எடுத்தார். ரெங்கசாமி கடுமையான உழைப்பாளி. நல்ல மனுசன் தான்.
ராமு மீது பாசம் இல்லாதவரெல்லாம்
இல்லை. ஆனால், ரெங்கசாமியின் பரம்பரைக்கே காதல் கத்தரிக்காவெல்லாம் ஆகாது. தும்மிய வீட்டில் நெருப்பெடுக்கக் கூடாது என எண்ணும் கௌரவமான
மனிதர். அவர் பரம்பரையைப் பொறுத்தவரை
காதல் என்பது குடும்ப ஒழுக்கத்தை குலைக்கும் பாவச் செயல். வீட்டுப் பெரியோர்கள் பார்த்து செய்துவைக்காமல் ஒருவன் தானே பெண் தேடிக்கொண்டால்
அது பிராந்தி குடிப்பது, பீடி சிகரட் பழக்கம்போல
தீயப்பழக்கம் என்று நினைக்கும் குடும்பத்தில் பிறந்தவர் ரெங்கசாமி. அதனால், "பெத்தவனா பாத்து கல்யாணம் பண்ண வக்கில்லாத சாதி
கெட்ட நாயிங்கதாண்டா மார்கழி மாசத்துல நாயி சோடி சேக்குற
மாதிரி சேத்துகிட்டு பொட்டச்சி சூத்த மோந்துகிட்டு திரியும்" உனக்கென்ன? உங்கப்பன் கெடமாடு மாதிரி இங்க இருக்கேன். உன்
ஓயா குத்துகல்லாட்டம் வீட்ல இருக்குறா.. எங்கள மீறி உனக்கு பொட்டச்சி
சவகாசம் கேக்குதா? என்று குதித்துக்கொண்டிருந்தார்.
என்ன
சொல்வதென்று புரியாமல் பயந்து நின்ற ரெங்கசாமியின் மனைவி வடிவு, "என்னங்க.. நம்ம புள்ள என்ன
சாதிகெட்டுப் போயா சம்மந்தம் பண்ணனும்னு
சொல்றான்? அந்த பொண்ணு ஒண்ணும்
நமக்கு எந்தவிதத்துலயும் கொறச்சல் இல்லங்க.." என்றதும்.. "ஓ... ஆயாளும் மவனும்
சேந்துகிட்டுதான் நாடகம் போடுறீங்களா? நீ புள்ள வளத்த
லட்சணப் புண்டையே சரில்லன்னு சொல்லிகிட்டு இருக்கேன். வந்துட்டா வக்காளத்து வாங்குறதுக்கு" என்று ஓங்கி ஒரு அறை விட்டார்.
அதன்பின்னர் அப்பனுக்கும் மகனுக்கும் கைகளப்பாக கிருஷ்ணமூர்த்தி மாமாவும் அக்கம்பக்கத்தினரும் வந்து சமாதானப்படுத்தினர்.
பலகட்ட
பேச்சுவார்த்தை பஞ்சாயத்து என இழுத்தடித்து, வளர்மதி
வீட்டிலும் சம்மதம் வாங்கி ஒருவழியாக திருமணத்தை முடித்தார்கள். வளர்மதி மாமனாரை நன்றாகக் கவனித்துக்கொண்டாலும், தான் பார்த்து கொண்டுவராத
மருமகள் என்ற ஒவ்வாவை ஒரு
ஓரமாக இருக்கத்தான் செய்தது. அவை அனைத்தையும் சரி
செய்ய அடுத்த ஒரு வருடத்தில் ஒரு
தேவதை அவதரித்தாள். அவள்தான் மேகலா. செக்கச் செவேர்ன்னு பொண்ணு பொறந்திருக்கு.. ரெங்கசாமிக்கு பேத்தி வெள்ளக்காரி மாதிரி பொறந்திருக்காம்.. என்றெல்லாம் ஊருக்குள் பேசிக்கொண்டதும், குளுந்தாளம்மன் கோவிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து கும்பிட்டுவிட்டு மருத்துவமனைக்கு ஓடினார் ரெங்கசாமி.
மண்வெட்டிப்
பிடித்து காய்ச்சிப் போன கைகளில் குங்குமப்
பூவை வைத்ததுபோல பேத்தியைத் தூக்கி வைத்தாள் வடிவு. க்ஷ்...என்று
தாத்தாவைப் பார்த்து சிரித்து அவர் மீசையை எட்டிப்
பிடித்ததும் இறந்துபோன தன் தாயே வந்து
கையில் இருப்பதுபோல பூரித்துப்போனார் ரெங்கசாமி. அந்த நொடியிலிருந்து குடும்பத்தில்
எல்லாம் தலைகீழாக மாறியது. மூன்று தலைமுறையாய் பெண் வாரிசே இல்லாத
குடும்பத்தில் பிறந்த முதல் பெண் குழந்தை என்பதால்
மேகலாவுக்குத்தான் எல்லாவற்றிலும் முன்னுரிமை. அவளைச் சுற்றிதான் அனைத்தும் என நடக்க ஆரம்பித்தன.
இப்போது ராமலிஙகத்திற்கு பொறுப்பு கூடியது. ஊரிலிருந்தால் பிழைப்பது கடினம் என எண்ணி, ஏஜண்ட்
ஒருவரைப் பிடித்து மலேசியா செல்ல திட்டமிட்டான். தன் வீட்டில் சீர்வரிசையாகக்
கொடுத்த பத்து பவுன் நகையை எடுத்துக் கொடுத்து, இதை அடகு வச்சி
பணம் ரெடி பண்ணு. அங்க
போயி சம்பாதிச்சி நம்ம பொண்ணுக்கு மலேசியா
பவுனு போட்டுக்கலாம் என்றாள். "எங்கூட பழகலன்னா.. நீ மேல படிச்சி
நல்ல உத்தியோகத்துக்கு போயிருப்பல்ல வளர்.. இப்போ உன் நகையையே வாங்கிட்டுப்
போற நெலமையில நான் இருக்கேன்" என்று
சொல்ல வந்தவனின் வாயப் பொத்தி.. ”ஹ்ம்ம் எடுத்துட்டு போய்ட்டு வா” என்று அனுப்பி
வைத்தாள்.
எல்லாம்
நல்லபடியாக நடந்தது. மகளின் முகத்தை பார்க்காமல் இருக்கப்போகிறோம் என்கிற கவலையைத் தவிற, வேறு எதுவுமில்லை. மலேசியாவுக்குப்
புறப்பட்டான். அங்கு பெரிய மரங்களை கூழாக்கி ப்ளைவுட் தயாரிக்கும் நிறுவனத்தில் மெஷின் ஆபரேட்டராக வேலைக்குச் சேர்ந்தான். ராமு நம்பி வந்த
ஏஜெண்டும் நல்லவர்தான். சொன்னபடி பணத்தைப் பெற்றுக்கொண்டு வேலைக்கு ஏற்பாடு செய்துகொடுத்தார். மூன்று மாதங்களுக்குப் பிறகு, ராமுவின் தாயார் வடிவுக்கு உடல்நிலை சரியில்லை என்று வளர்மதி போனில் சொன்னாள். "அத்தை வெளிக்குப் போகும்போது ரத்தம் வருதுன்னு சொல்றாங்க.. என்ன பண்றதுன்னு தெரியலங்க..
என்றதும், ”நான் கொஞ்சம் பணம்
அனுப்புறேன். நீ பெரியாஸ்பதிரி கூட்டிட்டுப்
போயி பாரு” என்று பதறினான். வளர்மதி குழந்தையைத் தூக்கிக்கொள்ள, ரெங்கசாமியும் வடிவம்மாளும் பஸ் பிடித்து நாகையிலுள்ள
தனியார் மருத்துவமனைக்குச் சென்றனர். டோக்கன் போட்டு காத்திருந்து பரிசோதித்த பின்னர், ”மூலம் மாதிரி இருக்கு. ஆரம்ப ஸ்டேஜ்தான் மாத்திரையில சரி பண்ணிடலாம். காரமா
அதிகம் சாப்பிடாதீங்க” என்று டாக்டர் சொல்லி அனுப்பினார்.
டாக்டர்
கொடுத்த மருந்துகள் கொஞ்சம் கேட்க ஆரம்பித்தது. அதற்குள்... " "ரெங்கசாமி பொண்டட்டி வடிவுக்கு மூல கிரானியாம்ல... அந்த
குட்டி பொறந்த நேரம் எதும் சரியில்லையோ? என்று
ஊருக்குள் ஒரு பேச்சு கிளம்பியது.
இதற்கிடையில் நலம் விசாரிக்க வந்த
சிலர், ஆமைக்கறி சாப்பிட்டா மூலம் சரியாகும், முயல் ரத்தத்தை வதக்கி சாப்பிட்டா சரியாகும், பன்றி இறைச்சி சாப்பிட வேண்டும்.. பன்றியின் ரத்தத்தை சாப்பிட்டால் மூல நோய் குணமாகும்
எனப் மருத்துவ ஆலோசனைகளைத் தூவிச்சென்றனர். மருந்து மாத்திரையில் கொஞ்சம் கட்டுப்படுவதுபோலத் தெரிந்தாலும் மீண்டும் அந்த பிரச்சனை அதிகரிக்க
ஆரம்பித்தது. மலதுவாரத்தில் அரிப்பு, எரிச்சல், மலம் கழிக்கும்போது ரத்தப்போக்கு
என நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போனது. வெளிக்குப்
போகும் இடத்தில் நோய் என்பதை எப்படி
வெளியில் சொல்வது என்று தயங்கித் தயங்கி மருமகள் வளர்மதியை மருத்துவமனைக்கு அழைப்பார் வடிவம்மாள். இதற்கிடையில் முயல் ரத்தம், நரிக்குறவர்களிடம் சொல்லி ஆமைக்கறி எல்லாம் கொடுத்தாயிற்று. ஆமைக்கறியை கொல்லைப்புறத்தில் வீட்டுக்கு வெளியே வைத்து சமைத்து அங்கேயே உண்ணக்கொடுத்தாள் வளர். அதிலும் சரியாகததால், ஸ்ரீராமர் கோவில் காளிக்கு பன்றி பலிகொடுக்கும் உரிமையாளரிடம் பேசி, கொஞ்சம் பன்றி இறைச்சியும் ரத்தமும்கூட வாங்கி வந்து கொடுத்தார் ரெங்கசாமி. அதையும் வீட்டிற்கு வெளியே கல்லைக் கூட்டி வைத்து அடுப்புக்கட்டி சமைத்துக்கொடுத்தாள் வளர்மதி. எதிலுமே வடிவம்மாளின் பிரச்சனை சரியாகவில்லை. குடும்ப ஜோசியர் கனகசுந்தரத்தைப் பார்த்து, அனைவரின் ஜாதகத்தையும் பார்த்தனர்.
அவரோ,
குழந்தை மேகலாவின் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு, “பாப்பா அஸ்வினி நட்சத்திரம் மேஷ ராசில பொறந்திருக்கா..
இப்போ சந்திர திசை நடக்குது. அதுனால
பாட்டிக்கு கொஞ்சம் உடல்நலக்குறைவ ஏற்படுத்தும். காளியம்மன் கோவிலுக்கு போங்கோ. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு போய்ட்டு, தன்வந்திரிக்கு அர்ச்சனை பண்ணா இன்னும் சிறப்பா இருக்கும். கூடிய சீக்கிரமே வீடு கட்டுறது, மனை
வாங்குறது மாதிரி சுபச் செலவுகளை செய்ய ஆரம்பிங்க, அப்படி செஞ்சிங்கன்னா கெட்ட செலவுகளை கட்டுப்படுத்தும். மத்தபடி பயப்படுறமாதிரி ஒண்ணுமில்லை. புள்ளையாண்டான்கிட்ட சொல்லிடுங்க” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.
தன்
கணவன் வெளி நாட்டில் சம்பாதிக்கும்
பணத்தில் பெரும்பகுதி மாமியாருக்கே செலவாகிறதே என்று எண்ணினாலும், தனக்கு எந்தக்குறையும் வைக்காத அன்பான மாமியார் என்பதால் வடிவை நன்கு கவனித்துக்கொண்டாள் வளர்மதி. அதே வேளையில், எத்தனை
நாள்தான் கூரைவீட்டில் இருப்பது? ஜோசியர் சொன்ன விஷயத்தை ராமுவிடம் எடுத்துக்கூறி ஒரு கான்கிரிட் வீடு
கட்டத் துவங்கலாம் என யோசித்தாள். விஷயத்தைக்
கேட்ட ராமு, வீட்டு வேலையெல்லாம் இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சி பாத்துக்கலாம் என்று தள்ளிப்போட.. "அப்போ எல்லா காசையும் உன் அம்மாவுக்கே செலவழிச்சிட்டு
என்னையும் என் பொண்ணயும் தெருவுல
விடப்போற? வயசானவங்களுக்கே எவ்ளோ நாள்தான் செலவு பண்ணிட்டு இருப்ப? நம்ம வாழ்க்கையை பார்க்க
வேண்டாமா?" என்று வார்த்தையை விட்டாள். இது நாள் வரை
வளர்மதி வாயிலிருந்து அப்படி ஒரு வார்த்தையை வந்ததே
இல்லை. என்ன
செய்வது? பெரும்பாலும் வயதானவர்களுக்கு குறிப்பிட்ட வயதைக் கடந்தபிறகு செய்யப்படும் செலவுகள் அனைத்தும் வீண் செலவுகள் என்ற
எண்ணம் பாதை ஓரத்தில் படரும்
நெருஞ்சி முள்போல சிலருக்கு முளைப்பை தடுக்க முடிவதில்லை.
அடுத்த
நொடி அவனுக்கு தோன்றியது ஒன்றே ஒன்றுதான். அவளின் நகையை அடகு வைத்துதான் நாம்
மலேசியா வந்திருக்கிறோம். அதனால்தான் இப்படி பேசுகிறாள் என்று எண்ணினான். இருப்பினும், ஜோசியர் சொன்னதுபோல அம்மாவின் உடல்நிலை சரியானால் நல்லதுதானே.. நாம் கொஞ்சம் கஷ்டப்பட்டு
ஓவர்டைம் பார்த்தாவது செலவை சமாளிக்கலாம் என நினைத்தான். உடனே
வளர்மதிக்கு போன் செய்து, அடுத்த
முகூர்த்தத்துல வீட்டுக்கு மனை போட்ரலாம். நீ
அப்பாகிட்ட சொல்லி அந்த ஜோசியரையே எப்போ
மனைபோடலாம்னு கேக்க சொல்லு என்றான். வளர்மதிக்கு சந்தோஷம் தாங்கவில்லை. அவள் பள்ளித் தோழிகளில்
பாக்யாவின் வீடு மட்டும்தான் மாடி
வீடு. முதன்முறை அவள் வீட்டிற்குச் சென்றபோது
செருப்பை வாசலில் போட்டுவிட்டு நேராக உள்ளே சென்றுவிட்டாள். அதற்கு பாக்யாவின் அம்மா, " என்ன வளர் டைல்ஸ்
போட்ட வீட்டுக்குள்ள வரும்போது கால அலம்பிட்டு வரணும்னு
தெரியாதா? அதுக்குத்தானே வாசல் ஓரத்துல தண்ணி வச்சிருக்கோம். படிக்கிற பொண்ணுதான நீ" என்று கேட்டதும் பெருத்த அவமானமாகிவிட்டது. அதனால், நல்ல வேலைக்குப் போய்
சம்பாதித்து சொந்தமாக ஒரு வீடு கட்ட
வேண்டும். இல்லையேல் வாக்கப்பட்டு போகும் இடமாவது நல்ல மாடி வீடாக
இருக்க வேண்டும் என உள்ளுக்குள் சபதம்
போட்டுக்கொண்டாள். ஆனால், அவை இரண்டுமே அவள்
வாழ்க்கையில் நடக்கவில்லை. அதனால், நாம் சொந்தமாக வீடுகட்டப்
போகிறோம் என்ற எண்ணமே அவளுக்கு
எல்லையில்லா மகிழ்ச்சியைக் கொடுத்தது.
விஷயத்தைக்
கேட்ட ரெங்கசாமி, ”எனக்கும் வயசாகிடுச்சிம்மா.. ஒரு வீட்ட கட்டுனா
கொஞ்ச நாள் இருந்துபாத்துட்டு நடய கட்டுவேன்..
ஆனா ராமுகிட்ட இப்போ சக்தி இருக்கா? அதான் யோசிக்கிறேன்” என்று இழுத்தார். அதன்பின்னர் ஒரு நல்ல நாள்
பார்த்து தற்போது கூரைவீடு இருக்கும் மனைக்கட்டிலேயே வீடு கட்ட மனைபோட்டார்கள்.
அடுத்த நாள் காலையில், வடிவுக்கு
உடல் நலம் மிகவும் மோசமானது.
ஆசனவாய்ப்பகுதியில் ரத்தக்கசிவு ஏற்பட்டு புடவையெல்லாம் ரத்தமாகியது. நாகை பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு சென்றதும்,
பரிசோதித்த மருத்துவர்கள் இன்னும் பல பரிசோதனைகள் செய்ய
வேண்டும். இரண்டு நாட்கள் தங்கியாகவேண்டும் என்றனர். விஷயத்தை கேள்விப்பட்ட வளர்மதியின் பெற்றோர் அங்கு வந்து, உதவியாய் இருக்க, அக்கம்பக்கத்தினரிடம் 2 நாட்கள் மட்டும் வீட்டிலிருக்கும் ஆடு மாடுகளை கவனித்துக்கொள்ளும்படி
கேட்டுக்கொண்டாள்.
ரத்தப்
பரிசோதனை, ஸ்கேன் எல்லாம் முடிந்தபிறகு மருத்துவர்கள் ஒரு முடிவுக்கு வந்தார்கள்.
வளர்மதியை அழைத்து, அவஙகளுக்கு நீங்க என்ன ரிலேஷன்? ”அவங்க
என்னோட அத்தை. என்ன ஆச்சு டாக்டர்?
"ஓகே... அவஙகளுக்கு Anal cancer
advanced stage 4. அதுனால
தீவிர கண்காணிப்புல இருந்தாதான் சரி பண்ண முடியும்"
என்று டாக்டர் சொன்னது சரியாகப் புரியவில்லை."டாக்டர் இன்னும் கொஞ்சம் விளக்கமா சொல்ல முடியுமா?" என்று கேட்டாள். "ஹ்ம்ம்... அவஙகளுக்கு ஆசனவாய்ல புற்றுநோய் வந்திருக்குமா. அத ரொம்ப நாளா
கவனிக்காம மூலம் அது இதுன்னு ட்ரீட்மெண்ட்
கொடுத்திருக்கீங்க. இப்போ சிவியர் ஆகுறதுக்கு முந்தின ஸ்டேஜ்ல இருக்கு. கொஞ்சம் கேர்ஃபுல்லாதான் இருக்கணும்." அதைக் கேட்ட வளர்மதிக்கு தலையில் இடி விழுந்ததுபோல் இருந்தது.
கண்ணாடி அறைக்கு வெளியே அமர்ந்திருந்த பெற்றோரிடமும், மாமனார் ரெங்கசாமியிடமும் இதை எப்படி சொல்வது
என்று பயந்தாள். வேறு வழியில்லை. சொல்லித்தான்
ஆகவேண்டும். விஷயத்தைக் கேள்விபட்ட அனைவரும் அதிர்ந்துபோனார்கள். ரெங்கசாமி வாயில் துண்டைப் பொத்திக்கொண்டு ஓரமாகப் போனார்.
விஷயத்தை
கேள்விபட்ட ராமு நொருங்கிப்போனான். நண்பர்களிடம் விசாரித்து,
தெரிந்த மருத்துவர்களிடம் ஆலோசனைப் பெற்று, அம்மாவை தஞ்சையில் உள்ள ஒரு மருத்துவமனைக்குக்
கூட்டிச் செல்லுமாறு வளர்மதியிடம் கூறினான். மாதத்திற்கு இரண்டுமுறை செக்கப் சென்று வந்துகொண்டிருந்தனர். ஆனால், புற்றுநோய் அடுத்த நிலையை சில மாதங்களில் எட்டிவிட்டது.
அடிப்படை போட்டதோடு வீடு நின்றுபோக, ராமு
சம்பாதித்து அனுப்பும் பணமெல்லாம் அம்மாவின் மருத்துவச் செலவுக்கே சென்றது. "இனிமே நான் பொழைக்கப் போறதில்லப்பா..
இருந்து என்ன பண்ண போறேன்..
நீங்க வீட்டு வேலைய ஆரம்பிங்க" என்று அம்மா புலம்பிக்கொண்டே இருந்தார். கீமோவின் அடுத்த நிலை சிகிச்சைக்கு மருத்துவர்கள்
பரிந்துரைத்தார்கள். அதாவது புற்றுக்கட்டி ஆசனவாய்ப்பகுதியைத் தாண்டி குதம், மலக்குடல், பெருங்குடல் வரை பாதிக்கத் துவஙகியது.
அதனால், APR எனப்படும் Abdominoperneal
Resection அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். அதைச் செய்தால், வடிவம்மாளால் வலியுடன் கூட மலம் கழிக்க
முடியாது. "அடக்கடவுளே... நான் யாருக்கு என்ன
பாவம் செஞ்சேன். சாப்டாமக் கூட இருந்திடலாம்.. வெளிக்குப்
போகாம வாழ்க்கை முழுக்க இருக்கணும்னா.. இது
என்ன கொடுமை? என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதாள் வடிவு.
”ஆத்தா பாவம்.. அழுவுதும்மா" என்று குழைந்து சொன்ன மேகலாவை கட்டியணைத்துக்கொண்டு வளர்மதியும் விசும்பினாள். ”வீட்டுக்குள்ள நெருப்பு எறும்பு வந்தா கரையான் மருந்துகூட போடாம, வெளக்கமாத்தால கூட்டித் தள்ளுவியே.. உனக்கா இப்டி வரணும்? கடவுளே உனக்கு கண்ணில்லையா? நான் கும்புடுற முனியய்யாவே
என்னை கைவுட்டுட்டாரே..!" என்று தலையில் அடித்துக்கொண்டார் ரெங்கசாமி.
APR செய்வதற்கு
நாள் குறித்தார்கள். வேதனையுடன் வேலைக்குச் சென்ற ராமுவிற்கு, ஒன்றுமே புரியவில்லை. இவ்வுலகில் நியாயம், தர்மம் என்று எதுவுமே இல்லை. அப்படி ஏதுமிருந்தால் என் அம்மாவுக்கு ஏன்
இப்படி ஒரு நோய் வரப்போகிறது
என்று எண்ணி களைத்திருந்தான். அன்று மரங்களை மெஷினில் லோட் செய்து, மெல்லிய
தாள்போல செதுக்கி எடுக்கும் செக்ஷனில் நின்று
லோட் செய்துகொண்டிருந்தபோது, அவனின் இடதுகை தடுமாறி பிளேடில் பட்டு, சுண்டுவிரலில் பாதி எங்கேயோ போய்
விழுந்தது. மயங்கி விழுந்தவனை அருகிலிருந்த ஊழியர்கள் தூக்கி மருத்துவமனையில் சேர்த்தார்கள். அதிக ரத்தம் போகவில்லை.
விரைவாக முதலுதவி செய்திருக்கிறீர்கள் என்று மலாய் மொழியில் பாராட்டினார் மருத்துவர். ரத்தமெல்லாம் ஏற்கனவே கண்ணீராய் வெளியேறியது மருத்துவருக்குத் தெரியாதல்லவா? பாவம் அவர் மலாய் மொழி
மருத்துவர் வேறு. கண் விழித்துப் பார்த்த
ராமுவிற்கு, வளர்மதியிடமிருந்து போன் வந்திருந்தது. திரும்ப
அழைத்தான். "அத்த... நம்பளவிட்டு போய்ட்டாங்கங்க.." என்று அழுதாள். ஓ என்று கத்தி
அந்த மாடியிலிருந்து குதித்துவிட வேண்டும்போல இருந்தது. தன்னைப் படைத்த அந்த கடவுள் மட்டும்
எதிரில் வந்தால் முதல் கொலை அவனைத்தான் செய்வேன்
என்று குமுறினான். பின்னர், நிலைமையை ஃபேக்டரி மேனேஜரிடம் எடுத்துக் கூறி, உடனடியாக ஊருக்குக் கிளம்பினான். கிளம்பும்போது, அம்மாவுக்கு வாங்கிவைத்த சேலை, குழந்தைக்கு வாங்கிவைத்த பொம்மைகள் சிலவற்றையும் அவசர அவசரமாக எடுத்துக்கொண்டு
ஏர்போட் விரைந்தான்.
தாய்க்கு
தலைச்சன் பிள்ளை, தகப்பனுக்கு இளைய பிள்ளை என்ற
கதையெல்லாம் அங்கு இல்லை. ராமு மட்டுமே ஒரே
பிள்ளை என்பதால் இறுதிச்சடங்கு செலவுகள் அனைத்தையும் அவனே செய்ய வேண்டிய
நிலை. மீதமிருந்த சில ஆயிரம் ரூபாய்களையும்
கட்டதளையில் போட்டுவிட்டு வெறுங்கையோடு வீடு திரும்பினான். மாதஙகள்
சில ஆகின. அம்மா பட்ட கஷ்டங்களும், அம்மா
இல்லாத வீட்டின் வெறுமையும் வாட்டி வதக்கியது. "ராமு .. அம்மாவையே நெனச்சிகிட்டு இருக்காதடா... புள்ளையப் பாரு.. அவளுக்கு விடுதலை கிடைச்சிடுச்சிடா. நீயே யோசிச்சிப் பாரு.
அந்த கஷ்டத்தோட அவ இருந்தா..அதை
பாத்து நம்மளால என்ன பண்ணியிருக்க முடியும்?
ஏதோ...அவ இப்படி போய்ச்
சேரனும்னு விதி இருந்திருக்கு. அதை
யாரால மாத்த முடியும்?" என்று கேட்டுவிட்டு எழுந்துபோனார் ரெங்கசாமி.
லாரி
பொம்மையையில் மணலேற்றி விளையாடிக்கொண்டிருந்த மேகலாவைப் பார்த்தான். வாடா தங்கம் அப்பா
உன்ன ஒரு ரவுண்ட் கூட்டிட்டுப்
போறேன் என தோளில் தூக்கிக்கொண்டு
கிளம்பினான். அப்போது அருகிலிருந்த தென்னை மரத்தில் கருப்பு நாய் ஒன்று காலைத்
தூக்கி ஒண்ணுக்கு அடித்துவிட்டு ஓடியது. அதைப் பார்ப்பதற்கு தண்ணீரால் வரையப்பட்ட மலைபோலிருந்தது. அதன் அழகைப பார்த்த
ராமு, சுப்பையா கடைக்குச் சென்று ஜெல்லி மிட்டாய், முறுக்கெல்லாம் வாங்கிக்கொண்டு திரும்பினான். திரும்பி வரும் வழியில் "அப்பா எனக்கு ரிமோட் காரு... பெருசா வங்கித் தரியா?" என்று தோளில் உக்கார்ந்திருந்த மேகலா கேட்க, "வாங்கித்தரேன் டா.. நாளைக்கு திரௌபதி
அம்மன் கோவில் திருவிழா இருக்குல்ல.. அங்க வாங்கித் தரேன்"
என்றதும் "ஐ...ஜாலி.. அப்புறம்...
இனிப்பு சேவு, புது ட்ரெஸ் எல்லாம்
வாங்கித் தரணும்".. " சரி.. எல்லாம் நாளைக்கு வாங்கிடலாம்" என்று சொல்லிக்கொண்டே நடந்துகொண்டிருந்தான் ராமு. என்ன செய்வது? நாளை
என்ற ஒன்று இருப்பதனால்தான் பணமில்லாதவர்களின் இன்றைய பொழுது மகிழ்வாய் கழிகிறது. வரும் வழியில் நாய் மூத்திரமடித்து வைத்திருந்த
தென்னை மரத்தைக் கவனித்தான். ஓவியம்போல ஒட்டியிருந்த நாயின் மூத்திரம் வெயிலில் காய்ந்து காணாமல் போயிருந்தது. நம்முடைய சின்ன சந்தோஷங்கள் இந்த நாயின் மூத்திரத்தைப்
போல காணாமல் போய்விடுகின்றன. அப்படியே கஷ்டங்களும் மறைந்துபோனால் எப்படி இருக்கும் என்று எண்ணங்கள் எழுந்தன. அப்போது அவன் முகத்தில் ஓர்
இலுப்பைப் பூ விழுந்தது. அண்ணார்ந்து
பார்த்தான் ஒரு காகம், இலுப்ப
மரக் கிளையில் மூக்கை தேய்த்துக்கொண்டிருந்தது.
-வீரா
Comments
Post a Comment