வாழ்வின் திறவுகோல் - மரணம்!
இப்போதெல்லாம் திருமண வீடுகளுக்குச் செல்வதிலும், பிறந்தநாள் கொண்டாட்டங்கள் போன்றவற்றிலும் அதிக ஈடுபாடு இல்லை. திருமண வீடுகளும் அரங்கங்களும் போலியான இன்பவியல் நாடகங்களை நடத்திக்கொண்டிருக்கின்றன என்பது மெல்ல புரிய ஆரம்பித்திருக்கிறது. கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிரென்று நடத்தப்படும் திருமணங்கள் மனித வாழ்வின் சந்தோஷத்தின் சாவியாக நம்பப்படுகிறது. ஆனால் உண்மையில் அதற்கு தலைகீழான நிகழ்வுகள் தான் அரங்கேறுகின்றன. திருமண வீடு, பிறந்தநாள், சடங்கு என்றாலே புன்னகையோடும், மன நிறைவோடும் மகிழ்ச்சியோடும் இருக்கவேண்டுமென நமக்கு கட்டளையிடப்பட்டிருக்கிறது. கடன் வாங்கி பெண்ணுக்குத் திருமணம் செய்யும் அப்பாவும், குறை சொல்லி நிகழ்வில் கலந்துகொள்ளும் உறவினர்களும் வலுக்கட்டாயமாக தாமே முன்வந்து மகிழ்ச்சியாக இருக்கும் மன நிலையை உருவாக்கிக்கொள்கின்றனர். அல்லது மகிழ்ச்சியாக இருப்பதுபோல் பாவனை செய்கின்றனர். அதே நேரத்தில் ஒரு மரணம் நிகழ்ந்த வீட்டை பாருங்கள். அங்கே சோகமும், அழுகுரலும், ஆர்ப்பாட்டமும் நிறைந்திருந்தாலும் அவற்றில் போலித்தனம் தென்படுவதில்லை. உண்மை மட்டுமே நிர்வாணமாய் நிற்கிறது. எதிரியே இறந்திர...