”தலித் அரசியல்” லப்பர் பந்து அடித்த சிக்ஸர்

 சமீபத்தில் லப்பர் பந்து திரைப்படம் தொடர்பான சில எதிர்மறை விமர்சனங்களைப் பார்த்தேன். அதில் அரசியல் தலித்துகளை தியாகிகளாக்கும் வன்முறையை இயக்குனர் செய்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டுகள் பரவலாக முன்வைக்கப்பட்டுள்ளன. அதாவது, தலித் இளைஞராக வரும் ஹரிஷ் கல்யாண், தாங்கள் தோற்றுப்போனால் அந்த மைதானத்தில் இனிமேல் கிரிக்கெட் ஆடமுடியாது என்று ஒப்பந்தம் போடப்பட்ட பின்னரும் தாங்களாகவே தோற்றுப்போய் தியாக மனப்பான்மையுடன் காட்டிக்கொள்வதுபோல் படம் நிறைவடைவது ஏற்புடையது அல்ல. அந்த போட்டியில் வெற்றிபெறுவதுபோல் காட்சி அமைத்திருந்தால் மட்டுமே, அவர்களின் போராட்டத்திற்கு நியாயம் கிடைத்திருக்கும் எனவும், தியாகிகளாய் இந்த சமூக வரலாற்றில் நிலை நிறுத்தப்பட்டவர்கள் எல்லோருமே போராட முயன்று பின் தியாகி பட்டம் சூட்டப்பட்டவர்கள் என்றும், அந்த அடைப்புக்குள் அரசியல் தலித்துகளை நிறுத்துவதன் மூலம், தலித் அரசியலிலிருந்து மிக லாவகமாக தலித்துகளைப் பிரித்து ஒதுக்கிவைக்கும் வன்முறையை இப்படம் செய்திருக்கிறது என்பதும் அந்த விமர்சனங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்.




இந்த விமர்சகர்கள் எந்த புள்ளியில் நின்று தலித் அரசியல் பேசுகிறார்கள் என்பதை இங்கு உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அதாவது, திமிறி எழு, திருப்பி அடி என்று சொல்வதும் போரடுவதும் மட்டுமே தலித்துகளுக்கான சமூக நீதியையும் உரிமைகளையும் பெற்றுத்தரும் என்பது அவர்களின் ஒற்றை நம்பிக்கை. ஒடுக்கப்படும் ஒருவன் எதிர்த்து நிற்கும்போதுதான் அவனுக்கான விடுதலை பேசுபொருளாகிறது என்பதில் சந்தேகமில்லை. அதில் கணிசமான வெற்றியும் கிடைத்துள்ளது உண்மைதான். ஆனால், சில விஷயங்கள் காலப்போக்கில் மாறிப்போகும். நீரோட்டத்தில் அடித்து செல்லப்படும் மீன்களைப் போல சமூக மாற்றங்களும் நடந்துகொண்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாதல்லவா? பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்புவரை ஒரு இடைநிலை சாதிவீட்டுக்குள் ஒரு தலித் நுழைய முடியாது, திருமணங்களில் பந்தியில் அமர்ந்து சாப்பிட முடியாது. இன்று அந்த நிலை மாறியிருக்கிறது. இது சாதிய வன்முறையளுக்கு எதிராக நடந்த போராட்டங்களாலும், நடவடிக்கைகளாலும் மட்டும் நிகழவில்லை. மேம்பட்ட சமூகமாக மாறிக்கொண்டிருப்பதற்குப் பின்னால் முக்கியக் கருவியாக கல்வி இருக்கிறது. முந்தைய தலைமுறையை விட இன்றைய தலைமுறையின் சிந்தனை மேம்பட்டிருக்கிறது. கடந்த காலத்தில் நடந்த சமூக சீர்திருத்தங்கள், சமச்சீர் கல்வி, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு உள்ளிட்டவற்றின் ஒருங்கிணைந்த வெற்றியாகத்தான் இதைப் பார்க்கிறேன். அதை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திப்போகும் தற்கால தலைமுறை நபராய் காளி வெங்கட் நடித்திருக்கிறார். அதனால் தலித் அரசியல் பேசுவது தவறென்றோ, அது இனி தேவையில்லை என்பதோ என் வாதம் அல்ல. எதிர்த்து அடிப்பது மட்டுமே தலித் அரசியல் என்ற போக்கு கட்டமைக்கப்படுவதும், தலித் அரசியலை யார் பேசவேண்டும் என்று யாரோ சிலர் தீர்மானிப்பதும்தான் கவலையளிக்கும் விஷயமாக உள்ளது.
லப்பர் பந்து திரைப்படத்தோடுதான் நந்தன் திரைப்படமும் வெளியானது. இன்றும் பல கிராமங்களில் நடைமுறையில் இருக்கும் உண்மைஉண்மை சம்பவத்தை அழுத்தமாக அந்தப்படம் பதிவு செய்தது. அத்திரைப்படத்தை எத்தனை தலித் அரசியல் பேசும் இயக்குனர்கள் கொண்டாடினார்கள்? எத்தனை தலித் அரசியல் பேசும், சமூக நீதி பேசும் அரசியல்வாதிகள் கொண்டாடினார்கள்? எத்தனை சமூக நீதிக் கட்சிகள் தூக்கிப்பிடித்தன? அதற்கான காரணம் நந்தன் படத்தை இயக்கிய இரா.சரவணன் ஒரு இடைநிலை சாதியைச் சேர்ந்தவர் என்பதைத் தாண்டி இந்த தலித் அரசியல் சிலருக்கு மட்டுமே தாரைவார்த்து கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை. இங்கு இருக்கும் பிரச்சனையே இதுதான். தலித் அரசியல் பேசப்படவேண்டும் என்பதைத் தாண்டி, அதைப் பேசும் உரிமையும் நம்மைவிட்டுப் போய்விடக்கூடாது என்பதும் சிலரின் எண்ணமாக இருக்கிறது.
இப்போது மீண்டும் லப்பர் பந்து படத்தின் அரசியலுக்கு வருவோம். இப்படத்தில் தினேஷ் நடித்திருக்கும் கெத்து கதாபாத்திரம் ஒரு இடைநிலை சாதியைச் சேர்ந்தது. வழக்கமாக தலித் அரசியல் பேசும் திரைப்படங்களிலெல்லாம் இடைநிலை சாதி கதாபாத்திரங்களை வசதிபடைத்தவர்களாகவும், தலித்துகளை ஏழைகளாகவும்தான் காட்சிபடுத்துவர். இப்படத்தில் அது அப்படியே உல்ட்டாவாக உள்ளது. தலித் இளைஞராக வரும் ஹரிஷ் கல்யாண் கொஞ்சம் வசதிபடைத்த நடுத்தர வர்க்க குடும்பத்த்தைச் சார்ந்தவராக இருக்கிறார். அதாவது, தலித் என்றால் ஏழையாகத்தான் இருப்பார், இடைநிலை சாதியென்றால் வசதிபடைத்தவராக இருப்பார் என்ற தமிழ் சினிமாவின் பொதுபுத்தியை உடைப்பதில் முதல் சிக்ஸரை அடிக்கிறது லப்பர் பந்து.
இந்த இரண்டு கதாபாத்திரங்களும் ஏன் அப்படி வடிவமைக்கப்பட்டன என்பதற்கான காரணம், நம் சமூகத்தில் நடந்த சீர்திருத்தங்கள், கல்வி மற்றும் சமூகநீதி போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி. அதாவது, இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூக சீர்திருத்த நடவடிக்கைகளால் ஒரு தலித் குடும்பம் முன்னேறி உள்ளதை இயக்குனர் சொல்லாமல் சொல்கிறார் என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால் பெயிண்டராக வரும் தினேஷ், ஹரிஷ் கல்யாணை விட ஏழ்மையான நிலையில் இருப்பதற்குப் பின்னால் அவருடைய இடைநிலை சாதிய கட்டமைப்பின் அரசியலும் ஒளிந்திருப்பதாய் பார்க்கிறேன். அதாவது, சாதிப்பெருமை பேசும் தலைவர்கள் அவர்களுக்காக கோஷம் போடும் கூட்டம் எப்போதும் உடன் இருக்க வேண்டும் என்று விரும்புவர். அந்த கூட்டம் நன்றாகப் படித்து நல்ல வேலைக்குச் சென்று முன்னேறிவிட்டால் அவர்களால் அரசியல் செய்ய முடியாது. அதனால், பிஞ்சு புடலங்காயில் கல்லைக் கட்டி அதை நேராக தன் வழிக்குக் கொண்டுவரும் விவசாயியைப்போல், சிறுவயதிலிருந்தே சாதிப்பெருமை பேசி வளர பழக்கப்படுத்துவார்கள். அவர்கள் இளைஞனாகி, குடும்பம் குட்டியென இருந்தாலும் பெரிதாக வெளியுலகம் தெரியாதவர்களாகவே இருப்பார்கள். உங்களுக்கு சந்தேகமாக இருந்தால், ஒரு சாதித்தலைவரை கொண்டாடுவதையும், பெருமைபேசுவதையும் வழக்கமாகக்கொண்டிருக்கும் நபர்களைப் பற்றி எண்ணிப்பாருங்கள். இப்படத்தில் இதுபோன்ற எந்த குறியீடுகளும் இல்லைதான். ஆனால், ஒரு இடைநிலை சாதியைச் சேர்ந்தவன் படிப்பறிவில்லாமல் இருக்க மேற்சொன்ன காரணங்கள் பத்தில் எட்டு பேருக்கு பொருந்தும்.
அடுத்து இப்படத்தில் மிகவும் கவனிக்கப்பட வேண்டியது தினேஷின் தாயாரும் அவருடைய தலித் சம்மந்தியும் சந்தித்துக்கொள்ளும் காட்சி. "வீட்டுக்கு வந்தவங்களுக்கு குடிக்க தண்ணி கூட கொடுக்கமாட்டீங்களா? " என்று தினேஷின் அம்மா கேட்கும்போது, "எங்க வீட்லயெல்லாம் தண்ணி குடிப்பீங்களோ மாட்டீங்களோன்னு கேக்காம இருந்தேன்" என சொல்லிவிட்டு தினேஷின் மாமியார் தண்ணீர் குடிப்பது. இதுபோன்ற காட்சிகள் எந்த ஊரில் நடக்கிறது என்று தெரியாது. ஆனால் இவையெல்லாம் நடக்க வேண்டும் என இயக்குனர் ஆசைப்பட்டிருக்கிறார். வாழ்த்துகள்.
இறுதியாக நடக்கும்போட்டியில் ஹரிஷ் கல்யாண் அணி வெற்றிபெற்றிருந்தால் அது தலித் இளைஞனின் வீரமாக பதிவாகியிருக்கும். அவர் விட்டுக்கொடுத்துப் போனதால், அங்கு ஒரு தலித் இளைஞரின் விவேகம் வெளிப்பட்டு, அது சமூகத்தின் வெற்றியாக மாறுகிறது என்பதை அழகாக பதிவுசெய்கிறார் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து. நீயா நானா என்று எதிர்த்து நின்று போராடுவது வீரம். கிரவுண்ட் நம்ம கைய விட்டு போனா என்னண்ணே... நம்ம டீம்ல எத்தன காலனி பசங்க ஆடுறாங்க? என்று ஓரமாக வெற்றியைக் கொண்டாடுவது விவேகமுள்ள வீரம்.
-வீரா

Comments

Popular posts from this blog

மாண்புமிகு மாணவன்:-

அந்த சட்டை:-