Zombies vs India
இரண்டு வாரங்களுக்கு முன்பு செபி விருது விழாவுக்கு மும்பை சென்றேன். அப்போது ராகேஷ் ஜுஞ்ஜுன்வாலாவின் Low cost airline-ல் பயணித்தது குறித்து இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போட்டு அது thread-ல் விரிந்து சென்றவுடன் பலரும் என்னை வந்து திட்டித் தீர்த்தார்கள். அடுத்தவர்களை திட்டுவதற்காகவே உருவாக்கப்பட்ட தளம்போல் threads தோன்றியது. பேசாமல் அதை thread என்று வைப்பதற்கு பதில் thitts என்று வைத்திருக்கலாம் போல. சரி.. என்ன நடந்தது? நான்காயிரத்து சொச்ச ரூபாய்க்கு டிக்கெட் முன்பதிவு செய்து நானும் மோகனும் மும்பைக்குச் சென்றோம். இரண்டுபேருக்கும் சேர்த்து ஒன்பதாயிரம் ரூபாய்க்கு நெருக்கமாய் பயணக்கட்டணம் இருந்தது. ஆகாஸா விமானத்தில் பயணிக்கப்போகிறோம் எனும்போதே ராகேஷ் மிகக்கம்மியான விலையில் விமான சேவையைக் கொடுக்கப் போகிறேன் என்று வந்தாரே எப்படி இருக்கும் அந்த சர்வீஸ் என்ற ஆர்வம் துளிர்த்தோடியது. ஆனால் நிலைமை தலைகீழ்தான். "Enjoy Your Legroom facility" என்று அழகாக பயணச்சீட்டில் போட்டு வைத்திருக்கிறார்கள். உள்ளே போய் அமர்ந்தால், விழுப்புரம் செல்லும் மூன்று சீட்டு பேருந்தில் முன் சீட்டில் முட்டியை முட்டுக்கொடுத்து அமர்வதுபோலத்தான் அமர முடிந்தது. ஆறு அடிக்கு மேல் உயரமாக இருப்பதால் நமக்கு எங்கபோனாலும் இந்த பிரச்சனைதான் என்று ஆசுவாசப்படுத்திக்கொள்ளலாம் எனப் பார்த்தால், பக்கத்தில் பார்த்திவ் படேல் போல ஒரு டெல்லிக்கார் உக்கார்ந்திருந்தார். அவர் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்க போஸ் கொடுப்பதுபோலவே மும்பை வரைக்கும் அமர்ந்திருந்தார். இதற்கிடையில், உணவு வினியோகம் செய்ய ட்ராலியை தள்ளிக்கொண்டுவந்த ஏர் ஸ்டீவார்ட், மோகனின் முட்டியில் ஒரு ஏத்து ஏத்தினார். பிக் பாஸ் ரவீந்திரன் போன்றவர்களால் அதில் எப்படி நடக்க முடியும் எனத் தெரியவில்லை. ஒரு சூப்பி நூடுல்சை 300 ரூபாய்க்கு விற்றனர். ஆனால் பல ஆண்டுகளாக இந்தியாவில் பறந்துகொண்டிருக்கும் ஸ்பைஸ் ஜெட் போன்ற விமானங்களில் இந்த பிரச்சனை இல்லை. கால்களை நீட்டிவிடும் அளவுக்கு Legroom வைத்திருக்கிறார்கள். நமக்கே இப்படி என்றால், நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த குடிமகன்கள் யாராவது தட்டுத்தடுமாறி ஏறிவிட்டால் என்ன கதி ஆவார்கள் என்று யோசிக்கிறேன்.
இந்த விஷயத்தைதான் சுருக்கமாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டேன். அது திரட்டுக்கு சென்றதும், அங்கே பலரும் ஆகாசா ஏர் நிறுவனமே அவர்களுடையதுதான் என்பதுபோல கொந்தளிக்க ஆரம்பித்துவிட்டனர். மூன்று மணி நேரம் உன்னால uncomfortable-ஆல் உக்கார முடியாதா என்று ஒருவர் கேட்கிறார். இவனெல்லாம்.. இங்க வந்து போஸ்ட் போடுவான், ஆனா கஷ்டப்படுறவங்கள்ட்ட பேரம் பேசிகிட்டு இருப்பான் என்கிறார் மற்றொருவர். வசதி குறைவானவர்கள் பயணிக்க அவர் (ராகேஷ்) சேவை செய்கிறார் எதை எதற்கு குறைசொல்கிறாய் என்று ஒருவர் கடிக்கிறார். இப்படி பல வசைகள் வந்து குவிந்தன. இதில் உச்சகட்டமான பின்னூட்டமே மூன்று மணி நேரம் உன்னால Uncomfortabe- ஆ உக்கார முடியாதா என்று கேட்டதுதான். ஏன் இவர்கள் இப்படி இருக்கிறார்கள்? இதற்குப் பின்னால் உள்ள காரணம் என்ன? என்று யோசித்தால், இது சாதாரண விஷயம் அல்ல. இதற்குப் பின்பு, மிகப்பெரிய சமூகப் பொருளாதார அரசியல் கட்டமைப்பு உள்ளது எனத் தோன்றியது. அதனால்தான் இதை எழுதுகிறேன்.
இந்தியா என்பது 147 கோடி மக்கள்தொகைக் கொண்ட பெரிய நாடு. இதில் 80 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் குறைந்த ஆண்டு வருமானம் ஈட்டக்குடியவர்கள்தான். ஆங்கிலேயர்களின் ஆட்சிக்குப் பிறகு, உலகின் மிகெப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா உருவெடுக்கிறது. அதன்பின்னர் அரசியல் ரீதியிலான விடுதலை இந்தியர்களுக்கு கிடைக்கிறது. ஆனால், பொருளாதார விடுதலை இன்று வரை கிடைக்கவே இல்லை. பாலைவன மணலில் படுத்து கிடந்தவனுக்கு கோரைப்பாய் கிடைத்ததுபோலத்தான் இந்திய சமூகத்தின் வளர்ச்சி இருந்திருக்கிறது. இந்தியா சோசியலிஸத் தன்மையுடைய ஜனநாயக நாடாக வளரும்போது, இருப்பதை வைத்து திருப்தியடைவதுதான் வாழ்க்கை என்று ஆழ்மனதிற்குள் பதி்ந்து அது இந்தியர்களின் டி.என்.ஏ சுருளில் பின்னிக்கொண்டது. அதனால்தான் service என்று சொன்னாலே நேரடியாக சேவை என்று மட்டும் புரிந்துகொள்கிறோம். அதில் Free Service, Paid service என்று இருப்பதும் அதன் முழு விவரமும் அறியாமலேயே பலர் காலத்தைத் தள்ளுகிறார்கள். இலவச சேவையாக இருந்தாலும் அது மக்களின் வரிப்பணத்தில்தான் செய்யப்படுகிறதே தவிற, யாரும் சொந்த பணத்தை செலவு செய்து சேவையளிப்பதில்லை. அதனால் ஒரு ரூபாய்க்கு நீங்கள் ஒரு சேவையைப் பெற்றாலும், அதற்குண்டான திருப்திகர சேவையைக் கொடுத்துதான் ஆகவேண்டும்.
இங்கு அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரம், விளிம்பு நிலை மக்களின் மேல் ஏகாதிபத்திய மனோபாவத்தை செலுத்துவதாகவே இருக்கிறது. மேலும், அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் இவை அனைத்தையும் தங்களுக்கு சாதகமாக வளைந்துகொடுக்க வைப்பதாகவே இருக்கிறது. அதனால், ஜனநாயக முகமூடி அணி்ந்த சர்வாதிகார நாட்டில் வாழ ஒவ்வொரு நாளும் பழகிக்கொள்ளும் இந்தியர்கள், அவர்களின் அடுத்த தலைமுறையையும் அதற்கு பழக்குகிறார்கள். அதற்கான நிறுவனங்களையும் அமைப்புகளையும் நிறுவுகிறார்கள். அவை, அவர்களை அதிகார அமைப்புகளுக்கு மிகுந்த நம்பிக்கையோடு கீழ்ப்படியும் மனநிலையுள்ள நவீன அடிமைகளை உருவாக்கும் தொழிற்சாலைகளாக செயல்படுகின்றன. அவர்களின் நேர்மை எப்படிபட்ட்டது தெரியுமா? ஓட்டுக்கு ஒரு வேட்பாளரிடம் பணம் வாங்கிவிட்டால் மற்றொரு வேட்பாளரிடம் பணம் வாங்க தயங்கும் நேர்மை. அப்படியே இரண்டு வேட்பாளர்களிடம் பணத்தை வாங்கிவிட்டாலும், யாரோ ஒருவருக்கு வாக்களித்துவிட்டு, அவரிடம் பணம் வாங்கிவிட்டு வாக்களிக்கவில்லையே என்று குற்ற உணர்ச்சியில் குமையும் நேர்மை. இந்த நேர்மைதான் இந்தியாவிற்கு இருக்கும் பேராபத்து.
இந்த மனநிலையில் வளரும் குழந்தைகளும் வளர்ந்தவர்களும் ஒரு நாளும் தனக்கான உரிமையை போராடி பெற மாட்டார்கள். அவர்கள் போராடிப் பெற நினைத்தால்கூட, அதற்கு சமூக கட்டமைப்புகள் தடையாய் நிற்கும். இவர்களுக்கு Comfort என்பதற்கும் Luxury என்பதற்கும் வேறுபாடு தெரியாது. Comfort என்றால் ”வசதி” அல்லது ”சௌகர்கம்” பொருள். Luxury என்றால் “சொகுசு” என்று பொருள். நாம் யாரையாவது சந்தித்தால் சௌகர்கயமா இருக்கீங்களா? என்று கேட்போமே தவிர வசதியாய் இருக்கீங்களா என்று கேட்க மாட்டோம். ஏனென்றால் வசதி என்பது ”மிகுந்த பொருளோடு இருத்தல்” என்று நம் ஆழ் மனதில் பதியவைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் வசதி என்பதற்கு அர்த்தம் அதுவல்ல. ஒருவருக்கு அடிப்படைத் தேவைகள் பூர்த்தியானால் அது வசதிதான். ஒரு பேருந்திலோ, ரயிலிலோ விமானத்திலோ எந்தவித இடைஞ்சலும் இல்லாமல் உக்கார முடிந்தால் அதற்குப் பெயர் வசதி அல்லது சௌகர்யம். அதாவது comfortness.
ஆனால் Luxury என்ற வார்த்தைக்கு "excess, extravagance, magnificence," என்று ஆங்கிலத்தில் பொருள். ஒருவரின் அடிப்படைத் தேவைகள் தாண்டி, எல்லாம் தனக்கு வேண்டும் என சேர்த்து வைத்துக்கொள்ளுதல் Luxury. இதற்கு தமிழில் ”சொகுசு” என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம். Luxuria எனும் லத்தின் சொல்லிலிருந்து மருவிய Luxury என்ற சொல்லுக்கு பல வரலாறு இருக்கிறது. மார்க்ஸின் தத்துவப்படி Luxury என்ற வார்த்தை கம்யூனிசத்திற்கு எதிரானது. பெரும் முதலாளிகளும் அரசர்களும் மக்களை சுரண்டி சேர்த்த செல்வங்களில் கொழித்த வாழ்க்கையை குறிக்கக்கூடிய ஒரு சொல் பதம். அப்படிப்பட்ட ஒரு வார்த்தை இந்தியாவில் எதற்குப் பயன்படுகிறது? வருடத்தில் கிட்டதட்ட பத்து மாதங்கள் பெரும்பாலான பகுதிகள் வெப்பமாகவே இருக்கும் இந்தியாவில் AC ஒரு Luxury item என்ற வரையறைக்குள் அடைத்து அதற்கு 28% வரி செலுத்துங்கள் என்று சொல்ல கடந்த செப்டம்பர் மாதம் வரைக்கும் பயன்பட்டது. தற்போது அதை Luxury item -லிருந்து நீக்கி 18 சதவீதமாக குறைத்திருக்கிறது அரசு. இந்திராகாந்தி அம்மையார் ஆட்சிகாலத்தில் கலர் டிவியும் Luxury item-ஆக இருந்தது என்பது தனிக்கதை.
சொகுசு பங்களா, சொகுசு கார் என்ற பதத்தை நீங்கள் அடிக்கடி செய்திகளில் கேட்டிருக்கலாம். சொகுசு கார் என்று வரையறுக்கப்படும் கார்களுக்கு 40 சதவீதம் வரை GST மட்டுமே விதிக்கப்படுகிறது(கலால் வரி, சாலை வரி தனி). இப்போது ஒரு கேள்வியை நீங்கள் திருப்பி கேளுங்கள்.. இவர்கள் சொகுசு அல்லாத கார்களாக சொல்லும் சிறிய ரகக் கார்களில் நீங்கள் வசதியாகவும் (Comfort), பாதுகாப்பாகவும் பயணிக்க முடியுமா? அல்லது சொகுசு கார் என்று அரசு வகைப்படுத்தும் பெரிய ரக கார்களில் பாதுகாப்பாகவும் சௌகர்யமாகவும் பயணிக்க முடியுமா? இரண்டு வகை கார்களிலும் பயணித்தவர்களுக்கு அந்த வேறுபாடு நன்றாகத் தெரியும். அதேபோல், ஒரு வெளிநாட்டு நிறுவனம் அந்த நாட்டில் விற்கும் கார்களின் பாதுகாப்பு அம்சங்களும், இந்தியாவில் விற்கும் கார்களில் உள்ள பாதுகாப்பு அம்சங்களும் ஒன்றுபோல் இருக்காது. அப்படி பாதுகாப்பு அம்சங்கள் மிகுந்திருக்கக்கூடிய கார்களை நீங்கள் வாங்க நினைத்தால் அவர்கள் சொல்லும் Luxury கார்களைத்தான் வாங்க வேண்டும். அது எல்லாம் நமக்கு எட்டாத ஒன்று. நாம் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டே வாழ்க்கையைத் தள்ள வேண்டியதுதான் என எண்ணிக்கொண்டே காலம் தள்ளிவிடுகிறோம். ஏனெனில் நாம் அப்படித்தான் பழக்கப்பட்டிருக்கிறோம்.
ஆனால், பொருளாதாரத்திலும் வாழ்க்கை தரத்திலும் மேம்பட்டிருக்கும் ஐரோப்பியர்களிடம் இந்த மனோபாவம் இல்லை. அவர்கள் தங்கள் மீது அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறார்கள். பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெற்றிருந்தாலும் எந்த இடத்திலும் தங்களுக்கான உரிமைகளை விட்டுத்தருவதில்லை. நம் நாட்டின் நிலை வேறு. அரசியல் செய்வோருக்கு மக்களின் பொருளாதார வளர்ச்சித் தேவையில்லை. நாட்டில் ஏழைகள் அதிகமாக இருந்தால்தான் உங்களின் ஏழ்மையை நான் ஒழிப்பேன் எனப் பேசி ஓட்டு கேட்க முடியும். சில நூறுகளைக் கொடுத்து மிகப்பெரிய மாநாடுகளை நடத்த முடியும். நாம் நம்பியிருக்கும் அமைப்புகள் அனைத்தும் இந்த கட்டமைப்புகளை தொடர்ச்சியாக செய்துகொண்டேதான் இருக்கும். பொருளாதார அடிமை மனநிலையை விதைத்துக்கொண்டேதான் இருக்கும். இதிலிருந்து விடுதலைப் பெற்றுத் தரக்கூடிய ஒரு தலைவனை நாம் தேர்ந்தெடுத்தாலும்கூட இந்த சுழலில் சிக்கிக்கொள்ளும் வாய்ப்புகளே அதிகம். நாம் அட்ஜெஸ்ட் செய்துதான் வாழ வேண்டும். கொடுப்பதை பெற்றுக்கொண்டு அமைதியாய் இருக்கவேண்டும் என்ற மனோபாவம்தான் இந்தியர்களை பிடித்திருக்கும் மிகப்பெரிய பீடை. அதிலிருந்து நாம் வெளிவரும்போதுதான் பொருளாதார சுதந்திரக் காற்றை சுவாசிக்க தயாராவோம். நன்றி!
வீரா
27-11-2025
Comments
Post a Comment