அன்னமிட்ட கை

என்னையும் மீறி எனக்கு சில எதிர்மறை எண்ணங்கள் வந்துபோகும். அது பெரும்பாலும் நெருங்கியவர்களின் இறப்பாக இருக்கும். அதுபோன்ற எண்ணங்கள் உதிக்கும்போதெல்லாம் "இல்லை அவ்வாறு நடக்கக் கூடாது" என்று மனதுக்குள் வேண்டிக்கொள்வேன். அப்படி சமீபத்தில் வந்துபோன எதிர்மறை எண்ணம் கார்த்தியின் அம்மா இறந்துவிட்டார் என்ற செய்தி. இந்தத் தகவலை யாரோ எனக்கு தொலைபேசி சொல்வதாக அந்த எண்ணம் தோன்றி மறைந்தது. இல்லை... இது நடக்கக்கூடாது. கார்த்தியின் அம்மாவுக்கு மண்ணுலகைவிட்டுப் பிரியும் வயது கிடையாது என்று உறுதியாய் மனதில் நிலைநிறுத்திக்கொண்டேன். ஆனால், இயற்கையின் விதிக்கு முன்னால் அற்ப மனிதன் நான் என்ன செய்துவிட முடியும்? எல்லாம் முடிந்துவிட்டது. கடந்த ஏழாம் தேதி மாலை நண்பன் ஒருவனிடமிருந்து தொலைபேசி அழைப்பு. "கார்த்தியோட அம்மா இறந்துட்டாங்களாம்டா" என்றான். எனக்குள் தோன்றி மறைந்த அந்த எண்ணம் உண்மையாகிவிட்டிருந்தது. என்ன செய்வதென்று தெரியவில்லை. உடனடியாக கிளம்புகிறேன் என்று அழைப்பைத் துண்டித்துவிட்டு அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்தேன். கார்த்தியும் அழைத்து தகவலைச் சொன்னான். எப்படி ஆச்சு.. ஈவ்னிங் தான உங்கிட்ட பேசுனேன். அப்போ நல்லாதான இருந்தாங்க? என்று கேட்கும்போது... "இல்ல பங்கு ஒரு வாரமா ஹாஸ்பிட்டல்லதான் இருந்தாங்க. டயாலசிஸ் போய்கிட்டு இருந்துது. வழக்கம்போல அம்மா டயாலசிஸ் முடிச்சிட்டு ரெகவர் ஆகி வந்துடுவாங்கன்னு நெனச்சேன். ஆனா கார்டிகாக் அரஸ்ட்டுடா" என்றான்.

அம்மா பட்ட கஷ்டத்திலிருந்து விடுபடுவதற்காக மரணம் நெருங்கி வந்திருக்கிறது என நினைத்துக்கொண்டு தஞ்சை கிளம்பினேன். ஆமாம், கார்த்தியின் அம்மா பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமில்லை. சிறுநீரக செயலிழப்பால் கிட்டதட்ட ஆறு வருடங்களாக டயாலசிஸ் பண்ணிக்கொண்டிருந்தார்கள். நடமாட்டியமாக இருந்த அவர், கடந்த ஆறு மாதங்களாக படுத்த படுக்கையாகிவிட்டார். நான்கு மாதங்களுக்கு முன்பு வீட்டிற்கு சென்றபோது அம்மாவிடம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். கைகள் சுருங்கி உடல் மெலிந்து வயிறு உப்பியிருந்தது. ஆனாலும் "ஒரு புள்ளையோட நிறுத்திட்டியா? இன்னொரு புள்ள பெத்துக்கலயா" என்று வழக்கமாக என்னிடம் கேட்கும் கேள்வியைக் கேட்டார். சிரித்துக்கொண்டே உடல்நிலைப் பற்றியும் உறவினர்கள் பற்றியும் கேட்டுக்கொண்டிருந்தேன். பேசிக்கொண்டே இருந்தவர் திடீரென அழ ஆரம்பித்தார். சொல்ல வந்த வார்த்தைகள் தொண்டையை இறுக்கிப் பிடித்து கண்களால் கசிந்தன. எதிரில் இருக்கும் பழைய புகைப்படங்களைப் பார்த்து..பார்த்து அக்கா இப்படிதான் அழுவுது என்று கார்த்தியின் சித்தி என்னிடம் சொல்ல, நான் அம்மாவின் கையை பற்றிக்கொண்டேன். எப்போதுமே உடலைவிட மனது வேகமாக ஓடிவிடுகிறதுதானே..? நடக்க வேண்டும், பழையபடி எல்லாம் செய்யவேண்டும் என்ற ஆசை உடலின் இயலாமையைக் கண்டு கொந்தளிக்கிறது. அந்த கொந்தளிப்பை அமைதிப்படுத்த கண்ணீர் வருகிறது.

சுருங்கி மெலிந்திருந்த கைகளைப் பார்க்கும்போது, எத்தனை முறை இந்த கையால் சாப்பிட்டிருப்பேன்? கணக்கேதும் உண்டா? மூன்றாம் ஆண்டு கல்லூரி காலத்தில் பெரும்பாலும் மதியச் சாப்பாடு அம்மாவின் கைகளால்தான் இருக்கும். எனக்கு மட்டுமல்ல... பத்து நண்பர்களுக்கு அங்குதான் சோறு. புள்ளைங்க வரும் என பெரிய அண்டாவில் சோறு வடித்து, குழம்பு, கூட்டு, பொறியல் செய்து தயாராக இருக்கும். சில நாட்கள் இரவும் அங்கேயே சாப்பிட்டுவிட்டு படுத்துக்கொள்வோம். அம்மா மட்டுமல்ல.. கார்த்தியின் மூன்று தங்கைகளும் "சாப்டுங்கண்ணேன்.. சாப்டுங்கண்ணேன்" என்று பாசத்தைக் கொட்டும் பாச மலர்கள்.

நண்பன் ஒருவனுக்கு கல்லூரி அட்மிஷனுக்காக 35 ஆயிரம் கட்ட வேண்டும். பணம் ATM- ல் சிக்கிக்கொள்கிறது. அவன் வீட்டிலிருந்து உடனடியாக அந்த தொகையை போட்டுவிட வழியில்லை. இந்த விஷயத்தை கார்த்தி அம்மாவிடம் சொன்னதும், "நீயும் என் புள்ளதான்ப்பா" என்று பக்கத்து வீட்டில் பணத்தை வாங்கிக்கொடுத்திருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு நண்பன் சிவா மின்சாரம் தாக்கி இறந்துபோனபோது, என் நண்பன் பிரபுவின் அப்பா " ஐயோ...புள்ளைக்கு எப்படி வலிச்சிருக்கும்" என்று அதிர்ந்தாராம். அதைச் சொல்லிவிட்டு "மச்சான் நாம வளந்துட்டோம்னு நெனச்சிகிட்டு இருக்கோம். ஆனா எங்க அப்பா இன்னும் குழந்தையாதாண்டா பாக்குறாரு போல" என்றான். சரிதான் குழந்தைகள் என்று வரும்போது எல்லா இடங்களிலும் அம்மாக்களும் அப்பாக்களும் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள் இல்லையா? இப்படி பல விஷயங்கள் மனதில் ஓடிக்கொண்டிருந்தபோது, "எனக்கு ஒண்ணும் பெருசா ஆசையில்ல... வலியில்லாம போய்ட்டேன்னா போதும்" என்றார். ஏன் இப்டியெல்லாம் சொல்றீங்க.. சரியாகிடும்மா" என்றேன். அதன்பின்னர் ஐஸ் பெட்டிக்குள்தான் அவரைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.

மரணம் இயற்கையானதுதான் என்றாலும் அதற்காக நிகழ்த்தப்படும் சடங்குகள் நம்மை ஏதோ செய்துவிடுகின்றன. வீட்டிற்கு வெளியே அம்மாவின் உடலைக்கொண்டு வந்து வைத்து செய்த சடங்குகள் அனைத்தையும் அருகிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தேன். இளம்வயதில் கணவரை இழந்து, தனியொரு பெண்ணாக மூன்று பிள்ளைகளையும் ஆளாக்கி, அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்து பேரன் பேத்திகளையும் பார்த்துவிட்டு அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கிறார். புடவைகளைப் போர்த்தி, நெல் மணிகளைக் கொட்டி, கையை இழுத்து மடியில் வைத்துக் கட்டி உங்களுக்கான வேலை முடிந்தது, வாருங்கள் பத்திரமாக அனுப்பி வைக்கிறோம் என்று சடங்குகளை செய்பவர்கள் சொல்வதுபோல் இருந்தது. எல்லாவற்றையும் நிதானமாகச் செய்துகொண்டிருந்தான் கார்த்தி. அவனுடைய அகண்ட தோள்கள் இவற்றைத் தாங்கக்கூடியவைதான் என்பதுபோல நிதானமாக இருந்தான் கார்த்தி. இந்த நாளுக்காக மனதளவில் தயாராகிவிட்டவன்போலவே எனக்குத் தோன்றியது. பெரும்பாலும் சிறுவயதில் தந்தையை இழந்துவிடும் பிள்ளைகள் சுயம்புவாக தன் குடும்பத்தை முன்னேற்றுகிறார்கள். தீய பழக்கங்களுக்கு அடிமையாவதில்லை என்பது என் அனுமானம். அதற்கு அவன் ஓர் உதாரணம் என்பேன்.

என்னதான் திடமான மனிதனாக இருந்தாலும் தாயின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கும்போது வலிக்காமலா இருக்கும்? தங்கைகளை நல்ல இடத்தில் திருமணம் செய்துகொடுத்து, சொந்தங்கள் மத்தியில் செல்வாக்கான வாழ்க்கையை வாழக் கற்றுக்கொண்டவன், அவனுக்காக ஓடவும் உழைக்கவும் ஒரு கூட்டத்தையே கட்டமைத்து வைத்திருக்கிறான். தான் அழுதால் எல்லோரும் உடைந்துபோவார்கள் என்று எத்தனை வருடங்கள் கண்ணீரை சேமித்தானோ தெரியவில்லை. யாருக்கும் தெரியாமல் அவனுக்கான இருள்வெளியில் அழுது தீர்த்திருக்கக்கூடும். அன்று எல்லாம் முடிந்துவிட்டது, இனி ஆகவேண்டியதைப் பார்ப்பதுதான் குடும்பத்தலைவனுக்கு அழகு என்பதுபோல அம்மாவின் இறுதிச்சடங்கில் நின்றுகொண்டிருந்தான்.

இளம்வயதில் கணவனை இழந்து, மூன்று பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்கிய அம்மா, வெறும் உடலாக ஐஸ் பெட்டிக்குள் கிடத்தி வைக்கப்பட்டிருந்தார். நல்ல எண்ணத்தோடு எத்தனையோபேருக்கு உதவிய, என்னைப்போன்ற பலரை தன் பிள்ளையாக நினைத்து சோறுபோட்ட அந்த அன்னையின் கைகள் கட்டப்பட்டு இருந்ததை பார்க்க முடியவில்லை. இவ்வளவு புண்ணியம் செய்த ஒருவருக்கு ஏன் இப்படி உடல்நலம் குன்றவேண்டும்? வாரத்திற்கு ஒருமுறை டயாலசிஸ் என்று ஏன் வலியைக் கொடுக்க வேண்டும் என இயற்கையெனும் மாபெரும் சக்தியை நிற்கவைத்து வினா எழுப்புகிறேன். ஒவ்வொரு முறையும் நெருங்கியவர்களும், நல்லோரும் என்னைவிட்டுப்பிரியும்போது "நிலா ஏம்மா அழுக்கா இருக்கு" என்று தாயிடம் கேட்கும் ஐந்து வயது சிறுவனைப்போல் ஏன் இப்படி நடக்கணும் என்று எல்லாம் வல்ல பேராற்றலிடம் கேள்வி கேட்கிறேன். தாயைப் போல ஒரு நாளும் அது பதில் சொன்னதே இல்லை.

அம்மாவை வீட்டிலிருந்து எடுத்துச் சென்று மயானத்தில் வைத்துவிட்டு திரும்பிவந்தோம். அவனுக்கு ஆறுதல் சொல்லும் அளவிற்கு நான் பெரியவனில்லை. அதனால், "அம்மா இறந்துட்டாங்கன்னு நினைக்காத.. அவங்கபட்ட கஷ்டத்திலேருந்து வெளியாகிட்டாங்கன்னு நெனச்சிக்கோ" என்று சொன்னேன். அவனும் அதுதான் உண்மை என்பதுபோல பதில் அனுப்பினான். ஆம்... அம்மாவுக்கு வலியிலிருந்து விடுதலை கிடைத்துவிட்டது. இனி நிம்மதியாக உறங்குவார்கள் என்ற நம்பிக்கையோடு இந்த நினைவஞ்சலியை நிறைவு செய்கிறேன். நன்றி!

Comments

Popular posts from this blog

மாண்புமிகு மாணவன்:-

அந்த சட்டை:-

”தலித் அரசியல்” லப்பர் பந்து அடித்த சிக்ஸர்