ஐபிஎல் துவக்க போட்டியைப் பார்த்துக்கொண்டிருந்தபோது தூக்கம் வந்துவிட்டது. சென்னை அணி பேட்டிங் செய்ய ஆரம்பித்த சில ஓவர்களிலேயே தூங்க போய்விட்டேன். கிரிக்கெட் என்று வரும்போது இரவு பகல் பாராமல் பஞ்சாயத்து டிவி, தூரத்திலிருந்த அண்ணன் வீட்டு டிவி, இன்னும் எங்கெல்லாம் டிவி இருக்கிறதோ அந்த வீட்டு வாசலில் பசியோடு சோற்றுக்காக காத்திருக்கும் நாய் போல எப்போது டிவி போடுவார்கள், கிரிக்கெட் பார்க்கலாம் என காத்துக்கிடந்திருக்கிறேன். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் செய்து விளையாடும்போது நண்பகலில் போட்டி ஆரம்பித்து நள்ளிரவில் முடிப்பார்கள். வீட்டில் மதிய சாப்பாட்டை முடித்துவிட்டு, இரவு முழுக்க கிரிக்கெட் பார்க்க அனுமதிகிடைக்கும் வீடாகத் தேடிச் சென்று உட்காருவோம். கிரிக்கெட் பார்ப்பதில் எந்த அளவுக்கு ஆர்வம் இருந்ததோ அதைவிட அதிகமாக விளையாடுவதிலும் இருந்தது. 300 ரூபாய் கொடுத்து பேட் வாங்குவதெல்லாம் பெருங்கனவு. நன்கு உருளையாக இருக்கும் வேப்பங்கட்டை, ஒதியங்கட்டையை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக கத்தியால் செதுக்கி அழகான கிரிக்கெட் மட்டையை நானே உருவாக்கி, ப்ரில் சிவப்பு மையின் துணையோடு அதை சச்சினின் ஆஸ்தான MRF பேட்டாக மாற்றுவேன். தோப்புக்கு சென்று நடுத்தர வயதில் இருக்கும் சவுக்கு மரத்தை திருட்டுத்தனமாக வெட்டி, காய்ந்த சவுக்கு மரத் தழைகளை மேலேத் தூவி அடையாளம் இல்லாமல் செய்துவிட்டு தோப்பிலிருந்து வெளியேறுவோம். அந்த மரங்களை அளவெடுத்து தோல் உரித்து கொஞ்சம் வெயில் கொஞ்சம் நிழலென காய வைத்து ஸ்டம்ப் செய்வோம். அதில் நீள மையால் பெப்சி என எழுதி பெப்சியின் லோகோவையும் வரைந்துவிட்டால் சர்வதேச ஒருநாள் போட்டி நடத்துவதற்கான எல்லாத் தகுதியும் வந்துவிடும்.
எல்லோரிடமும் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என சேகரித்து பத்து ரூபாயில் கிடைக்கும் ஸ்டம்பர் பந்துகளை இரண்டு மூன்று என வாங்கி வைத்துக்கொள்வோம். அறுவடை முடிந்த வயல்களில் குறுத்துப்போல துருத்திக்கொண்டிருக்கும் நெல் நாற்று பத்தைகளை மண்வெட்டியால் கொஞ்சம் வரண்டினால் பிட்ச் தயாராகிவிடும். காலை ஏழு மணிமுதல் 11 மணி வரை பெரிய கிரவுண்டான வயல்களில் ஆடிவிட்டு, வெயில் கொஞ்சம் அதிகமானதும் சோற்றுக்கு வீட்டுக்கு வருவோம். பல நாட்கள் சோறு இல்லாமல் காலையில் ஆரம்பித்து மதியம் 3 மணிவரையில் கூட வேகாத வெயிலில் கிரிக்கெட் விளையாடி இருக்கிறோம். வெயில் அதிகமாக இருக்கிறதென்று சிலர் வரத் தயங்கினால், மர நிழலில் விளையாடும் குட்டி மைதானங்களும் எங்களூரில் உண்டு. அதில் ஒன்சைட் தான் பேட்டிங், குட்டையில் நேராக பந்து விழுந்தால் அவுட், எள்ளு வயலில் இறங்கினால் நோ ரன் என ரூல்ஸ் கொஞ்சம் அதிகமாக இருக்கும். ” மேலும், கோவில் திருவிழா நேரங்களில் டியூப்லைட் வெளிச்சத்தில் நைட் மேட்ச் கூட ஆடியிருக்கிறோம். பொழுதா பொழுதேனைக்கும் பந்து அடிச்சுகிட்டே கிடக்க வேண்டியது.. அதுவா வந்து சோறு போட போவுது? குதிகால் நரம்ப வெட்டனும்டா" என்று கொஞ்சம் கெட்டவார்த்தைகளையும் தூக்களாக போட்டு ஆத்தா அன்பாக வாழ்த்து மழை பொழியும். அம்மாவைத் தவிர வீட்டிலுள்ள அனைவரும் எங்களை பெரும்பாலும் வாழ்த்திக்கொண்டே இருப்பார்கள்.
கிரிக்கெட் கிரிக்கெட் என்று அலைந்துகொண்டிருந்த எனக்கு கல்லூரிக்கு சென்ற பிறகு ஆர்வம் கொஞ்சம் குறைய ஆரம்பித்தது. விடுதிக்கு அருகில் உள்ள கிரவுண்ட் உள்ளிட்ட சில இடங்களில் அவ்வப்போது விளையாண்டாலும் ஆர்வம் அதிகமில்லை. அதேபோல் கிரிக்கெட் பார்ப்பதிலும் ஆர்வம் குறைந்துகொண்டே வந்தது. ஆனால் அது எந்த புள்ளியில் நிகழ்ந்தது என்பதை சரியாக யூகிக்க முடியவில்லை. 2003 உலகக்கோப்பையின்போது எல்லா சாமிகளையும் வேண்டிக்கொண்டிருந்தேன். ஆனால் சச்சின் என்ற குலசாமி 4 ரன்னில் அவுட்டாகி கண்ணீர்க்கடலில் ஆழ்த்திவிட்டார். சென்னைக்கு வந்தபிறகு முற்றிலுமாக கிரிக்கெட் பார்ப்பது, விளையாடுவது இரண்டுமே இல்லாமல் போய்விட்டது. அதற்கு முக்கியக் காரணம் இங்கு இருக்கும் இட நெருக்கடி. சவேராவில் பணியாற்றிய காலத்தில் அமைந்தங்கரை, டி நகர் என்று சில இடங்களில் விளையாட சென்றிருக்கிறேன். அதில் முதலில் கடுப்பேத்தும் விஷயம் டென்னிஸ் பந்தில் இங்கு விளையாடுவது. மற்றொன்று ஒரு கிரவுண்டுக்கு விளையாடச் சென்றால் ஏதோ திருவிழா கூட்டம்போல விளையாடிக்கொண்டிருப்பார்கள். அதற்குள் நாம் சென்று பிட்ச் பிடித்து விளையாட வேண்டும். எவன் பால் போடுறான்.. எவன் அடிக்கிறான்னே புரியாது. கிரிக்கெட் பார்ப்பதில் ஆர்வம் குறைந்ததற்கு சச்சின் இல்லை என்ற ஒரு காரணம் இருந்தாலும், கிரிக்கெட் மற்றும் அதை சுற்றி நடக்கும் வியாபாரம் ஓரளவுக்கு தெரியவந்ததும் மற்றொரு காரணம்.
இப்போது எங்கும் கிரிக்கெட் எதிலும் கிரிக்கெட் என்ற நிலை உருவாகியிருக்கிறது. அதுவும் ஐபிஎல் வந்தபிறகு கிரிக்கெட் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும், வெறித்தனமான ரசிகர்களின் எண்ணிக்கையும் உயர்ந்திருக்கிறது. அதற்கு சமூக ஊடகங்களும் முக்கிய காரணம். நான் இப்போது கிரிக்கெட் பார்க்காமல் இருப்பதற்கான காரணம் என்னைச் சுற்றிவரும் எல்லா வணிக வலைகளுக்குள்ளும் சிக்காமல் தப்பித்து ஓட முயல்வதுதான். கிரிக்கெட்டின் பின்னணியில் இரண்டு சித்தாந்தங்கள் இருக்கின்றன. ஒன்று எல்லோரையும் மகிழ்விப்பது. மற்றொன்று மகிழ்வித்து அவர்களை சுரண்டுவது. இது கிரிக்கெட்டில் மட்டுமல்ல வணிகமயமாக்கப்பட்ட எல்லா விளையாட்டுகளிலும் பொழுதுபோக்கு என்று சொல்லிக்கொள்ளும் எல்லா விதமான கூத்துகளிலும் இருக்கிறது. ஆனால், கிரிக்கெட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் மற்ற விளையாட்டுக்கள் அழிகின்றன என்று சொல்வதை நான் ஏற்கமாட்டேன். ஏனெனில், கிரிக்கெட் ஒரு விளையாட்டு மட்டும் அல்ல. நீங்கள் ஒரு கபடியையோ, கைப்பந்து விளையாட்டையோ, டென்னிஸையோ கிரிக்கெட் போல உக்கார்ந்து நீண்ட நேரத்திற்கு பார்க்க இயலாது. கால்பந்து விளையாட்டை அவ்வாறு ரசித்து பார்க்க முடியும். ஏனென்றால் கால்பந்து எப்போதும் ஆபத்து நிறைந்திருக்கும் இடத்தில் ஒரு ஆக்ஷன் ஹீரோ சாகசம் செய்யும் சாகசத் திரைப்படம் போன்றது. கிரிக்கெட் ஆக்ஷன், செண்டிமெண்ட், ரொமான்ஸ் என ஒரு பக்கா கமர்ஷியல் திரைப்படத்திற்கான அனைத்து அம்சங்களையும் தன்னியல்பாகவே கொண்டிருக்கிறது. அதுதான் ஒரு ரசிகனை ஒரு அணிக்காகவோ.. வீரனுக்காகவோ எந்த தீவிரத்தன்மைக்கும் கொண்டு செல்ல முயற்சிக்கிறது. கிரிக்கெட்டுக்கு இருக்கும் இந்த தன்னியல்பை நன்கு புரிந்துகொண்ட வியாபாரக் கனவான்கள் அதை மேலும் மேலும் எப்படி செல்வம் கொழிக்கும் வியாபராமாக மாற்றலாம் என திட்டம்போட்டு வெற்றிகாண்கிறார்கள்.
IPL பார்ப்பதையோ கிரிக்கெட் பார்ப்பதையோ தவறென்று சொல்லவில்லை. அது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். ஆனால் அவை உங்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றனவா என்று சுய பரிசோதை செய்துகொள்ளல் அவசியம் என்கிறேன். ஒருநாள் போட்டிகள் பெரும்பாலும் ஒரு கிரிக்கெட் ரசிகனின் ஒரு நாளை திருடிக்கொண்டன. தற்போது 20 ஓவர் போட்டிகள் அரைநாளை திருடிக்கொள்கின்றன. அதற்கு என்னால் நேரம் ஒதுக்க முடிகிறது. நான் என்னுடைய நேரத்தை நன்றாக மேலாண்மை செய்கிறேன் என்று நீங்கள் சொல்லாம். அதே வேளையில் கிரிக்கெட் பார்க்காமல், எந்தவித பொழுதுபோக்கும் இல்லாமல் இருந்து என்ன சாதிக்கப்போகிறோம்? அல்லது அப்படி இருந்தவர்கள் என்ன சாதித்துவிட்டார்கள்? வாழ்க்கை வாழ்வதற்குத்தானே.. எங்கள் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் பார்த்துவிட்டுப்போகிறோம் என நீங்கள் கேட்கலாம். உங்கள் கேள்விகள் அனைத்தும் நியாயமானதுதான். அதில் தவறொன்றுமில்லை. ஆனால் நீங்கள் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கையும் பொழுதுபோக்கும் நீங்களாகவே தேர்ந்தெடுக்கிறீர்களா என்பதுதான் நுட்பமாக கேட்கப்பட வேண்டிய கேள்வி. நம்முடைய தேர்வுகளில் எழுபது விழுக்காட்டுக்கு மேல் விளம்பரங்களால் நாம் ஒன்றை தேர்ந்தெடுக்க உந்தப்படுகிறோம் என்கிறது ஒரு ஆய்வு. இதை விரிவாக மன்னர் மன்னன் தன்னுடைய விளம்பர வேட்டை புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார். உலகமயமாக்கப்பட்ட வாழ்வியல் முறையில் முதலாளித்துவத்தின் சல்லி வேர்கள் நம் கால்களைக் கட்டிக்கொண்டு அதன் போக்குக்கு இழுத்துச் செல்கிறது. உலகமயமாக்கல் வந்தபிறகுதான் நம் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது. வேலைவாய்ப்புகள் பெருகியிருக்கின்றன என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் மேம்பட்ட உங்களின் வாழ்க்கைத்தரம் மேலும் மேலும் ஏதோ சில நிறுவன முதலாளிகளின் கல்லாவை நிரப்ப உங்களை துரத்திக்கொண்டே இருப்பதை நீங்கள் அறிவீர்களா? அதைத்தான் அவதானிக்கவேண்டும் என்கிறேன்.
ஏமாற்றத்தில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று ஏமாந்த பின்பு ஐயோ.. நாம் ஏமாந்து போய்விட்டோமே.. நம்மை ஒருவன் ஏமாத்திவிட்டானே என்று புலம்புவது. மற்றொன்று தினம் தினம் நாம் ஏமாற்றப்படுவதை அறியாமலேயே மகிழ்ச்சியாய் இருப்பது. சில ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு ஆயுள் காப்பீடு நிறுவனத்தில் பணியாற்றினேன். நாம் பாலிசி எடுக்கப்போகும் வாடிக்கையாளர்களிடம் எதை சொல்ல வேண்டும் எதை சொல்லக்கூடாது என்று ஒரு அஜெண்டா வைத்திருப்பார்கள். அதில் கூடுதலாக இன்னொன்று இருக்கும். அது இந்த விஷயத்தை கஸ்டமர் கேட்டால் மட்டுமே சொல்ல வேண்டும் என்பது. கஸ்டமர் கேட்டால் மட்டுமே சொல்லவேண்டும் என்பதில் என்பதில் பாலிசிதாரர் தொடர்ச்சியாக ப்ரீமியம் கட்டாமல் விட்டால் என்ன ஆகும்.. எவ்வளவு கிடைக்கும்.. சரண்டர் வேல்யூ என்ன போன்ற விஷங்கள் இடம்பெறும். அந்த பாலிசிக்கு உள்ள Free Look Period-ஐ நாம் சொல்லக்கூடாது. Free look period என்றால் நீங்கள் எடுத்த பாலிசி உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் பாலிசி எடுத்த தேதிதியிலிருந்து பதினைந்து நாட்களுக்குள் அதை கேன்சல் செய்துவிடலாம். கட்டிய ப்ரீமியம் தொகையும் திரும்ப கிடைத்துவிடும். வேண்டுமென்றால் அதே நிறுவனத்தில் வேறு பாலிசி எடுக்கலாம் இல்லையேல் எடுக்காமலும் இருக்கலாம். அது கஸ்டமரின் விருப்பம். ஆனால் இந்த விஷயத்தை கேட்டால் மட்டுமே சொல்லவேண்டும்.. அதுவும் முடிந்த அளவு அந்த பாலிசியின் நன்மைகளை எடுத்துச் சொல்லி கஸ்டமரைக் கேன்சல் செய்ய விடாமல் தடுக்க வேண்டும் என்பதே. இந்த உண்மையைச் சொல்லி தெரிந்த அண்ணன் ஒருவரிடம் பாலிசி போடச்சொன்னேன். பாலிசி போட்ட அவர் பத்து நாட்களில் கேன்சல் செய்துவிட்டார். அந்த தகவல் வந்த அடுத்த கணமே என்னுடைய கிளை மேலாளர் என்னை கொத்தாக தூக்கி, நீதான் கல்ப்ரிட்.. நீ சொல்லாம கஸ்டமருக்கு ஃப்ரீ லுக் பீரியட் தெரியும் என ரெய்டு விட்டதோடு மட்டுமல்லாமல் போய்ட்டுவா ராஜா என வேலையை விட்டும் அனுப்பிவிட்டார். அதனால் அடுத்த மாதம் சம்பளம் வராது என்பதைத் தாண்டி அந்த சம்பவத்தால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நிற்க.
இப்போது மீண்டும் கிரிக்கெட்டுக்கு வருவோம். ஜியோ ப்ரைமில் சென்னை பெங்களூரு போட்டியை 11 கோடி பேர் பார்த்திருக்கிறார்கள். இந்த 11 கோடி என்பது ஜியோ ஐடி வைத்திருக்கும் எண்ணிக்கை மட்டும்தான். ஒரே ஐடியில் நண்பர்கள் பலர் சேர்ந்து பார்க்கலாம்.. குடும்பத்தோடு உக்கார்ந்து பார்க்கலாம். எஸ்.என்.ஜே நிறுவனத்தின் ப்ரிட்டிஷ் எம்பையர் மால்ட் பியரைக் குடித்துக்கொண்டே பாரில் கூட பல பேர் பார்க்கலாம். இப்படியெல்லாம் கணக்கிட்டால் தோராயமாக இருபதிலிருந்து முப்பது கோடிபேராவது பார்த்திருப்பார்கள். இந்த முப்பதுகோடி பேரும் உள்வாங்கும் விஷயம் என்ன? அவர்களிடம் எது கொண்டுசேர்க்கப்படுகிறது? என்று கவனித்தால் இரண்டு அணி வீரர்களின் ஜெர்சியிலும் ஹெல்மெட்டிலும் மட்டையிலும் இருக்கும் பிராண்டுகள். பெரிய நிறுவனங்கள் தங்களை இன்னும் பெரிய நிறுவனங்களாக மாற்ற மிகப்பெரிய சர்க்கஸ் காண்பிக்கின்றன. உங்கள் இஷ்டம்போல பாருங்கள்.. இஷ்டம்போல கொண்டாடுங்கள் என்று நம்மை சொல்கின்றன. அதனால் காட்டையே கட்டுப்பட்டில் வைத்திருக்கும் சிங்கம்போல நாம் கெத்தாக இருக்கிறோம். மகிழ்ந்து கொண்டாடுகிறோம். ஆனால் உண்மை என்னவென்றால் அந்த நிறுவனங்களின் சர்க்கஸ் கூண்டுக்குள் வித்தை காட்டும் சிங்கமும் நாம்தான், அதை வெளியிலிருந்து வேடிக்கைப் பார்க்கும் பார்வையாளரும் நாம் தான்.
திட்டமிட்டு செய்யப்படும் இந்த விளம்பர வேட்டையில் வீரர்களும் பிரபலங்களும் நன்கு பயன்படுத்தப்பட்டு பார்வையாளனின் பாக்கெட்டை சுரண்ட வழிவகைகள் செய்யப்படுகின்றன. நாம் பார்வையாளராக உள்ளே நுழைந்து அடுத்த ஐபிஎல் எப்போது வரும் என்று புலம்பும் அளவுக்கு பிரம்மை பிடித்தவர்களாகிறோம். எது எல்லோராலும் விரும்பப்படுகிறதோ அதுதான் சந்தையில் விலைபோகும். அதனால் சமூக ஊடகங்களில் கண்டட் க்ரியேட்டர்களாக இருப்பவர்களும் ஐபிஎல் சார்ந்த வீடியோக்களை செய்து அவர்களுக்குத் தெரியாமலேயே அவர்களை பின் தொடர்பவர்களை மூளைச் சலவை செய்கிறார்கள். அதனால் அவர்களின் வருமானம் கனிசமான அளவுக்கு பெருகுகிறது. எல்லாவற்றையும் மேலோட்டமாகப் பார்த்தால் இந்த விளையாட்டு மூலம் பலரின் வாழ்வாதாரம் உயர்ந்திருப்பதுபோலவும், எல்லோரிடமும் கையிருப்பு நன்றாக இருப்பது போலவும் தோன்றும். எல்லோரிடமும் கணிசமான அளவுக்கு பணம் இருக்கிறது அதனால்தான் இந்த கொண்டாட்டங்கள் சாத்தியமாகின்றன. ஆனால் கணிசமான அளவுக்கு இருக்கும் பணம் தண்ணீருக்குள் குதிக்க குளக்கரையில் அமர்திருக்கும் தவளையைப் போல அது எதோ ஒரு பெரு முதலாளியின் வங்கிக்கணக்கில் போய்ச்சேர ஆர்வமாய் காத்திருக்கிறது.
கிரிக்கெட் ஒரு விளையாட்டு பொழுதுபோக்கு என்பதைத் தான்டி அது ஒரு ஃபோபியா நிலையை அடைந்திருக்கிறது. ஆறு மணியாகிவிட்டால் கை நடுங்கும் குடி நோயாளியைப் போல ரசிகர்கள் மாறிவிடுவதை என்னவென்று சொல்வது? நேரடியாக சில்லறை விற்பனையில் ஈடுபடும் நிறுவனங்கள் கோடிக்கணக்கில் கொட்டிக்கொடுத்து விளம்பரம் செய்கிறார்கள். அவர்கள் விளம்பரத்திற்கும் நடிகர்களுக்கும் கொடுக்கும் பணமெல்லாம் நாம் ஐந்து ரூபாய்க்கும் பத்து ரூபாய்க்கும் வாங்கும் ஒரு பொருளிலிருந்துதான் போகிறது என்பதை புரிந்துகொள்ளுங்கள். RCB-ன் முக்கிய ஸ்பான்ஸர்களில் ஒன்றாக இருக்கும் KEI நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 6000 கோடி. மின்சார வயர்கள் தயாரிக்கும் இந்த நிறுவனம் ஆண்டுக்கு கிட்டதட்ட 600 கோடி ரூபாயை விளம்பரத்திற்காக செலவு செய்கிறது. CSK-ன் ஸ்பான்சரான நம்ம ஊர் சரக்கு விற்கும் SNJ நிறுவனதின் ஆண்டு வருமானம் 290 கோடி. இவர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் ஸ்பான்சருக்காக மூன்று வருடங்களுக்கு 40 கோடி கொடுக்க ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல்கள் கிடைக்கின்றன. பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக கேட்கிறார்கள் என்று குமைந்துகொள்ளும் தமிழ்க்குடிமகன்களுக்கு அவர்கள் அந்த பாட்டிலுக்குள் விழுந்துகிடப்பது தெரிவதில்லை. நான் பாட்டில் என்று சொல்வது மது பாட்டிலை மட்டுமல்ல. பொழுதுபோக்கு என்ற பெயரில் மயக்கும் அனைத்தையும்தான். அதனால் ஐபிஎல் பாருங்கள்.. தவறில்லை.. பார்ப்பதோடு நிறுத்திவிடாமல் ஐபிஎல் வீரர்களின் ஜெர்சியில் இருக்கும் நிறுவனங்களை ஆராயுங்கள். அதில் நல்ல எதிர்காலம் உள்ள நிறுவனங்களை கண்டறிந்து அவற்றின் பங்குகளில் முதலீடு செய்து உங்கள் பிள்ளை குட்டிகளை காப்பாற்றுங்கள். நன்றி!
Comments
Post a Comment