அந்த சட்டை:-

மிகுந்த குழப்பத்தில் திரிந்துகொண்டிருந்தான் மோகன். எங்கே போயிருக்கும்..? அப்படி என்ன நாம் தவறாக சொல்லிவிட்டோம். வழக்கமாக பேசுவதைக் காட்டிலும் கொஞ்சம் ஓவராகிவிட்டது இன்று. அதுக்காக என்னை விட்டு போய்விடுவதா? இப்போ இண்டர்வியூக்கு கிளம்பனுமே?  பரபரப்பில் இருந்த மோகனுக்கு மெட்ரோ நகரத்தின் சத்தங்கள் கூடுதலாக எரிச்சலூட்டின. 




எல்லோருக்கும் அவரவர் பயன்படுத்தும் பொருட்களில் சிலவற்றில் மட்டும் ஒரு அலாதியான பிரியம் இருக்கும் அல்லவா? அப்படிப்பட்ட ஒரு சட்டைதான் அது. கல்லூரியில் உடன் படித்த மஞ்சுவின் நினைவாக வைத்திருந்தான். அது ராசியான சட்டையா என்று கேட்டால் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. ஆனால் அந்த சட்டை அவனுக்கு மிகவும் பிடிக்கும். சிவப்பு நிறத்துணியில் வெள்ளை நிறத்தில் சின்ன சின்னதாய் வெக்டார் குறிகள் இடப்பட்ட டிசைன் அது. வானத்து வின்மீன்கள் அனைத்தும் தன் ரத்ததில் கலந்து தன்னுடனே பயணிப்பது போன்ற உணர்வு அவனுக்கு ஏற்படும். அது மிகவும் பிடித்த சட்டை என்பதால், சென்னைக்கு வந்து நண்பனின் மேன்ஷனில் தங்கி, அவன் சென்ற நான்கைந்து நேர்க்கணல்களுக்கும் அதையே அணிந்து சென்றான். ஆனால் எதிலும் வேலை கிடைக்கவில்லை. இந்த சட்டை போட்டுகிட்டு போறதுனாலதான் வேலை கிடைக்கலையோ.. என்று சில முறை யோசித்தான். ச்சே.. ச்சே.. அப்படியெல்லாம் நினைக்கக் கூடாது. ஒவ்வொரு முறை இண்டர்வியூன்னு அம்மாகிட்ட போன்ல சொல்லும்போதும், முனியய்யாவ நெனச்சிட்டு போ.. நானும் வேண்டிக்கிறேன் என்று அம்மா சொல்லியதே. அப்போ அம்மா வேண்டுனது பொய்யா.. அம்மா வேண்டுனா வேலை கிடைக்காதா? அம்மா நமக்கு நல்லதுதான நெனைக்கும். அந்த மாதிரிதான் இதையும் எடுத்துக்கணும். மஞ்சு ஞாபகமா இருக்க சட்டை எப்படி எனக்கு எதிரா வேலை செய்யும்.. அதெல்லாம் இருக்காது என்று மனசைத் தேற்றிக்கொள்வான். 

துவைத்துப் போட்டு சீக்கிரம் காயவில்லை என்றால் சட்டையைத் திட்டுவான். உனக்கு ஓரளவுக்குத்தான் மரியாதை கொடுக்க முடியும். ஒரு சட்டன்னா தொவச்சி போட்டா கரெக்ட் டைமுக்கு காயணும். வெயில் வரல, மயிறு வரலன்னு எப்ப பார்த்தாலும் காரணம் சொல்லிகிட்டே இருக்க வேண்டியது. ஒழுங்கா அயர்ன் பண்ணி போட்டுகிட்டு பஸ்ல ஏறுனா, கொஞ்ச நேரத்திலேயே கூட்டத்துல கசங்கி அயர்ன் பண்ணாத சட்ட மாதிரி ஆகிடவேண்டியது. நான் உனக்கு என்ன கொறை வச்சேன். நல்லா சர்ஃப் போட்டு ஊறவச்சி தொவைக்கிறேன். அதிகமா சுட்டுடக்கூடாதுன்னு வெதுவெதுப்பா அயர்ன் பன்றேன். என் பேச்ச கேட்டு ஒழுங்கா இருக்க மாட்டியா? இனிமேல் இந்த மாதிரி பண்ண.. அவ்ளோதான். கிழிச்சி தூரப்போட்டுட்டு போய்கிட்டே இருப்பேன் பாத்துக்க" என்று 2 நாட்களுக்கு முன் திட்டிவிட்டான். இப்போது சட்டை காணமல் போய்விட்டதால், ஒருவேளை நம் டார்ச்சர் தாங்காமல் கோபித்துக்கொண்டு சென்றுவிட்டதோ என்று குழம்பிப்போனான்.


அந்த சட்டை மீது அவனுக்கு இப்படி ஒரு பந்தம் ஏற்பட்டதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. ஒருமுறை தஞ்சை பேருந்து நிலைய சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்தபோது தாறுமாறாக ஓடிவந்த காரிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பினான். அன்றுதான் முதன் முதலாக இந்த சட்டையை அணிந்திருந்தான். இவனை நோக்கி அந்த கார் வேகமாக வந்த போது, சட்டென்று சட்டையின் பின்புறத்தைப் பிடித்து ஒரு கை இழுத்தது. சர்ரென்று கார் அவனை கடந்த வேகத்தில் நிலைகுலைந்து போனவனின் முன்னாள், மின்னல் வெட்டியதுபோன்ற கண்களோடு ஒரு பெண் நின்றிருந்தாள். அவள் இவன் சட்டையை பிடித்து இழுத்த கணப்பொழுதில், அவனின் இடதுபக்க முதுகு லேசாக அவளின் இடதுகையில் இடித்து சற்று விலகியதை அவதானித்தான். தன்னுயிர் காக்க வானத்திலிருந்து வந்த தேவதைப் போல தோன்றிய அவளை ஒரு கணம் மெய் மறந்துதான் பார்த்தான் மோகன். அதிர்ச்சியிலிருந்து மீண்ட அவள்.. "அப்படி என்னண்ணா.. யோசனை? கொஞ்சம் பார்த்து போங்க.. " என்று சொல்லி துளிர்த்தெழுந்த அனைத்து கற்பனைகளையும் அமிலமூற்றி எரித்துவிட்டாள். 

அதிர்ச்சியிலிருந்து மீளாதவனாய்.. என்ன நடக்கிறதென்று புரியாதவனாய் நின்ற மோகனிடம். "நான் உங்க டிபார்ட்மெண்ட் தான் அண்ணா. First year BCA. என் பேரு லாவண்யா" என்று கைகுளுக்கி விட்டு இவனிடம் பதில் எதிர்பார்க்காமல் நகர்ந்து சென்றாள். ஹ்ம்ம் என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டு தலையசைக்க முயன்றான். அவன் தலை அசைந்ததா இல்லையா என்று அவனுக்கே தெரியவில்லை. 

ஒருவாரத்திற்கு முன்புதான் மோகனுக்கு  பிறந்தநாள் முடிந்திருந்தது. அதற்கு பரிசாக மஞ்சுவிடமிருந்து வந்த சட்டைதான் அந்த சிவப்பு வெள்ளை சட்டை. அந்த சட்டையை முதன் முதலாக போட்டு வெளியே சென்ற நாளிலேயே மிகப்பெரிய ஆபத்திலிருந்து அவன் காப்பாற்றப்பட்டான். அதனால் மோகனுக்கும் அந்த சட்டைக்குமான பந்தத்திற்கு விளக்கங்கள் இல்லை. 

ஒருமுறை தேநீர் கொஞ்சம் சிந்தியதில் சட்டையின் அடிப்புறத்தில்  கறையாகிவிட்டது. அந்த கறையை நீக்க, ஆலா வாங்கி வந்து துவைத்தான். அதில் ஆலா பட்ட இடத்தில்  கறை மட்டும் போகாமல் கொஞ்சம் சிவப்பு நிறமும் சேர்ந்தே போய்விட்டது. பாதி ஐந்து ரூபாய் நோட்டு அளவுக்கு வெளிர்த்து போய் இருந்ததனால், டக் இன் செய்து மேனேஜ் பண்ண ஆரம்பித்தான். 


அந்த சட்டை காணமல் போவது இரண்டாவது முறை. இதற்கு முன்பு ஒரு நாள் நண்பர்களுடன் பீர் குடித்து கொஞ்சம் ஓவரான போது காணாமல் போய்விட்டது. அடுத்த நாள் காலையில் பணியனுடன் அறையெங்கும் சட்டையைத் தேடி, கடைசியில் ஒரு மூலையில் கண்டுபிடித்தான். கசங்கி போயிருந்த சட்டையை எடுத்து நுகர்ந்து பார்த்தால் ஒரே மூத்திர வாடை. கடும் சினத்துடன் திரும்பிய அவன், கேணப் * எவண்டா என் சட்டையில ஒண்ணுக்கடிச்சி வச்சது? என்று கத்தினான். டேய்.. லூசுக் கூ** காலையில எழுந்து கடுப்ப கெளப்பாத.. உன் சட்டையில ஒண்ணுக்கடிக்கதான் நாங்க குடிச்சோமா என சீறினான் கார்த்தி. வினோத்தும் ராபட்டும் சிரித்துக்கொண்டிருந்தனர். மோகனுக்கு ஒன்றும் புரியவில்லை. "டேய் கடுப்பேத்தாதீங்கடா" என்னதான் ஆச்சுன்னு சொல்லுங்கடா.. நான் எப்டி இப்போ இத போட்றது? என்று மோகன் கேட்க வினோத் சிரித்துக்கொண்டே நடந்தவற்றை விளக்கினான். 

வினோத் சொன்னதை கேட்டதும், மோகனுக்கு தன்னையே செருப்பால் அடித்துக்கொள்ள வேண்டும் போலிருந்தது. ஜாவா பிராக்டிக்கலில் இண்டர்னல் மார்க் குறைத்த HOD- ன் தலையை இறுக இழுத்துப் பிடித்து, அவன் வாயிலேயே ஒண்ணுக்கடிக்கனும்டா.. என்று மோகன் சொல்ல... எப்படி மச்சி செஞ்சி காமி என ராபர்ட் கேட்டதும். மோகன் தன் சட்டையை கழட்டி கவிட்டிக்கு இடையில் வைத்து பிராக்டிகல் செய்திருக்கிறான். அதன் விளைவாக வந்ததுதான் சட்டையில் ஏற்பட்ட மூத்திர நாற்றம். 

"மயிறு..  நான் அப்பவே சொன்னேன். எனக்கு 3 பீர் போதும்னு. இந்த வினோத் பு** மவந்தாண்டா எடுத்து எடுத்து கொடுத்தான் " என்று கடிந்துகொண்டே சட்டையை துவைக்கச் சென்றான். அதன்பிறகு அந்த சட்டையை மிகுந்த கவனத்தோடு பராமரிக்க ஆரம்பித்தான் மோகன். சட்டை அழுக்காமல் இருக்க கை வைத்த பணியன் போட்டுக்கொள்வது, காலரில் பட்ட அழுக்கை நீக்க பிரஷ் போடாமல் லேசாக துணி சோப்பை தேய்த்து நகத்தாலேயே மெதுவாக சுரண்டி எடுப்பது,  துவைத்து கொடியில் உலர்த்தும்போதுகூட வெளிப்புறத்தை போட்டால் வெயில் பட்டு சீக்கிரம் வெளுத்துவிடும் என கவனமாக புறம்பக்கத்தை எடுத்துதான் க்ளிப் போடுவது என கவனமாக இருப்பான். இப்படி பொத்தி பொத்தி பாதுகாத்த சட்டை காணாமல் போனதால் அவனுக்கு மனசே சரியில்லை. இன்று மதியம் இண்டர்வியூ இருக்கென்பதால் நேற்று மாலையே துவைத்து மொட்டை மாடியில் உலரவிட்டிருந்தான். ராயப்பேட்டையிலுள்ள அந்த மேன்ஷனின் மொட்டை மாடிக்குச் சென்றால் எக்ஸ்பிரஸ் அவன்யூவின் முகத்திலும் மணிக்கூண்டிலும் விழிக்கலாம். சட்டை மாட்டப்பட்ட க்ளிப் அப்படியே இருந்தது. அவனின் மற்ற துணிகளில் சில காய்ந்தும் காயாமலும் இருந்தன. எங்கு போயிருக்கும்? காற்றில் பறந்து சாலையில் விழுந்திருக்குமா? பறந்து சென்று ஏதோ மரத்தில் மாட்டியிருக்குமா? அல்லது யாராவது திருடிச் சென்றிருப்பார்களா? ஒரே யோசனையாக இருந்தது. அன்று கணக்கிலிருந்த கடைசி ரெண்டு ரூபாய் சிகரட்டையும் பற்றவைத்து இழுத்துவிட்டு கீழே வந்தான். அவன் சட்டையுடன் பேசிக்கொண்டிருந்த இரவுகள் கண்ணில் வந்து போயின. அப்போது மேன்ஷனை சுத்தம் செய்யும் பெண் ஒரு சிவப்பு நிற ஈரத் துணியால் தரைப்பக்க சுவரை துடைத்துக்கொண்டிருந்தாள். அதிர்ச்சியடைந்த அவன், "அக்கா.. இங்க குடுங்க .. "என்று வாங்கி விரித்துப் பார்த்தான் அதுபழைய பாவாடைத்துணி. பெருமூச்சு விட்டவனிடம் என்னப்பா? என்று கேட்ட அக்காவுக்கு பதிலேதும் சொல்லாமல் தலையாட்டிவிட்டு அறைக்குத் திரும்பினான். 


வேறு எதையாவது போட்டுக்கொண்டு இண்டர்வியூக்கு செல்லலாம் என்று பார்த்தால் எந்த சட்டையும் காய்ந்திருக்கவில்லை. காய்ந்திருந்த இரண்டு சட்டைகளும், நீர்ப்புள்ளி விழுந்து பழசான சட்டைகள் தான். அதை போட்டுக்கொண்டு சென்றால் செக்யூரிட்டியே உள்ள விடமாட்டான் என்று நினைத்துக்கொண்டு.. டீ ஷர்ட் போட்டுகிட்டு ஏன் போகக்கூடாது? என யோசித்தான். ஹ்ம்ம்க்ஹ்ம்ம்ம் இந்த கார்ப்பரேட் கம்பெனில வேலைக்கு சேர்ந்த அப்புறம்தான் டி ஷர்ட்டெல்லாம் போடனும்னு சொல்வானுங்க. இண்டர்வியூக்கு formals தான் நொட்டணும் என்று கடிந்துகொண்டான். 

செய்வதறியாமல் தவித்த மோகன், தகரக் கட்டிலில் சாய்ந்தான். கொஞ்ச நேரத்தில் அந்த சட்டை அவனை நோக்கி மெல்ல மிதந்து வந்தது. சுகந்தத்தின் வாசம் வீச, சட்டைக்குள் முகத்தை நுழைத்தான். யாருமில்லை சட்டை மட்டுமே இருந்தது. தனியாக வந்த சட்டை காற்றில் பறக்கிறது என்று நம்பத்துவங்கிய நொடியில் சட்டைக் காலருக்குள் ஓர் பட்டாம்பூச்சி. தன் இறக்கைகளை மெல்ல அடித்து, அந்த அதிர்வில் சட்டையை கொஞ்சம் மேலெழுப்பியது. மதுரத்தின் வாசனை மெல்ல அவன் நாசியில் நுழைந்து உடலெங்கும் புது பரவசம் பரவியது. XL size-ல் இருந்த சட்டை சட்டென சுருங்கி, அவனைவிட்டு விலகியதும் கொஞ்சம் அதிர்ந்த அவன், ஆச்சர்யமடைந்தான். அவனின் சட்டை மகரந்த சேர்க்கைக்கு தயாராகும் மலர் போல விரிந்திருந்த ஒர் உள்ளங்கைக்குள் அடங்கியது. அந்த கை மோகனின் கன்னத்தைத் வருடி, அவனின் சட்டையை ஊதா நிற கவுனுக்குள் அமிழ்த்திக்கொண்டது. சாரைப் பாம்பின் வயிறுபோல ஏறி இறங்கிய கழுத்தைக் கடந்து சற்று அண்ணாந்து பார்த்தான். "எல்லாம் உனக்காகத்தான் மோகன்.." என்று தேன் சிதறும் புண்ணகையில் பதிலுரைத்தாள் லாவண்யா. மெய்சிலிர்த்து நின்றவனின் தோளைத் தொட்டு எல்லாம் உனக்குத்தான் மச்சி என்றாள் லாவண்யா. மச்சியா என்று கண்ணை விரித்து சுறுக்கி பார்க்கும்போது, அவன் கண் முன்னே ஒரு Old Monk இருந்தது. ங்ஙே.... என்று கண்ணை துடைத்துக்கொண்டு எழுந்தான்.. அதே மேன்ஷன்.. அதே சுவர்..  அதே ஜன்னல். "மச்சி எனக்கு வேல கிடச்சிருச்சி.. மூஞ்ச கழுவிட்டு வந்து உக்காரு.. சரக்க போடலாம்" என்றான் மஞ்சுநாதன்.. மோகனின் அந்த சிவப்பு வெள்ளை சட்டையை கழற்றியபடியே..! 


-வீரா

Comments

Popular posts from this blog

”தலித் அரசியல்” லப்பர் பந்து அடித்த சிக்ஸர்

அன்னமிட்ட கை

மாண்புமிகு மாணவன்:-