மாப்பிள்ளை வீரனும் நானும்..!
இன்று (02-08-2023) மாப்பிள்ளை வீரன் கோவிலுக்குச் சென்றோம். திருவிழா நேரத்தில்தான் அதிகமாக சென்றிருக்கிறேன். திருவிழா இல்லாத நாட்களின் ஊர்த்தெய்வங்கள் அதன் சுய வாழ்க்கை தம் இஷ்டத்திற்கு வாழும் என நினைக்கிறேன். மனிதர்கள் சமூக வலைதளங்களிலிருந்து கொஞ்சம் விலகுவதைப்போல. மாப்பிள்ளை வீரன் அதே மீசை முறுக்குடன் மேற்கு நோக்கி அமர்ந்திருந்தார். மதிய நேரம் என்பதால் திருமேனி அம்மன் இளைப்பாற கதவை சாத்திக்கொண்டது. அதனால் வீட்டு தென்னையிலிருந்து பறித்துக்கொண்டு வந்த தேங்காயை வாசலில் உடைத்து கொடுத்தார் பூசாரி. வீரனுக்கு தேங்காய் உடைத்து, ஆராதனை செய்து வணங்கினோம்.
கைக்குழந்தையாக இருந்தபோதிலிருந்தே அந்த கோவிலுக்கு போவேன். அம்மாவின் பூர்வீகம் தகட்டூர் என்பதால் ஒவ்வொரு வருடமும் திருவிழாவுக்கு தவறாமல் சென்றுவிடுவோம். ஆனால் திருவிழா இல்லாத ஒரு மதிய நேரத்தில், கூட்டமே இல்லாத கோவிலுக்கு சென்றது மிக நல்ல அனுபவம்.
நாங்கள் உள்ளே போகும்போது "இந்த வருஷம் புதுசா ரெண்டு மூணு குதிரை வந்திருக்கு.. யாரோ கட்டி வுட்ருக்காங்க" என்று அம்மா சொன்னதும்.. அப்போ மாப்பிள்ளை வீரன் தினமும் ஒரு குதிரையில ரவுண்ட்ஸ் போவார் என்றேன். பளபளக்கும் புதிய குதிரைகளை விட ஆலமரத்தடியில் நின்ற சுடுமண் குதிரைகள் என்னை அழைத்தன. கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு.. ஒரு போட்டோ எடுத்துக்கிறேன்னு சொல்லி எடுத்துக்கொண்டேன். இவை மாப்பிள்ளை வீரனுடன் அதிகம் பழகிய குதிரைகள். இப்போது ஓய்வு கொடுத்து ஓரமாக நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.
இந்த கோவிலின் நேர்த்திக்கடன் வித்தியாசமானது. உங்களின் வேண்டுதல் என்னவோ அதற்கு சிலை எடுத்து விட்டால் நிறைவேறும் என்பது ஐதீகம். அதாவது வீட்டில் பாம்பு போன்றவற்றின் அச்சுறுத்தல்கள் இருந்தால் திருவிழாவின்போது பாம்பு சிலை எடுத்துவிட்டு வேண்டிக்கொண்டால் பாம்பு வராதாம். பிள்ளை பேறு வேண்டுபவர்கள் தொட்டில், குழந்தை சிலைகளையும் குழந்தைகளுக்கு நோய் நொடி அண்டாமல் இருக்க சிறார் சிலைகளையும் நேர்த்திக்கடனாக செலுத்துவார்கள். எங்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படக்கூடாதென்று வேண்டிக்கொண்டு ஆத்தாவும் அம்மாவும் சிலை எடுத்து போடுவார்கள். எப்போதும் சுப்பிரமணியன் தாத்தா கடையில்தான் எடுத்து போடுவோம். கடந்த சில வருடங்களாக வேலை நிமித்தமாக இருந்ததால் கோவில் திருவிழாவுக்கு செல்ல முடியவில்லை.
இன்று கூட்டமே இல்லாமல் தனியாக இருந்த மாப்பிள்ளை வீரனை பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. கோவிலுக்குப் பின்னால் இருக்கும் ஆலமரம், அத்தனை அமைதியாய் சிலுசிலுவென அடிக்கும் காற்று.. அதை உணர்ந்து மகிழ ஒரு கொடுப்பனை வேண்டும். அந்த ஆலமரத்திற்கு நிறைய கதைகள் உண்டு. அதற்குள் நிறைய நாகங்கள் இருக்கும் என ஆத்தா சொல்லிய நியாபகம். அதுமட்டுமா.. ஒவ்வொரு ஆண்டுத் திருவிழாவின்போதும் ஊர்வலம் வரும் சாமி மரத்தின் பின்னால் இருக்கும் புதருக்குத்தான் போகும். அதில் ஜடா முடியுடன் உள்ளே ராஜ நாகம் இருக்குமாம். அதற்கு பால் ஊற்றி பூஜை செய்த பிறகே வீரன் சன்னதிக்குச் செல்வார். ஆனால் மரத்தைச் சுற்றி எத்தனை நாகங்கள் இருந்தாலும் அது யாரையும் தீண்டாது என்று ஆத்தாவும் அம்மாவும் சொல்லியிருக்கிறார்கள். அத்தனை நாகங்களையும் அடியில் வைத்துக்கொண்டு இந்த ஆலமரம் அமைதியாய் இருக்கிறதே என்று அண்ணாந்து பார்த்தேன். நான் மேலே பார்த்தவுடன்.. "இந்த ஆலமரத்தோட இலையெல்லாம் ஏன் இவ்ளோ சின்னதா இருக்கு தெரியுமா" என்று அம்மா கேட்டுவிட்டு.. "இது சாமி மரம். இந்த மரத்தோட இலையை பிச்சி ஒரு நரிக்குறவன் சோறு வாங்கி திண்ணுட்டானாம். யாருமே தீண்டாத மரத்த அவன் தீண்டிட்டான்னு கோவப்பட்ட வீரன், இலையெல்லாத்தையும் சின்னதாக்கிடுச்சாம். இப்போகூட இந்த மரத்தோட கிளையையோ...விறகையோ வீட்டுக்கு எடுத்துட்டுப் போனா அவங்க வீட்டுக்கு பாம்பு வரும். வந்து ஒண்ணும் பண்ணாது ஆனா... நீ பண்ணது தப்புன்னு சொல்றமாதிரி சமிக்ஞை காட்டிட்டு போகும்". என அம்மா சொன்னதும்.. எம்மா... இத ஏற்கனவே சின்ன வயசுல சொல்லியிருக்கீங்க... இப்பவும் அதையே சொல்றீங்க? என்றேன்.
ஆங்...நீ வளந்துட்டா கதைய மாத்திட முடியுமா? என்ன நடந்துதோ அதத்தான சொல்ல முடியும்..!? என்று என் தங்கத்தாய் கயற்கன்னி சிரித்தார். அது சரிதானே.. நாம் வளர்வதால் கதைகளும் உண்மைகளும் மாறிவிடுமா? இந்த கோவிலும், ஆலமரமும் என் குடும்பத்தில் எனக்கு பிடித்தமான ஒருவருக்கு நெருக்கமானவை. அவர் என்னுடைய பெரியப்பா. மணி என்று அழைக்கப்பட்ட சுப்பிரமணிய பெரியப்பா இந்த ஆலமரத்து நிழலை அளந்து பார்த்தவர். மாப்பிள்ளை வீரனுக்கும், அந்த கோவில் குளத்திற்கும், ஆலமரத்திற்கும் ஷேக்ஸ்பியரையும், ஷெல்லியையும், டால்ஸ்டாயையும், வேர்ஸ்வொர்த்தையும் அறிமுகப்படுத்தியவர்.
எம்.ஏ ஆங்கில இலக்கியம் படித்துவிட்டு பாரதிராஜா போலவோ, பாலச்சந்தர் போலவோ ஒரு இயக்குநராக வேண்டும் என்று கனா கண்டவர். சென்னைக்கு வந்து, சில உப்புமா கம்பெனிகளில் சிக்கி வாழ்க்கையை தொலைத்தார். பிறகு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற அவருக்கு குடல் புற்று நிரந்தர ஓய்வை சமீபத்தில் தந்தது. ஷேக்ஸ்பியரை சொல்லிக்கொடுத்த நன்றிக்காகவாவது மாப்பிள்ளை வீரன் அவரை கொஞ்ச காலம் பாதுகாத்திருக்கலாமே எனத் தோன்றியது. என்ன செய்ய.. நம் உடலில் இருக்கும் நோய்களை ஸ்கேன் செய்து கண்டுபிடிக்கும் பரமபிதா ஏசுவைப் போல சகல தொழில்நுட்பத்தையும் கையில் வைத்திருக்கும் டாக்டர் இல்லையே அந்த மாப்பிள்ளை வீரன்.
அந்த மணி பெரியப்பாதான் எனக்கு பாலோ கொய்லோவை அறிமுகப்படுத்தினார். Alchemist- ஐ கையில் கொடுத்து சாண்டியாகோவை அடையாளம் காட்டினார். வீரன் கோவில் ஆலமரக் காற்றில் பெரியப்பாவின் சுவாசப் பூச்சுக்கள் நிச்சயம் இருக்கும் என மனதுக்குள் சொல்லிக்கொண்டேன். இந்த பிரபஞ்சத்தின் சக்தி நம்மை சாவியாக்கி ஒரு பூட்டை திறக்கவைக்க முயலும்போது, அது முடியாமல் போனால் வேறு ஒரு சாவியைத் தேடும் என்பார் மணி பெரியப்பா. சினிமா பற்றி என்னுடைய எண்ணங்களை பகிர்ந்தபோது, நான் ஆசைப்பட்டது உன் மூலம் நடக்குமோ என சிரித்தார். அவரின் தங்கப்பல் புன்னகை இப்போதும் சிலிர்க்க வைக்கிறது.
வீரனுக்கு ஆராதனை எடுக்கும்போது "உன் பிரச்சனையெல்லாம் சரியாகனும்னு சாமிகிட்ட வேண்டிக்க" என்றது அம்மா. நான் சிரித்துக்கொண்டே...எல்லாரும் நல்லாருக்கணும்.. நல்லதே நடக்கணும் என மௌனித்தேன். மாப்பிள்ளை வீரன் புன்னகைத்து வழியனுப்பினார்.
Comments
Post a Comment